2009-03-21 12:22:44

திருத்தந்தை அங்கோலாவின் ஆயர்களைச் சந்திக்கிறார் .210309.


வத்திக்கான் தூதரக இல்லத்தில் உள்ள ஆலயத்தில் அங்கோலா மற்றும் சாண் தோமேயின் ஆயர்கள 25 பேர் திருத்தந்தையின் வருகைக்காகக் காத்திருந்தனர் .

திருத்தந்தையை பாசத்தோடு வரவேற்றார் சீஸ்ட் என அழைக்கப்படும் இந்த ஆயர்குழுவின் தலைவர், தலைநகர் லூவாண்டாவின் பேராயர் தமியாவோ பிராங்க்ளின் . திருத்தந்தையின் வருகை உணர்ச்சிவசமானது எனப் பேராயர் கூறினார் . முதல் கிறிஸ்தவச் சமூகத்தைப் போன்றது அங்கோலாவின் திருச்சபை எனப் பேராயர் தெரிவித்தார் . அங்கோலாவின் திருச்சபையைக் கட்டி எழுப்ப உழைக்கும் குருக்கள் , துறவறத்தார் , பல் வேறு திருச்சபை குழுக்களைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி பேராயர் திருத்தந்தையின் உரையைக் கேட்க ஆயர்கள் ஆவலோடு இருப்பதாகக் கூறி , திருத்தந்தையை மீண்டும் வரவேற்றார் பேராயர் தமியாவே பிராங்க்ளின்.



கர்தினால் தோ நாசிமெந்தோ மற்றும் அங்கோலா நாட்டின் ஆயர்களுக்கும் வாழ்த்துக்கூறி தம் உரையைத் தொடர்ந்தார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட். தூய பேதுருவின் வழித்தோன்றலுக்கு அங்கோலா கொடுத்திருக்கம் தூதரக இல்லம் அங்கோலாவின் திருச்சபைக்கும் கத்தோலிக்கத் திருச்சபைக்கும் உள்ள உறவைக் காட்டுவதாகத் தெரிவித்தார் திருத்தந்தை . திருச்சபையின் மக்களாக 500 ஆண்டுகளாக அங்கோலா மக்கள் இருந்துவருவதாகத் திருத்தந்தை தெரிவித்தார் . பல் வேறு கலாச்சாரங்களைக் கொண்டதாக – ஆப்பிரிக்க , யூத , ரோமானிய , போர்த்துக்கீசியக் கலாச்சாரங்களைக் கொண்டதாக அங்கோலா உள்ளது . இங்கு நற்செய்தியை அறிவிக்கும் பணியை நம்மிடம் ஆண்டவர் ஒப்படைத்துள்ளார் எனக்கூறி ஆயர்களின் சேவைக்குத் திருத்தந்தை நன்றி கூறினார் . அந்நாட்டு மக்கள் நலமாக வாழவேண்டும் என்பதைத் தாம் இடைவிடாது கவனத்தில் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார் . இன்றைய உலகில் மனிதன் மனம் போனபோக்கில் வாழும் நிலையில் நாம் மனிதராகப் பிறந்த கடவுளின் குமாரன் இயேசுவைப் பற்றிக்கொண்டு வாழ்கிறோம் என்றார் . உலகம் போகின்ற போக்கில் புதுப்புது மாதிரிகளைப் பின்பற்றாமல் கிறிஸ்துவோடு நெருக்கமான உறவில் அவரில் விசுவாசம் கொண்டு நாம் வாழ்கிறோம் எனத் தெரிவித்தார் திருத்தந்தை . இந்த நட்பு நன்மையையும் தீமையையும் பகுத்தறிய அளவுகோலாக இருக்கும் என்றார் .



ஆப்பிரிக்கத் திருச்சபை அங்குள்ள கலாச்சாரப் பாணியில் பண்பாட்டு மயமாக வேண்டும் எனத் திருத்தந்தை தெரிவித்தார் . இதற்குச் சமூகத் தொடர்புக் கருவிகள் உதவியாக இருக்கும் எனக்கூறிய திருத்தந்தை சமூக நிகழ்வுகளையும் , நிஜங்களையும் , பிரச்சனைகளையும் கிறிஸ்தவப் பார்வையோடு நோக்க தொலைத்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும் எனத் திருத்தந்தை அறிவுறுத்தினார் .



பல துன்பங்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர் நோக்கியிருக்கும் குடும்ப வாழ்வு , நற்செய்தியின் தாக்கத்தைப் பெற்று , பாதுகாக்கப்படவேண்டிய அவசியமிருப்பதாகத் தெரிவித்தார் . மனித மாண்பின் புனிதம் பற்றியும் , குடும்பம் என்ற அமைப்பின் பயன்பற்றியும் தெரிவித்து சமூகத்திலும் திருச்சபையிலும் குடும்பத்தின் பங்கு பற்றியும் இறைமக்களுக்குத் தெளிவு படுத்துமாறு திருத்தந்தை வேண்டிக்கொண்டார் . பொருளாதாரம் மற்றும் சட்டங்களின் உதவியோடு குடும்பங்களைப் பாதுகாத்து குழந்தை வளர்ப்புக்கு வழிசெய்ய வேண்டும் எனவும் ஆயர்களுக்கு திருத்தந்தை அறிவுறுத்தினார் .



துடிப்புமிக்க திருச்சபைக்காகவும் , சொந்த நாட்டிலிருந்தே இறைப்பணியாளர்கள் திருப்பணிக்கு வருவதையும் பாராட்டிய திருத்தந்தை இளம் குருக்களுக்கு நல்ல பயிற்சியை வழங்குமாறு அறிவுறுத்தினார் . தமது திருநிலைக்கு ஏற்றமுறையில் சவால்களைச் சந்திக்கும் புனித வாழ்வை வாழ அவர்கள் தயாராக வேண்டும் எனவும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார் .



தமக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை திருச்சபையின் மணவாளனாகிய கடவுளின் ஒரே திருமகனாகிய இயேசுவிடம் ஆயர்களுக்காக எந்நாளும் மன்றாடுவதாகக் கூறி அவர்களை மரியாவின் மாசற்ற இருதயத்தின் பாதுகாவலில் அடைக்கலமாகக் காணிக்கையாக்குவதாகச் செபித்தார் .உரையின் முடிவில் ஆயர்களுக்கும் திருப்பணியாளர்கள் அனைவருக்கும் இறைமக்களுக்கும் தமது அப்போஸ்தலிக்க ஆசியை வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.