2009-03-21 14:06:00

உரோம் கொலோசேயத்தில் திருத்தந்தை முன்னிலை வகிக்கும் சிலுவைப்பாதைக்கானத் தியானங்களை இந்தியப் பேராயர் ஒருவர் தயாரிக்கிறார்


மார்ச்21,2009. துன்புறும் கிறிஸ்தவர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் விதமாக, கடந்த சில ஆண்டுகளாகத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தான் முன்னின்று நடத்தும் புனித வெள்ளி சிலுவைப்பாதை பக்தி முயற்சித் தியானங்களையும் செபங்களையும் நசுக்கப்பட்ட திருச்சபைகளின் தலைவர்கள் தயாரிக்குமாறு அழைப்புவிடுத்து வருவதாக வத்திக்கான் அறிக்கை கூறுகிறது.

இதன் அடிப்படையில் இவ்வாண்டு உரோம் கொலோசேயத்தில் திருத்தந்தை முன்னிலை வகிக்கும் சிலுவைப்பாதைக்கானத் தியானங்களை இந்தியாவின் குவாஹாத்தி பேராயர் தாமஸ் மெனாம்பரம்பில் தயாரிக்குமாறு திருத்தந்தை கேட்டுள்ளதாக அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.

வருகிற ஏப்ரல் 10ம் தேதியன்று இடம்பெறும் இப்பக்தி முயற்சி தியானங்களை இந்தியாவில் நசுக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்களின் நெருக்கடி நிலைகள், இன்னும், சூடான், காங்கோ போன்ற நாடுகளில் உரிமைகளையும் மாண்பையும் இழந்துள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பேராயர் மெனாம்பரம்பில் தயாரித்து வருவதாக சார் செய்தி நிறுவனம் கூறியது.

அண்மை ஆண்டுகளாக வடகிழக்கு இந்தியாவில் ஏற்பட்டுள்ள இன மோதல்களைத் தீர்ப்பதற்கு, சலேசிய சபையைச் சேர்ந்த பேராயர் மெனாம்பரம்பில் முயற்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு புனித வெள்ளி சிலுவைப்பாதை பக்தி முயற்சித் தியானங்களை ஹாங்காங் கர்தினால் ஜோசப் சென் தயாரித்தார் என்பது கவனிக்கத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.