2009-03-21 12:28:19

அங்கோலாவில் திருத்தந்தையின் சனிக்கிழமை காலைத் திருப்பலி .210309


அங்கோலாவில் திருத்தந்தையின் சனிக்கிழமை காலைத் திருப்பலி .210309 .

சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 9.45 க்கு , இந்திய நேரம் பிற்பகல் 2.15 மணிக்கு தாம் தங்கியிருந்த வத்திக்கான் தூதரக மாளிகையிலிருந்து 5 கிமீட்டர் தொலைவிலிருந்த திருத்தூதர் பவுல் அடிகளாரின் தேவாலயத்துக்குத் திருப்பலி நிகழ்த்த திருத்தந்தை போப்மோபைல் என்னும் குண்டு துளைக்காத காரில் சென்றார் . அத்தேவாலயம் 1935 ல் கப்புச்சின் துறவற சபையினரால் கட்டி எழுப்பப்பட்டது . அங்கு 1982 ல் சலேசிய சபைத் துறவியர் பொறுப்பேற்றனர் . திருத்தந்தை 16 ஆம் பெனடிக்டின் வருகைக்காக அவ்வாலயம் அண்மையில் புதுப்பிக்கப்பட்டது . அவ்வாலயத்தில் ஒரே சமயத்தில் 1500 பேர் கூடியிருக்க முடியும் . அவ்வாலயத்தில் திருப்பலியில் பங்கேற்க வந்திருந்த ஆயர்கள் , குருக்கள் , துறவியர் , திருச்சபைத் திருப்பணியாளர்கள் ஆகியோருக்குத் திருப்பலி நிகழ்த்தினார் . திருப்பலி அங்கு காலை 10 மணிக்கு இந்திய நேரம் பிற்பகல் 2.30 க்குத் தொடங்கியது .



திருப்பலியின் தொடக்கத்தில் பேராயர் கபிரியேல் மிபிலிங்கி , திருத்தந்தையை வாழ்த்தி வரவேற்றார் .

திருப்பலியின்போது திருத்தந்தை இன்றைய லூக்கா நற்செய்தி அதிகாரம் 18 , திருவசனங்கள் 9 – 14 ல் உள்ள பகுதிக்கு விளக்கம் அளித்து மறையுரை வழங்கினார் . உவமையில் வரும் வரி வசூலிப்பவர் தம்மைப் பாவி என ஏற்றுக்கொண்டு பாவ மன்னிப்பு விழைந்ததால் மன்னிப்பாகிய அருளைப்பெற்றார் .

திருத்தூதர் பவுலின் பிறப்பு விழாவின் 2 ஆயிரமாவது ஆண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நாம் , அவர் பெயரால் எழுப்பப்பட்டுள்ள தேவாலயத்தில் இச்சமயம் இருக்கும் நாம் , திருத்தூதர் பவுல் திமோத்தேயுவுக்கு எழுதிய முதல் மடலில் பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார் . அந்தப் பாவிகளுள் முதன்மையான பாவி நான் என்கிறார் . வரலாற்றின் ஏடுகளில் இறை அருளால் தொடப்பட்டவர்கள் தொடர்ந்து வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதைக் காண்கிறோம் என்றார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . இந்த திருப்பயணத்தில் நம்மையும் பங்கேற்க அழைத்துள்ள கடவுளுக்கு நன்றி கூறி , கிறிஸ்துவின் பின்னே நாமும் செல்வோம் . கிறிஸ்துவின் ஒளியைப் பெறுவோம் எனவும் திருத்தந்தை தெரிவித்தார் .



சகோதர , சகோதரிகளே என் உடன் உழைப்பாளிகளாகிய உங்களோடு இருப்பதில் நான் மிக்க மகிழ்ச்சியுறுகிறேன் . துன்புறும் மக்களுக்கு ஆறுதலாக இருங்கள் . என்னை வரவேற்ற பேராயர் கபிரியேல் மிபிலிங்கி உங்கள் எதிர்பார்ப்புக்களையும் , நீங்கள் சவால்களோடு போராடுவது பற்றியும் தெரிவித்தார் . இதயம் நிறைந்த நன்றியோடும் , நம்பிக்கையோடும் உங்கள் அனைவருக்கும் , உங்களைச் சார்ந்தவர்களுக்கும் நான் வாழ்த்துக்கூறுகிறேன் என்றார் திருத்தந்தை .

நாம் துரிதமாக ஆண்டவர் இயேசுவைப் பின் தொடர்வோம் . அவர் உண்மையான மனிதரும் மெய்யான கடவுளுமாவார் . தமாஸ்கு செல்லும்போது இயேசுவைச் சந்தித்த பவுல் அடிகளார் தம்முடைய முந்தைய வாழ்வுக்கு மரித்து , இயேசுவில் புது வாழ்வைக் கண்டது போல நாமும் கிறிஸ்துவில் புதிய வாழ்வைப் பெறுவோம் எனத் திருத்தந்தை தமது மறையுரையில் அனைவரையும் ஊக்கப்படுத்தினார் .

நமக்கு முன் சென்றிருக்கும் வீரமிக்க புனிதர்கள் நடந்த பாதையில் நாமும் செல்வோம் . பல்வேறு துயரங்களால் துன்புறும் மக்களுக்கு கிறி்ஸ்துவின் அருளை வழங்கி அவர்களுடைய சாந்திக்கும் , மகிழ்ச்சிக்கும் வழிகாண எங்கும் சென்று நற்செய்தியின் தூதர்களாக இருப்போம் எனக்கூறி தம் மறையுரையை முடித்தார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .



திருப்பலி முடிந்ததும் சனிக்கிழமை நண்பகல் 12 .30 , இந்திய நேரம் மாலை 5.00 மணிக்குத் திருத்தந்தை வத்திக்கான் தூதரக இல்லத்துக்குத் திரும்பினார் . சனிக்கிழமை மாலை உள்ளூர் நேரம் 4.30 மணிக்கு , இந்திய நேரம் இரவு 9.00 மணிக்குத் லூவாண்டாவில் உள்ள இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான தென்னந்தோப்பு என்ற அர்த்தம் கொண்ட தோஸ் கோக்கைரோஸ் விளையாட்டுத் திடலில் திருத்தந்தை இளைஞர்களைச் சந்திக்க உள்ளார் . இஞ்ஞாயிறு காலை உள்ளூர் நேரம் 10 மணி , இந்திய நேரம் பிற்பகல் 2.30 க்கு அட்லாண்டிக் கடல் நோக்கியிருக்கும் சிமாங்கோலாத் திடலில் ஆயர்களோடு இணைந்து திருப்பலி நிகழ்த்த உள்ளார் .








All the contents on this site are copyrighted ©.