2009-03-21 12:20:12

அங்கோலாவின் குடியரசு மாளிகையில் திருத்தந்தை .210309 .


அங்கோலா நாட்டு குடியரசுத்தலைவருடைய மாளிகை சித்தா தே ஆல்த்தா அரண்மனை என்றும் தோ போவோ அரண்மனை என்றும் அழைக்கப்படுகிறது . முற்காலத்தில் இம்மாளிகை போர்த்துக்கல் நாட்டு ஆளுநர்களின் மாளிகையாக இருந்தது . இம்மாளிகை நான்கு நூற்றாண்டு வரலாற்றைக் கொண்டது . கடந்த 1999 ஆம் ஆண்டு இம்மாளிகை புதுப்பிக்கப்பட்டது . தற்பொழுது இம்மாளிகை அங்கோலாவில் சுற்றுலாப்பயணிகளின் கண்களுக்கு விருந்தாக இருக்கிறது . திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்தான் அங்கு உரை நிகழ்த்தும் முதல் பாப்பிறையாவார் .



திருத்தந்தையின் அங்கோலா நாட்டுக்கான வருகை அமைதியைத் தரும் ஆசீர்வாதம் என அந்நாட்டின் காரித்தாஸ் தலைவர் சகோதரி மர்லின் வில்ட்னர் கூறியுள்ளார் . அங்கோலாவை அகில உலகத் திருச்சபை மறக்கவில்லை என்பதைக்காட்டுகிறது என்றார் . திருத்தந்தையின் வருகைக்காக மக்கள் பல்வேறு வழிகளில் தங்களையே ஆயப்படுத்திக்கொண்டார்கள் .



திருத்தந்தையை வரவேற்றுப்பேசிய குடியரசுத்தலைவர் அங்கோலா நாட்டு மக்கள் சார்பாக திருத்தந்தையையும் அவரோடு வந்திருப்பவர்களையும் மகிழ்ச்சியோடு வரவேற்று திருத்தந்தை அந்நாட்டில் வத்திக்கானில் இருப்பது போன்றே உணரவேண்டும் எனக்கூறினார் . திருத்தந்தையின் வருகைக்காக மிக்க ஆவலோடு மக்கள் காத்திருந்ததாக ஜோஸ் தோஸ் சாந்தோஸ் தெரிவித்தார் .



அங்கோலா நாட்டு அரசியல் தலைவர்களுக்கும் அகில உலக அங்கோலா நாட்டுக்கான தூதர்களுக்கும் குடியரசுத் தலைவர் மாளிகையில் வெள்ளிக்கிழமை மாலை திருத்தந்தை உரை நிகழ்த்தியபோது குடும்ப வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் . கருச்சிதைவைக் கண்டித்தார் . ஏழ்மையாலும் , நோய்களாலும் போராலும் பாதிக்கப்பட்டுள்ள அங்கோலா நாட்டு மக்களுக்காகப் பரிந்து பேசினார் .

முக்கியமாக மகளிரும் , சிறுமியரும் ஆதரவின்றி இருப்பதாகவும் , பாலியல் வன்முறைகளால் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் திருத்தந்தை தெரிவித்தார் . அதே சமயம் சில நிறுவனங்கள் குடும்ப நலத்தைக் காப்பதாகக் கூறி கருச்சிதைவை உண்டாக்குவதாகக் கூறினார் .

இந்த உரைக்கு முன்னர் திருத்தந்தையை அங்கோலா நாட்டுக் குடியரசுத்தலைவர் ஜோஸ் எடுவர்டோ தோஸ் சாண்டோஸ் லூவாண்டாவில் உள்ள அவரது மாளிகையில் வரவேற்றார் . குடியரசுத்தலைவரோடு தனியாகச் சந்தித்துப் பேசிய பிறகு திருத்தந்தை பல நாட்டுத்தூதர்களும் ஆயர்களும் முக்கியத் தலைவர்களும் குழுமியிருந்த மண்டபத்துக்கு வந்தார் . அங்குதான் தமது உரையை வழங்கினார் . வத்திக்கான் கொடியும் அங்கோலா நாட்டுக் கொடியும் பறந்து கொண்டிருந்த சிறிய மேடையிலிருந்து திருத்தந்தை பேசினார் .



உள்நாட்டுக்குழப்பத்துக்குப் பிறகு வளர்ந்து வரும் அங்கோலா நாட்டில் ஏழ்மையும் , வேலையில்லாமையும் , இடம் பெயர்தலும் பாதிப்பைத் தருவதாகத் தெரிவித்தார் . அங்குள்ள திருச்சபையின் உறுப்பினர்கள் திறம்பட செயல்பட்டு மகளிருக்கு உதவிவருவதாகத் தெரிவித்தார் . மகளிர் அங்குக் கடத்தப்பட்டு கற்புக்கு எதிரான குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் வருத்தம் தெரிவித்தார் . மனைவியரை அடித்துத் துன்புறுத்தும் குற்றங்கள் ஆப்பிரிக்காவில் மலிந்து கிடப்பதாகவும் தெரிவித்தார் . எச் ஐ வி நோயால் துன்புறுவோருக்கும் குடும்பங்களுக்கும் கத்தோலிக்க சபை தொடர்ந்து உதவிகளை அளிக்கும் எனவும் திருத்தந்தை தெரிவித்தார் .



ஆப்பிரிக்கா நம்பிக்கையின் கண்டமாக மாறவேண்டும் என வேண்டுகோள் வைத்தார் . அங்கு பேராசையும் வன்முறையும் அமைதியின்மையும் ஓயவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் . இலஞ்சத்தை ஒழிக்க நிலையான மனமாற்றம் தேவை எனத் தெரிவித்தார் . நாட்டில் பொதுப்பணியில் இருப்போரையும் , தலைவர்களையும் மனிதாபிமான முறையில் மக்களுக்குச் சேவை செய்யுமாறு வேண்டிக்கொண்டார் . செல்வந்த நாடுகள் ஆப்பிரிக்காவுக்கு உதவிடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை , அந்நாட்டை கட்டி எழுப்ப உதவியாக இருக்கும் ஆசிரியர்கள் , பொதுநலத் தொண்டர்கள் மருத்துவ உதவி புரிவோர் ஆகியோரைப் பாராட்டினார்.



தம் உரையின் முடிவில் திருத்தந்தை அங்கோலாவின் குடியரசுத்தலைவரின் வரவேற்புக்குத் தம் நன்றியைத் தெரிவித்தார் . அவருக்கும் , குடும்பத்தினருக்கும் மகத்தான ஆப்பிரிக்காவுக்கும் தம் மன்றாட்டுக்களைக் காணிக்கையாக்கி கடவுளுடைய ஆசியை விழைந்தார் .



திருத்தந்தையின் உரையை அங்கோலாவின் தொலைக்காட்சி ஒளிபரப்புச் செய்தது . திருத்தந்தைக்கு மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்புக் கொடுத்தார்கள் . பாப்பா அமிகோ , அங்கோலா எஸ்தா கொண்தீகோ , பாப்பிறை நம் நண்பர் , அங்கோலா உம்மோடு என ஆர்ப்பரித்தனர் .



குடியரசுத்தலைவரின் மாளிகையிலிருந்து 5 கிமீட்டர் தொலைவில் உள்ள அங்கோலா நாட்டுக்கான வத்திக்கான் தூதரக இல்லத்துக்குத் திருத்தந்தை காரில் பயணமானார் .








All the contents on this site are copyrighted ©.