2009-03-20 14:24:28

யவுந்தே கர்தினால் லெஜெர் ஊனமுற்றோர் மையத்தில் திருத்தந்தை : ஓர் ஆறுதல் செயற்பாடு, ஒரு கருணைப்பார்வை, ஒரு புன்னகை ஆயிரம் வார்த்தைகளைவிட அதிகம் சாதிக்க முடியும்


மார்ச்20,2009. இந்த ஆப்ரிக்கக் கண்டத்தில் எய்ட்ஸ், மலேரியா, ஷயரோகம் உட்பட பல்வேறு நோய்களால் உடலளவிலும் மனத்தளவிலும் துன்பங்களை அனுபவிப்போரையும் போர் மற்றும் வன்முறைகளின் தழும்புகளைக் கொண்டிருப்போரையும் இந்நேரத்தில் சிறப்பான விதத்தில் நினைவுகூர்கிறேன் என்று யவுந்தே கர்தினால் லெஜெர் ஊனமுற்றோர் மையத்தில் உரையாற்றினார் திருத்தந்தை.

நோயாளிகளிடையே தலத்திருச்சபை ஆற்றும் சிறப்பான பணிகள் நான் அறிந்ததே. நம் உடல்நிலை மோசமடையும் போது, துன்பங்கள் அதிகரிக்கும் போது பலர் தங்கள் வாழ்வில் கடவுள் இருக்கின்றாரா என்றுகூட சந்தேகத்தை எழுப்பக்கூடும். பிறரின் துன்பங்களின் முன்னால் நாம் பலவீனர்களாக, சரியான வார்த்தைகளின்றித் தவிக்கிறோம். ஆம். மதிப்புடன்கூடிய, கருணைநிறைந்த மௌனம், செபத்துடன்கூடிய பிரசன்னம், ஓர் ஆறுதல் செயற்பாடு, ஒரு கருணைப்பார்வை, ஒரு புன்னகை ஆயிரம் வார்த்தைகளைவிட அதிகம் சாதிக்க முடியும்.

இயேசுவின் திருச்சிலுவைப்பாதையில் சீரேன் ஊரானாகிய சீமோனைப் பாருங்கள். உங்கள் கண்டத்தைச் சேர்ந்த உங்கள் ஆப்ரிக்க மகன்களில் ஒருவரான அவர் இயேசுவின் திருச்சிலுவையைச் சுமக்கிறார். தன் மீட்பரின் துன்பத்தில் பங்கெடுக்கிறேன் என்பது அந்நேரத்தில் அவருக்குத் தெரியாதிருந்தது. ஆனால் இயேசு உயிர்த்த பின் அந்த உண்மை அவருக்குத் தெரிந்திருக்கும்.

ஆம். நாம் துன்பங்களை அனுபவிக்கும் போது இயேசு தன் சிலுவையை சுமக்க உதவுகிறோம். நம் துன்பங்களும் சிலுவைகளும் இறுதி வார்த்தையல்ல. இயேசுவின் இறுதி வெற்றியே அத்துன்பங்களுக்கான அர்த்தத்தை நமக்கு வெளிப்படுத்தும்.

எத்தனையோ புனிதர் இவ்வுண்மையை வாழ்நதுகாட்டிச் சென்றுள்ளார்கள். புனிதை அவிலா தெரேசாவை இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

இங்கு நோயாளிகளிடையே பணிபுரிவோர் நான் நோயுற்றிருந்தேன் என்னைக் காண வந்தீர்கள் என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு இயைந்த வகையில் செயல்படுகிறீர்கள் எனப்பாராட்டிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் செபம் மற்றும் அக்கறைக்கான உறுதியை எடுத்துரைத்து உரையை நிறைவு செய்தார்.

 








All the contents on this site are copyrighted ©.