2009-03-20 14:23:02

ஆப்ரிக்காவைப் பாதித்திருக்கும் மனிதாபிமானமற்ற நிலைகளும் ஒடுக்குமுறைகளும் மாற்ற முடியாதவை அல்ல, திருத்தந்தை


மார்ச்20,2009. எண்ணிக்கையில் மட்டுமல்ல, தரஅளவிலும் ஆப்ரிக்கத் திருச்சபையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஆப்ரிக்காவுக்கானச் சிறப்பு ஆயர் மாமன்றம் ஆய்வுசெய்ய வேண்டிய சவால்கள் குறித்து பரிந்துரைக்கப்பட்டது மகிழ்ச்சி தருவதாக உள்ளது. இவ்வாறு ஆப்ரிக்காவுக்கான இரண்டாவது சிறப்பு ஆயர் மன்றத்தின் ஆலோசனைக் குழுவிடம் கூறினார் திருத்தந்தை. மேலும் கூறினார்.

குழந்தைப் பருவத்தின் போது ஆப்ரிக்காவுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார். திருக்குடும்பம் தப்பிப்போன போது அடைக்கலம் கொடுத்தது ஆப்ரிக்காவே. தன் இருப்பு மூலம் இக்கண்டத்தை ஆசீர்வதித்துள்ளார் இயேசு. ஆப்ரிக்கர்கள் இது குறித்து பெருமைப்படட்டும்.

இவ்வாறு இயேசுவின் பிரசன்னத்துடன் துவங்கிய விதைக்கு உயிரூட்ட அலெக்ஸாந்திரியா வந்தவர் புனித மாற்கு. இதன்வழி வடஆப்ரிக்காவில் பரவிய நற்செய்தி பல்வேறு புனிதர்களையும் மறைசாட்சிகளையும் இறையியலாளர்களையும் உருவாக்கியது. அதன்பின் இந்தியாவுக்குப் பாதை தேடிய ஐரோப்பியர்களால் 15ம், 16ம் நூற்றாண்டுகளில் சஹாராவையடுத்த நாடுகள் நற்செய்தியை பெற்றன. 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் மறைபோதகர்கள் இப்பகுதிக்கு வந்தனர். ஆப்ரிக்காவின் பொதுநிலை விசுவாசிகள் பலர் நற்செய்தி அறிவிப்பில் சிறப்புப் பங்காற்றியுள்ளனர்.

ஆயர் மாமன்றத்தின் ஆப்ரிக்காவுக்கான இரண்டாவது சிறப்பு அவை விவாதிக்கவுள்ள தலைப்புக்களான ஒப்புரவு, நீதி மற்றும் அமைதி குறித்தும் எடுத்துரைத்தார் பாப்பிறை.

வன்முறையாலும் போராலும் பகைமையாலும் துன்புறும் ஆப்ரிக்காவுக்கு உடனடியாக ஒப்புரவு தேவைப்படுகிறது. நீதியின் முதல் கடமை என்பது ஏனையவர்களை சகோதர சகோதரிகளாக ஏற்றுக்கொள்வது என்பதை நாம் உணர வேண்டும். ஆப்ரிக்காவைப் பாதித்திருக்கும் மனிதாபிமானமற்ற நிலைகளும் ஒடுக்குமுறைகளும் மாற்ற முடியாதவை அல்ல. திருநற்கருணையே அமைதியில் ஒப்புரவுக்கான ஐக்கியத்தின் ஆதாரம். எந்த ஓர் இனவேறுபாடும் மத மற்றும் பாலின வேறுபாடும் கலாச்சார வேறுபாடும் மோதல்களுக்கானக் காரணமாகக் கூடாது என்ற திருத்தந்தை, உலகிற்கு ஒளியாகவும் உப்பாகவும் செயல்படுங்கள் என்ற அழைப்புடன் உரையை நிறைவு செய்தார்.








All the contents on this site are copyrighted ©.