2009-03-19 14:58:00

காமரூன் தலைநகர் யவுந்தேயில் திருத்தந்தை


மார்ச் 19,2009. அன்பர்களே, மார்ச் 19, இவ்வியாழன் புனித வளனின் விழா. ஜோசப் ராட்சிங்கர் என்ற இயற்பெயரைக் கொண்ட நம் திருத்தந்தை 16ம் பெனடிக்டின நாம விழா. முதலில் நம் திருத்தந்தைக்கு அன்பும் செபமும் கலந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.

மேற்கு ஆப்ரிக்க நாடான காமரூன், உள்நாட்டுச் சண்டைகளைச் சந்திக்காத ஓர் அமைதியான நாடு. 200க்கும் மேற்பட்ட இனக்குழுக்களும் கிறிஸ்தவரும் முஸ்லீம்களும் பாரம்பரிய மதத்தவரும் நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வரும் நாடும் இது. எண்ணெய்யும் தாதுவளமும் நிறைந்திருந்தாலும் இன்னும் பலர் கடும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். இந்நாட்டின் தலைநகர் யவுந்தேயில் கடந்த செவ்வாய் முதல் திருப்பயணம் மேற்கொண்டு வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தனது முதல் உரையிலே அந்நாட்டைப் பாராட்டியுள்ளார். அதேசமயம் திருச்சபை ஏழைகளுக்கு உதவுமாறு இப்புதனன்று அந்நாட்டு ஆயர்களிடம் கூறினார். மேலும் இப்புதன் மாலை உள்ளூர் நேரம் 4 மணிக்கு, அதாவது இந்திய நேரம் இரவு 8.30 மணிக்கு அந்நாட்டு குருக்கள், இருபால் துறவிகள், குருத்துவ மாணவர்கள், தியாக்கோன்கள், பக்த சபையினர் மற்றும் பிற கிறிஸ்தவ சபையின் பிரதிநிதிகளைச் சந்திக்கச் சென்றார். யவுந்தே திருப்பீடத் தூதரகத்திலிருந்து அவர் சென்ற வழியெல்லாம் திருநாள் கூட்டம் போல மக்கள் கூடி நின்று திருத்தந்தையை மகிழ்வித்தனர். மரி ரெய்ன் தெ அப்போத்ரெஸ் பசிலிக்காவில் மாலை திருவழிபாட்டைத் தொடங்கினார் திருத்தந்தை.

ஆப்ரிக்காவிற்கான இப்பயணத்தில் திருத்தந்தை நிகழ்த்திய இந்த முதல் திருவழிபாட்டில் பசிலிக்கா நிறைந்திருந்தது, இவ்வழிபாட்டில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசிய பொதுநிலை விசுவாசி ஒருவர், ஆப்ரிக்காவுக்கான இரண்டாவது சிறப்பு ஆயர் மன்றத்திற்கான பணித் தொகுப்பை காமரூனில் திருத்தந்தை வெளியிடுவதற்கு நன்றியும் தெரிவித்தார். புனித வளன் பெருவிழாவின் முந்தைய நாள் மாலை திருவழிபாட்டில் ஆற்றிய மறையுரையில் மரியின் கணவர் வளன் பற்றி எடுத்துரைத்தார்.

அனைவருக்கும் தமது ஆசீரை வழங்கி மீண்டும் திருப்பீடத் தூதரகம் சென்று இரவு உணவருந்தினார். இத்துடன் புதன்தின நிகழ்வுகள் முற்றுப் பெற்றன.

காமரூன் நாட்டில் ஏறத்தாழ 22 விழுக்காட்டினர் முஸ்லீம்கள். கத்தோலிக்கர் ஏறத்தாழ 27விழுக்காட்டினர். இவ்வியாழன் காலை முதல் நிகழ்ச்சியாக யவுந்தே திருப்பீடத் தூதரகத்தில் முஸ்லீம் சமூகத்தின் 22 பிரதிநிதிகளைச் சந்தித்தார் திருத்தந்தை.. முதலில் அமது பெலோ என்பவர் அனைவர் சார்பாக திருத்தந்தையை வாழ்த்திப் பேசினார்.

பின்னர் திருத்தந்தையும் சிறிய உரையாற்றினார்.

திருத்தந்தையே, நீவீர் தனியாக இல்லை என்று இச்சந்திப்பில் முஸ்லீம் சமயப் பிரதிநிதிகள் திருத்தந்தையிடம் ஆறுதலாகக் கூறியதாகவும் இச்சந்திப்பு நட்புறவிலும் இதமாகவும் இடம் பெற்றதாகவும் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருட்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார். மேலும் வெளிநாட்டவர் பெரும்பாலும் அமைதியின் செய்தியோடு வருவதால் நாம் அவர்களை நன்கு வரவேற்க வேண்டும். எனவே முஸ்லீம்களுக்குத் திருத்தந்தையின் வருகை ஓர் ஆசீர்வாதம் என்று யவுந்தேயிலுள்ள பெரிய முஸ்லீம் குரு ஷேக் இப்ராஹிம் மவுசா கூறியிருக்கிறார்.

இந்தச் சந்திப்பை முடித்து திறந்த காரில் அமது அகிதுஜோ விளையாட்டு அரங்கம் சென்றார் திருத்தந்தை. அமது அகிதுஜோ என்பவர். காமரூனின் முதல் அரசுத் தலைவராவார். திருத்தந்தை அவ்வரங்கத்தில் நிகழ்த்தும் திருப்பலியில் கலந்து கொள்வதற்காக ஏறத்தாழ அறுபதாயிரம் பேர் காத்திருந்தனர். அரங்கம் ஐம்பதாயிரம் பேர் அமரக்கூடிய இடமாக இருந்ததால் அதற்கு வெளியேயும் ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருந்தனர். பாப்பிறையின் கார் அங்கு வலம் வந்த போது மக்கள் கரகோசம் எழுப்பி திருத்தந்தையை வரவேற்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. நூற்றுக்கணக்கான பாடகர்கள் வெள்ளை நிறத்தாலான ஆப்ரிக்கக் கலாச்சார மேலங்கி அணிந்து நின்று அந்நாட்டு இசைக்கருவிகளை இசைத்துப் பாடியது கேட்பதற்கு இரம்மியமாக இருந்தது.

காமரூனை 26 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் அரசுத்தலைவர் பவுல் பியா அவரது மனைவி ஷாந்தாலும் இன்னும் நூற்றுக்கணக்கான குருக்களும் கன்னியரும் இத்திருப்பலியில் கலந்து கொண்டனர். யவுந்தே பேராயர் திருத்தந்தையை வாழ்த்திப் பேசிய பின்னர் திருப்பலி ஆரம்பமானது. பல மொழிகளில் இடம் பெற்ற இத்திருப்பலியில் மறையுரையும் நிகழ்த்தினார் திருத்தந்தை.

இத்திருப்பலியின் இறுதியில் உலக ஆயர் மன்றப் பொதுச் செயலர் பேராயர் நிக்கோலா எத்தேரோவிச் நன்றி தெரிவித்துப் பேசினார். திருத்தந்தையும் ஆயர் மன்றத் தொகுப்பு ஏட்டை அதிகாரப்பூர்வமாக வழஙகும் உரையையும் நிகழ்த்தினார்.

இறுதியில், ஆப்ரிக்காவுக்கான இரண்டாவது சிறப்பு ஆயர் மன்றத்தில் விவாதிக்கப்பட இருக்கும் தொகுப்பு ஏட்டையும் திருத்தந்தை வழங்கினார். இம்மன்றமானது வத்திக்கானில் வருகிற அக்டோபர் 4 முதல் 25 வரை நடைபெறவிருக்கின்றது. இத்திருப்பலியும் இந்நிகழ்வையொட்டியே நிகழ்த்தப்பட்டது.

இவ்விழாத் திருப்பலியை முடித்து அனைவருக்கும் தமது அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார். பின்னர் திறந்த காரில் 8 கிலோ மீட்டர் தூரம் சென்று திருப்பீடத் தூதரகத்தை அடைந்து மதிய உணவு அருந்தினார். மாலையில் கர்தினால் பவுல் எமில் லெஜெர் ஊனமுற்றோர் மையம் சென்று உரையாற்றுவது, ஆப்ரிக்காவுக்கான இரண்டாவது சிறப்பு ஆயர் மன்றத்தின் ஆலோசனைக் குழுவினரைச் சந்தித்து உரையாற்றுவது பயணத் திட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

உண்மையான ஒளியாம் இயேசுவை உலகுக்குத் தந்த ஆப்ரிக்காவின் பாதுகாவலியாம் புனித கன்னிமரியே, ஆப்ரிக்காவுக்கான இரண்டாவது சிறப்பு ஆயர் மன்றத்திற்கானத் தயாரிப்புக்களையும் அதன் கனிகளையும் உம்மிடம் அர்ப்பணிக்கிறோம். அமைதியின் அரசியே எமக்காக மன்றாடும் என்று செபித்த திருத்தந்தையோடு நாமும் சேர்ந்து செபிப்போம். ஒப்புரவு நீதி அமைதி ஆகியவற்றைக் கட்டி எழுப்புவதற்கான திருத்தந்தையின் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துவோம்.








All the contents on this site are copyrighted ©.