2009-03-19 14:49:35

ஆப்ரிக்கா நம்பிக்கையின் கண்டமாக மாற இயலும், திருத்தந்தை


மார்ச்19,2009. புனித யோசேப்பின் திருவிழாவான இன்று அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். அதே பெயரைத் தாங்கியுள்ள நான் புனித யோசேப்பின் பெயரால் செயல்படும் பங்குத்தளங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு என் வாழ்த்துக்களை வழங்குகிறேன் என மறையுரையைத் துவக்கினார் திருத்தந்தை.

இயேசுவின் குழந்தைப் பருவக் காலத்தில் புனித யோசேப்பு எவ்வாறு இயேசுவையும் திருக்குடும்பத்தையும் பாதுகாத்தாரோ அவ்வாறு இறைத்தந்தையும் திருச்சபையைக் காத்து வருகிறார்.

உன் மனைவி மரியாவை ஏற்றுக் கொள்ள அஞ்ச வேண்டாம் என வானதூதர் புனித யோசேப்பை நோக்கிக் கூறிய வார்த்தைகளை புனித மத்தேயு தனது நற்செய்தியில் சுட்டிக் காட்டுவதே இறைவார்த்தையில் புனித யோசேப்பு கொண்டிருந்த அதே அன்புடன்கூடிய நம்பிக்கை உறுதிப்பாடு, நமக்கும் இருக்க வேண்டும் என்பதற்கே.

இவ்வேளையில் நான் குடும்பங்களின் தாய் தந்தையரை நினைவுகூர்கிறேன். பெற்றோர் என்பவர்கள் எப்போதும் தங்கள் பிள்ளைகளுக்கு உயர்வானதையே வழங்குகின்றனர். அவர்கள் வாழ்வில் வெற்றி பெற வேண்டுமென ஆவல் கொள்கின்றனர். அன்புப் பெற்றோரே, கடவுளில் உங்களுக்கு நம்பிக்கை உறுதிப்பாடு உள்ளதா? இறைவனுக்கான மதிப்புடனும் அன்புடனும் வாழ உங்கள் குழந்தைகளுக்கு உதவும் வண்ணம் ஆன்மீக மற்றும் மனிதகுல மதிப்பீடுகளை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்ற இறை எதிர்பார்ப்பை ஏற்றுக்கொள்கிறீர்களா? உலகாயுதப்போக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏனையோரைக் குறித்து கவலைப்படாத இன்றைய உலகில் நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்.

வாழ்வின் உண்மை ஆசிரியரான இறைவனைக் குறித்து முக்கியத்துவம் வழங்கவில்லையெனில் நம்மை நாமே இக்கட்டான சூழலில் நிறுத்துவதாகும். பொய்யான கொள்கைகள் மற்றும் சுயநல போக்குகளுக்கு அடிமையாகாதீர்கள். கடவுளை நம்புங்கள். அவரே உங்கள் ஏக்கங்களை நிறைவுசெய்யவுள்ளவர். கிறிஸ்து ஒருவரே வாழ்வின் வழி.

தம்பதியருக்கான உளவலிமையைத் தரவல்லவர் கடவுள் ஒருவரே. ஏனைய இடங்களைப் போல் ஆப்ரிக்காவிலும் குடும்பங்கள் துன்பகரமான சூழலை எதிர்நோக்கி நிற்கின்றன. குடிபெயர்தல், வேலைவாய்ப்பின்மை, நகர்மயமாதலால் பூர்வீகங்களை விட்டுச் செல்லுதல் போன்ற பல காரணங்களால் குடும்பங்களில் பிரச்சனைகள் அதிகரித்துள்ளன.

இவையெல்லாம் மாற்றியமைக்க முடியாதவைகளா? முதலில் வாழ்வு என்பதை இறைவனின் கொடை என ஏற்றுக் கொள்ள நாம் முன்வர வேண்டும். ஆப்ரிக்கப் பாரம்பரியமும் புனித நூல்களும் குழந்தையை கொடை என்றே அழைக்கின்றன. இறைவனின் சாயலில் மனிதன் படைக்கப்பட்டான் என்பதை அனைத்து மனிதரும் கண்டு ஏற்க வேண்டிய நேரமிது. அனைவரும் வாழப் பிறந்தவர்கள். சாவு என்பது வாழ்வை வெற்றி கொள்ள அனுமதியாதீர்கள்.

ஆப்ரிக்கா நம்பிக்கையின் கண்டமாக மாற இயலும். இறைத்திட்டத்தில் நமக்கென ஒரு பங்கு உள்ளது. மனத்தளர்ச்சியோ ஏமாற்றமோ பகைமையோ உங்களை ஆட்கொள்ளும் போது புனித யோசேப்பை நினையுங்கள். திருச்சபையை அன்பு செய்ய அஞ்சாதீர்கள். தந்தையர்கள் புனித யோசேப்பை எடுத்துக்காட்டாகக் கொள்ளட்டும். இப்புனிதரைப் போல மனைவியரை மதித்து அன்பு செய்யுங்கள். இளையோரே உங்கள் வாழ்வின் சவால்களைத் துணிவுடன் எதிர்கொள்ளுங்கள். ஏழ்மையால் கைவிடப்பட்ட மற்றும் தவறாக நடத்தப்பட்ட குழந்தைகளே, கடவுள் உங்களை அன்பு செய்கிறார். உங்களை அவர் மறந்துவிடவில்லை என்றஉ சொல்லி அனைவரையும் வாழ்த்தி ஆசீர்வதித்து இம்மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.