2009-03-18 15:11:40

திருத்தந்தையின் ஆப்ரிக்காவுக்கான முதல் திருப்பயணம் - காமரூனில் திருத்தந்தை


மார்ச்18,2009. ஆப்ரிக்கக் கண்டத்தின் காமரூன் நாட்டில் நேற்று மாலை உள்ளூர் நேரம் நான்கு மணிக்கு அதாவது இந்திய நேரம் இரவு 8.30 மணிக்கு திருத்தந்தையின் திருப்பயணம் துவங்கியது. அந்நாட்டிற்கானத் திருப்பீடத் தூதுவர் பேராயர் எலிசேயோ அந்தோணியோ அரியோத்தி, யவுந்தே பேராயர் சிமியோன் விக்டர் டோநி பாக்கோட் மற்றும் திருச்சபை அதிகாரிகளும் அரசுத்தலைவர் பவுல் பியா மற்றும் பிற அரசு அதிகாரிகளும் முன்வரிசையில் வரவேற்ற போது அங்கு குழுமியிருந்த மக்கள் கரகோசம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த நாடு பலகாலமாகத் தன்னைத் தயாரித்து வந்துள்ளது. முதன்முறையாக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆப்ரிக்கக் கண்டத்திற்கு வருவது அதிலும் குறிப்பாகத் தங்களது காமரூன் நாட்டிற்கு வருவதைப் பெருமையாகக் கருதும் இம்மக்கள் தங்களை இதற்கென எவ்வாறு தயாரித்து வந்தார்கள் என்பதை அந்நாட்டில் மறைப்பணியாற்றும் தமிழக அருட்சகோதரி ஜெயாவைத் தொடர்பு கொண்டோம்.

RealAudioMP3 இத்தகைய எதிர்பார்ப்புகளுடன் வரவேற்கப்பட்ட திருத்தந்தை 16ம் பெனடிக்டை முதலில் வாழ்த்திப் பேசினார் அரசுத்தலைவர் பவுல் பியா.

ஆப்ரிக்காவுக்கான ஆயர் மன்றத்தின் கருப்பொருளான, ஒப்புரவு, நீதி மற்றும் அமைதிக்கான திருச்சபை பணியை” தனது அரசும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்ற அவர், அரசியல் சமூக விரோத மனப்பான்மைகளாலும் இனமோதல்களாலும் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்கக் கண்டத்தில் காமரூன் நாடு சகிப்புத்தன்மைக்கும் ஒருவர் மற்றவர் மீதான மதிப்புக்கும் உழைத்து வருகிறது என்றார். பின்னர் திருத்தந்தையும் அந்நாட்டுக்கான தனது முதல் உரையை வழங்கினார்.

இவ்வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் வத்திக்கான் நாட்டு தலைவர் என்ற முறையில் இராணுவ அணிவகுப்பு மரியாதையைப் பெற்ற திருத்தந்தை, அரசு அதிகாரிகளையும், தலத்திருச்சபை அதிகாரிகளையும் அங்கேயே சிறிதுநேரம் சந்தித்த பின்னர் குண்டு துளைக்காத கண்ணாடி பொருத்தப்பட்ட திறந்த காரில் யவுந்தே அப்போஸ்தலிக்கத் தூதரகம் சென்றார். இத்துடன் முதல் நாளையப் பயண நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.

ஏறத்தாழ 44 விழுக்காட்டு கிறிஸ்தவர்களையும் 26 விழுக்காட்டு பாரம்பரிய மதநம்பிக்கையாளர்களையும் 21.8 விழுக்காட்டு இஸ்லாமியர்களையும் கொம்ட காமரூன் நாட்டில் திருத்தந்தையை வரவேற்பதில் இஸ்லாமியரும் பிற கிறிஸ்தவ சபையினரும் காட்டிய ஆர்வம் குறிப்பிடும்படியானது.

திருத்தந்தை செவ்வாயன்று காமரூனுக்குச் சென்ற விமானப் பயணத்தில் ஏறத்தாழ அரைமணி நேரம் நிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்னார்.

திருப்பீடப் பேச்சாளர் அருட்தந்தை லொம்பார்தியும் பத்திரிகையாளரின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

ஆப்ரிக்கக் கண்டத்தின் வளர்ச்சி குறித்தும் கிறிஸ்தவர்களின் உயிர்த்துடிப்பான பங்கேற்பு குறித்தும் எடுத்துரைத்தார். RealAudioMP3

இன்று காலை திருப்பீட தூதரகத்தில் திருப்பலி நிகழ்த்திய பின்னர், காலை 10 மணியளவில் அரசுத்தலைவர் மாளிகை சென்று அவரைச் சந்தித்தார்.

மதியம் ஆயர்களுடன் திருப்பீட தூதரகத்தில் உணவருந்தி உரையும் நிகழ்த்தினார்.

மாலையில் திருவழிபாட்டில் கலந்து கொள்கிறார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.