2009-03-18 15:28:40

சண்டை இடம் பெறும் பகுதியில் சிறாரைப் பாதுகாப்பதற்கு மிகுந்த முயற்சிகள் எடுக்கப்படுமாறு யூனிசெப் அழைப்பு


மார்ச்18,2009. இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெறும் கடும் மோதல்களில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த சிறுவர்கள் குறித்து மிகுந்த கவலை தெரிவித்த அதேவேளை, சண்டை இடம் பெறும் பகுதியில் சிறாரைப் பாதுகாப்பதற்கு மிகுந்த முயற்சிகள் எடுக்கப்படுமாறு ஐ.நாவின் சிறுவர்களுக்கான நிதியமான யூனிசெப் அழைப்பு விடுத்துள்ளது.

சண்டை இடம் பெறும் பகுதிகளில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் உயிரிழந்துள்ளதோடு, தற்சமயம் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் தொற்றுநோய்களுக்கும் போதிய உணவின்றி ஊட்டச்சத்துக் குறைவுக்கும், தண்ணீர் மருந்துகளின்றியும் துன்புறுகின்றனர் என்று யூனிசெப்பின் செயல்திட்ட இயக்குனர் ஆன் எம் வெனெமான் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும், மனிதாபிமான தொண்டு நிறுவனங்கள், தங்கள் விநியோக பணிகளைப் பாதுகாப்பாக தொடர்ந்து நடத்துவதற்கு உடனடியாக வழிவகைச் செய்யப்படுமாறும் அவர் கேட்டுள்ளார்.

அத்துடன், மோதல் பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்கள், மனிதாபிமான உதவிகள் உடனுக்குடன் கிடைக்கக் கூடிய இடங்களை நோக்கி பாதுகாப்பாகச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் வெனெமான் கேட்டுள்ளார்.

மோதல்களில் சிக்கியுள்ள சிறுவர்களின் உரிமைகள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும், பொதுமக்களின் உயிரிழப்புக்களைத் தடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் வெனிமன் அவ்வறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளார்







All the contents on this site are copyrighted ©.