2009-03-17 13:14:15

திருத்தந்தையின் திருப்பயணம் ஆப்ரிக்கக் கண்டத்துடன் ஒருமைப்பாட்டை போற்றி வளர்ப்பதாக இருக்கும், கர்தினால் கோர்தெஸ்


மார்ச் 17, 2009. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இன்று துவக்கியுள்ள காமரூன் மற்றும் அங்கோலா நாடுகளுக்கானத் திருப்பயணம் ஆப்ரிக்கக் கண்டத்துடன் ஒருமைப்பாட்டையும் அருகாமையையும் போற்றி வளர்ப்பதாக இருக்கும் என்றார் கர்தினால் பவுல் யோசெப் கோர்தெஸ்.

கத்தோலிக்கத் திருச்சபையின் பிறரன்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் கோர் ஊனும் அவையின் தலைவரான கர்தினால் கோர்தெஸ் உரைக்கையில், உலக பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகளால் ஆப்ரிக்கா மறக்கப்படும் அபாயம் இருக்கும் சூழலில் திருத்தந்தை அக்கண்டத்திற்கான தனது திருப்பயணம் மூலம் தன் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவார் என்றார்.

திருத்தந்தை ஆப்ரிக்கக் கண்டத்திற்குத் திருப்பயணம் மேற்கொள்ளும் போது அவருடன் பயணம் புரியும் சமூகத்தொடர்பாளர்கள் மற்றும் பத்திரிகையாளர் மூலம் ஆப்ரிக்காவின் உண்மை நிலைகள் உலகுக்குத் தெரிய வாய்ப்பிருக்கிறது என்ற கர்தினால், திருத்தந்தை பிறரன்பின் விவிலியச் செய்தியை மட்டுமல்ல, மனிதாபிமான அவையின் முக்கிய தீர்வுகளையும் அங்கு எடுத்துச் செல்கிறார் என்றார்.

பணத்தின் மூலம் மட்டும் அனைத்தையும் ஆற்றிவிட முடியாது, மக்களுக்கான கருணையும் அவர்களிடையேயான பிரசன்னமும் அவசியம் என்பதை உணர்ந்தே திருத்தந்தை ஆப்ரிக்கமக்களுக்கானத் தன் பயணத்தை நிறைவேற்றுகிறார் என்றார் கோர் ஊனும் அவைத் தலைவர் கர்தினால் கோர்தெஸ்.








All the contents on this site are copyrighted ©.