2009-03-14 14:18:28

ஒப்புரவு திருவருட்சாதனத்தை நிறைவேற்றும் குருக்கள், இறைவனின் இரக்கத்தின் திருப்பணியாளர்கள் என்பதால் அதற்குத் தங்களைத் தகுதியுடையவர்களாக அமைத்துக் கொள்ள அழைப்பு


மார்ச்14,2009. ஒப்புரவு திருவருட்சாதனத்தை நிறைவேற்றும் குருக்கள், இறைவனின் இரக்கத்தின் திருப்பணியாளர்கள் மற்றும் மனச்சாட்சிகளை நெறிப்படுத்துவதற்குப் பொறுப்பானவர்கள் என்பதற்குத் தகுதியுடையவர்களாகத் தங்களை அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

அப்போஸ்தலிக்க பாவ மன்னிப்பு நீதிமன்றம் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டோருக்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை, மறைக்கல்வி, போதனை, மறையுரை, ஆன்மீக வழிகாட்டுதல், ஒப்புரவு திருவருட்சாதனம், திருநற்கருணை கொண்டாட்டம் ஆகியவை பற்றி விளக்கியுள்ளார்.

அனைத்து திருவருட்சாதனங்களுக்கும் மறைக்கல்வி தேவைப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ள அவர், இம்மறைக்கல்வியோடு போதனைகளும் ஒன்றிணைந்து செல்கின்றன என்றார்.

மனசாட்சியை உருவாக்குவதற்கு ஆன்மீக வழிகாட்டுதலும் தேவை என்றும் கூறிய திருத்தந்தை, எக்காலத்தையும்விட இக்காலத்தில் ஞானமும் புனிதமும் நிறைந்த ஆன்மீக வழிகாட்டிகள் தேவைப்படுகிறார்கள் என்றார்.

குருக்கள், புனித ஆன்மீக வழிகாட்டிகளால் தூண்டப்பட வேண்டும் என்ற அவர், இவ்வாண்டு புனித ஜான் மரிய வியான்னி இறந்ததன் 150ம் ஆண்டு நினைவுகூரப்படுவதைக் குறிப்பிட்டு அவர் ஒவ்வொரு நாளும் மறைக்கல்வியிலும் ஒப்புரவு திருவருட்சாதனத்தை நிகழ்த்தும் போதும் எவ்வாறு சிறாருக்கும் வயதுவந்தோருக்கும் போதித்தார் என்பதையும் அச்செய்தியில் விளக்கியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.