2009-03-14 14:21:53

இலங்கையில் முகாம்களுக்கு வந்துள்ள குடும்பங்களுக்கான ஆன்மீக மற்றும் உளவியல் ரீதியிலான உதவிகளை வழங்க ஆயர்கள் நடவடிக்கை


மார்ச்14,2009. இலங்கையில் தமிழ் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேறி அரசு அமைத்துள்ள முகாம்களுக்கு வந்துள்ள குடும்பங்களுக்கான ஆன்மீக மற்றும் உளவியல் ரீதியிலான உதவிகளை வழங்க நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்.

இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் பிரதிநிதிகள் குழு, இவ்வாரத்தில் வவுனியாவின் நான்கு இடங்களிலுள்ள 13 முகாம்களிலுள்ள ஏறத்தாழ நாற்பதாயிரம் மக்களைச் சந்தித்தனர் என்று யூக்கா செய்தி நிறுவனம் கூறியது.

ஊடகத்துறையினரும் மற்றவர்களும் இந்த முகாம்களைப் பார்வையிட அரசின் அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்ற போதிலும் முதன்முறையாக ஆயர்கள் அங்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்றும் அச்செய்தி நிறுவனம் கூறியது.

இச்சந்திப்பு குறித்துப் பேசிய இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் செயலர் ஆயர் நார்பெர்ட் அந்த்ராதி, இந்தத் தங்களின் மனிதாபிமான சந்திப்பு, துன்புறும் மக்களுடனான ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கவே மேற்கொள்ளப்பட்டது என்றார்.

இம்மக்களுக்கு உளவியல் ரீதியிலான ஆலோசனைகளை வழங்க சில அருட்சகோதரிகளை அனுப்புமாறு அரசு கேட்டுக் கொண்டதாக, இக்குழுவில் ஒருவரான இலங்கை காரித்தாஸ் இயக்குனர் அருட்திரு டேமியன் பெர்னாண்டோ கூறினார்.








All the contents on this site are copyrighted ©.