2009-03-11 16:23:51

தேர்தல்களில் மக்கள் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்த கோவா பேராயர் வலியுறுத்தல்


மார்ச்11, 2009. இந்தியாவில் மக்களவைத் தேர்தல்கள் அண்மித்து வரும்வேளை, சரியாகச் செயல்படாத தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான உரிமையை வாக்காளர்களுக்கு வழங்கும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்குமாறு கூறியுள்ளார் கோவா டாமன் பேராயர் பிலிப்நேரி பெராவோ.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் கோவா மாநிலத்தில் வருகிற ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவிருப்பதை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட பேராயர் பெராவோ, இந்தத் தேர்தல்களில் மக்கள் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.

தங்கள் பணியை ஒழுங்காகச் செய்யாதவர்கள், ஊழலில் ஈடுபடுவோர், ஒருங்கிணைந்த ஆளுமை இல்லாதவர்கள் – இவ்வாறு இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களை நீக்குவதற்கான உரிமை வழங்குபவர்க்கு ஓட்டளிக்குமாறும் பேராயரின் அறிக்கை கூறுகின்றது.

நாடாளுமன்றத் தேர்தல்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் என்பதால் சமய சார்பற்றதன்மையையும் ஜனநாயகத்தையும் போற்றி வளர்ப்பவர், வாழ்வு, சுதந்திரம், சமத்துவம், நீதி ஆகியவற்றைக் காப்பவர், ஏழ்மையையும் எழுத்தறிவின்மையையும் அகற்ற முயற்சிப்பவர், பாலியல் தொழில் முறையை ஒழிக்க உழைப்பவர் ஆகிய பண்புகளைக் கொண்டவர்களைத் தேர்ந்தெடுக்குமாறும் பேராயரின் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.