2009-03-09 15:05:02

புனித பூமிக்கான திருப்பயணம் வெற்றிகரமாக அமைய ஆன்மீகரீதியிலான ஆதரவுக்கு திருத்தந்தை அழைப்பு


மார்ச்09,2009. வருகிற மே 11 முதல் 15 வரை தான் மேற்கொள்ளவிருக்கும் புனித பூமிக்கான திருப்பயணம் வெற்றிகரமாக அமைய ஆன்மீகரீதியிலான ஆதரவை வழங்குமாறு விசிவாசிகளிடம் ஞாயிறன்று கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.

ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் இவ்வாறு கேட்டுக் கொண்ட திருத்தந்தை, நம் ஆண்டவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் அவரால் புனிதப்படுத்தப்பட்ட புனித பூமிக்குச் செல்லும் போது, மத்திய கிழக்கு மற்றும் முழுமனித சமுதாயத்திற்கும் ஒற்றுமை மற்றும் அமைதி எனும் விலைமதிக்கப்படாத கொடைக்காகச் செபிக்கவிருப்பதாகக் கூறினார்.

இந்நாட்களில் இறைவன் தன்னோடு இருந்து தான் சந்திக்கும் அனைவரையும் அவரது வரங்களால் நிறைப்பதற்குத் தனக்காகச் செபிக்குமாறு விசிவாசிகளைக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.

மேலும், திருத்தந்தை, ஜோர்டன், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளுக்கு மேற்கொள்ளவிருக்கும் இத்திருப்பயணம் குறித்த விவரங்களை ஞாயிறன்று வெளியிட்டது திருப்பீட பத்திரிகை அலுவலகம்.

ஜோர்டன் அரசர், இஸ்ரேல் அரசுத் தலைவர், பாலஸ்தீனிய தேசிய நிர்வாகத் தலைவர், புனிதபூமி கத்தோலிக்கத் தலைவர்கள் ஆகியோரின் அழைப்பை ஏற்ற திருத்தந்தை, ஆமனில் அரசர் ஹூசேய்ன் மசூதியில் ஜோர்டன் முஸ்லீம் தலைவர்களைச் சந்தித்தல், தென் ஆமனிலுள்ள நெபோ மலைக்குச் செல்லுதல், ஜோர்டன் ஆற்றில் இயேசு திருமுழுக்கு பெற்ற பகுதியில் புதிய ஆலயத்தை மந்திரித்தல், எருசலேமில் இஸ்ரேல் அரசுத் தலைவர் ஷிமோன் பெரேசையும் பெத்லகேமில் பாலஸ்தீனிய தலைவர் மகமூத் அபாஸையும் சந்தித்தல் போன்ற அவரின் பயணத் திட்டங்களையும் திருப்பீட பத்திரிகை அலுவலகம் வெளியிட்டது.

இப்பயணம் குறித்து ஞாயிறன்று மகிழ்ச்சி தெரிவித்த இஸ்ரேல் அரசுத் தலைவர் பெரேஸ், அமைதி மற்றும் நம்பிக்கையைக் கொண்டு வரும் இப்பயணம் மிக முக்கியமானது, திருத்தந்தை அனைத்து மக்களின் விருந்தாளியாக வரவேற்கப்பட்டு கவுரவிக்கப்படுவார் என்றார்.








All the contents on this site are copyrighted ©.