2009-03-09 15:04:12

கடவுளன்பில் வளர திருத்தந்தை வலியுறுத்தல்


மார்ச்09,2009. செபம் ஒருவரின் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவும் கருவியாகவும், அதேவேளை ஒருவர் தனது விருப்பத்தை கடவுளோடு ஒன்றிணைக்கவும் கடவுளின் அன்பில் மூழ்குவதற்கும் உதவியாக இருக்கின்றது என்று கூறினார் திருத்தந்தை.

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த ஏறத்தாழ இருபதாயிரம் விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய அவர், கடந்த வாரத்தில் தான் நிறைவு செய்த ஆண்டுத் தியானம் பற்றிப் பேசினார்.

அது மௌனம் மற்றும் செபத்தின் வாரமாக இருந்தது, அந்நாட்களில் மனத்தையும் இதயத்தையும் முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்து அவரது வார்த்தையைக் கேட்கவும் கிறிஸ்துவின் மறைபொருட்கள் பற்றித் தியானிக்கவும் முடிந்தது என்றார் திருத்தந்தை.

தனது தியான அனுபவம், தபோர் மலையில் உருமாறிய இயேசுவைக் கண்ட திருத்தூதர்களின் அனுபவமாக இருந்தது என்றுரைத்த திருத்தந்தை, சீடர்கள், குறிப்பாகப் புதிதாகப் பிறந்த திருச்சபையை வழிநடத்துவதற்குப் பொறுப்பானவர்கள், திருச்சிலுவையின் துர்மாதிரிகையை எதிர்கொள்வதற்குத் தமது இறையருளை நேரிடையாக அனுபவிக்க வேண்டுமென்று இயேசு விரும்பினார் என்றார்.

கிறிஸ்துவின் உயிர்ப்பில் நம்பிக்கை வைத்து அதில் உறுதிப்படுவதற்கு அவரின் அருள் தேவை என்று கெத்சமெனி போன்ற இன்னலான தருணங்களில் சீடர்களுக்குச் செபம் தேவையாக இருந்தது என்றார் அவர்.

இயேசுவின் உருமாற்றம் செபத்தின் அனுபவமாக இருந்தது, உண்மையில் செபம், அகஒளியின் ஊற்றாக மாறும் பொழுது அதன் உச்சநிலையை அடைகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

இயேசு மலைக்கு ஏறிய போது மனுக்குலத்தை மீட்பதற்காகத் தன்னை இவ்வுலகிற்கு அனுப்பிய தந்தையின் அன்புத் திட்டத்தைத் தியானிப்பதில் முற்றிலும் மூழ்கியிருந்தார், அவ்வேளையில் இயேசு தனக்காகக் குறிக்கப்பட்ட சிலுவையைத் தனது இதயத்தில் பார்த்தார், அவர் மீண்டும் அதற்கு ஆகட்டும் என்றார் என்றும் பாப்பிறை கூறினார்.

தந்தையே, உமது அன்பின் விருப்பம் நிறைவேறட்டும், இதோ நான் இருக்கிறேன் என்று இயேசு கூறினார் என்ற திருத்தந்தை, உண்ணா நோன்பு, இரக்கச் செயல்கள் ஆகியவற்றுடன் செபம் நம் ஆன்மீக வாழ்வின் முக்கிய அமைப்பை வடிவமைக்கிறது என்றார்.

இன்னும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டுப் பேசிய திருத்தந்தை, மகளிர் மாண்புடன் நடத்தப்படவும் அழைப்புவிடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.