2009-03-07 14:20:34

விஞ்ஞானி சார்லஸ் டார்வினின் கொள்கைகள் கிறிஸ்தவ விசுவாசத்தோடு ஒத்துப் போகக்கூடியதாக இருக்கின்றது


மார்ச்07,2009. விஞ்ஞானி சார்லஸ் டார்வினின் கொள்கைகள் கிறிஸ்தவ விசுவாசத்தோடு ஒத்துப் போகக்கூடியதாக இருக்கின்றது என்று வத்திக்கான் கருத்தரங்கில் கூறப்பட்டது.

இக்கருத்தரங்கு பற்றிப் பேசிய திருப்பீட விசுவாசக் காப்புப் பேராயத் தலைவர் கர்தினால் வில்லியம் லெவாடா, படைப்பு, பரிணாம வளர்ச்சி பற்றி எவ்வளவுதான் கொண்டிருந்தாலும் இறுதியில் அனைத்தையும் படைத்தவர் இறைவனே என்பதை நாம் நம்புகிறோம் என்றார்.

வத்திக்கான் அறிவியலின் எந்தப் பகுதியையும் புறக்கணிப்பதில்லை, எனினும் உயிர்களின் பரிணாமம் கடவுள் இல்லை என்று நிரூபிக்கின்றது என்றுரைக்கும் உயிரியலார் ரிச்சர்ட் டாவ்கின்ஸ் மற்றும் பலரின் நாத்திகக் கருத்தை வத்திக்கான் புறக்கணிக்கின்றது என்றும் கர்தினால் லெவாடா கூறினார்.

டார்வினின் “உயிரினங்களின் மூலம்’ என்ற புகழ்பெற்ற நூல் வெளியிடப்பட்டதன் 150ம் ஆண்டை முன்னிட்டு திருப்பீட கலாச்சார அவையும் உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைகழகமும் அமெரிக்க ஐக்கிய நாட்டு இந்தியானா நோத்ரு தாம் அப்பல்கலைகழகமும் இணைந்து நடத்திய ஐந்து நாட்கள் கருத்தரங்கு இன்று நிறைவடைந்தது.

உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைகழகத்தில் நடைபெறும் இக்கருத்தரங்கில் உலகின் பல பாகங்களிலிருந்து அறிவியலார், மெய்யியலார், இறையியலார் எனப் பலர் கலந்து கொண்டு உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய டார்வினின் கோட்பாடுகளுக்கும் கத்தோலிக்கப் போதனைகளுக்கும் இடையேயான ஒத்தமைவுகள் பற்றி விவாதித்தனர்.

கலிலேயோ, டார்வின் போன்ற விஞ்ஞானிகளின் புரட்சிகரமான அறிவியல் கருத்துக்கள் சமய நம்பிக்கைக்குச் சவாலாக இருந்த வேளை, அவர்களின் அறிவியல் கோட்பாடுகள் பற்றி மீண்டும் ஆய்வு செய்யும் நோக்கத்தில் வத்திக்கான் இவ்வாண்டில் முக்கிய கருத்தரங்குகளை நடத்துகிறது.

ஆங்கிலேயரான விஞ்ஞானி சார்லஸ் டார்வின் 1809ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி பிறந்தார். இவர் பிறந்து இவ்வாண்டு 200 ஆண்டுகள் நிறைவுறுவதை முன்னிட்டு உலக அளவில் அவருக்கு புகழ்மாலை சூட்டும் நிகழ்ச்சிகள் பிப்ரவரி 12ம் நாள் நடைபெறறன.

மனிதனும் மிருக இனத்தைச் சேர்ந்தவன் தான், அவனின் முன்னோர்கள் குரங்குகள்தான், பரிணாம வளர்ச்சியில் குரங்கிலிருந்து உதித்தவன்தான் மனிதன் என்பதை அரிய விஞ்ஞான ஆதாரங்களோடு நிரூபித்துக் காட்டியவர் சார்லஸ் டார்வின்.

இவருக்கு எழுதுவதில் அதிக ஆர்வம் இல்லை என்றாலும் மொத்தத்தில் பதினெட்டு நூல்களை எழுதியுள்ளார். அவர் கடைசியாக 1872 ஆம் ஆண்டு எழுதிய நூல் “மனிதனும் மிருகங்களும் தம் உணர்ச்சிகளை வெளியிடும் விதம்“ என்பதாகும். ஆனால் அவர் 1859ஆம் ஆண்டு எழுதிய “உயிரினங்களின் மூலம்’ எனும் நூல் அவருக்குப் பெரும் பாராட்டைப் பெற்றுத் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

“வலுவுள்ளது வாழ்கிறது, மெலிந்தது வீழ்கிறது“ என்பது இவரின் தத்துவமாகும்.








All the contents on this site are copyrighted ©.