2009-03-07 14:19:35

புனித பிரான்சிஸ் சவேரியாரின் பிறப்பிடத்திற்கு திருப்பயணம் மேற்கொள்ள திருத்தந்தை வலியுறுத்தல்


மார்ச்07,2009. மறைப்பணித்தளங்களின் பாதுகாவலரான புனித பிரான்சிஸ் சவேரியாரின் பிறப்பிடத்திற்கு விசுவாசம் நிறைந்த திருப்பயணம் மேற்கொள்ளுமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வலியுறுத்தினார்.

ஸ்பெயினின் பாம்ப்லோனா பேராயர் பிரான்சிஸ்கோ பேரெஸ் கொன்சாலெஸ்க்குத் திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்தோனே அனுப்பிய செய்தியில் திருத்தந்தையின் இவ்விண்ணப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தில் நடைபெறும் ஹாவியர்தாஸ் என்ற திருப்பயணத்தை மேற்கொள்பவர்களுக்கென அனுப்பப்பட்ட செய்தியில், இப்பயணம் விசுவாசத்தை உறுதிப்படுத்தவும், கிறிஸ்துவுக்கு உண்மையான சாட்சிகளாய் இருப்பதற்கான அர்ப்பணத்தை அதிகப்படுத்தவும் அவ்விசுவாசத்தைப் பிறருக்குத் தாராள மனத்தோடு அறிவிக்கவும் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

“மறைபோதகர்களான புனிதர்கள் பவுல் மற்றும் சேவியர் போல:நற்செய்தி அறிவிக்காவிடில் எனக்கு ஐயோ கேடு” என்ற ஸ்லோகத்துடன் இவ்வாண்டு மார்ச் 8, மார்ச் 14 ஆகிய இரண்டு ஞாயிறுகளில் இத்திருப்பயணம் நடைபெறுகின்றது.

1506ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி ஸ்பெயினின் பாஸ்கு பகுதியின் நவாரேயில் பிறந்த பிரான்சிஸ் சவேரியார், ஹாங்காங் நகருக்கு ஏறத்தாழ 100 கல் தொலைவிலுள்ள சான்சியன் தீவில் 1552ம் ஆண்டு இறந்தார்.








All the contents on this site are copyrighted ©.