2009-03-05 13:14:00

மார்ச் 06 - தவக்காலச் சிந்தனை மத்.5, 20-26.


அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது : மறைநூல் அறிஞர் பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில் நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன். ' கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர் ' என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ' தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ ' முட்டாளே ' என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; அறிவிலியே என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார். ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால் அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்துக்குக் கூட்டிச் செல்லும் போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்து கொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்.

தினத்தாள்கள் ஒவ்வொரு நாளும் தரும் செய்திகளில் கொலைகள் பற்றிய செய்திகள் இல்லாமல் இருந்தால் ஆச்சரியமே. இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் சித்ரவதைபடுத்தப்பட்டு கொல்லப்படுகின்றனர். இந்தக் கொலைகளுக்கெல்லாம் பயங்கரவாத ஒழிப்பு, முன்விரோதம், நிலத்தகராறு, என்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. சிறைகளிலுள்ள கொலைக் குற்றவாளிகளுள் அதிகம்பேர் திட்டமிட்டுக் குற்றம் செய்யாதவர்கள். கட்டுபடுத்தப்படாதகோபமும், ஆத்திரமும் உணர்ச்சி வேகமும் பலரைச் சிறைக்கம்பிகளை எண்ண வைக்கின்றன. எனவே சினம் கொள்வதைத் தவிர்த்து அனைவரோடும் நல்லுறவோடு வாழ இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார். ஆம். பாவியின் மனமாற்றத்தைவிட அதிசயம் வேறில்லை.

செபம் - ஆண்டவரே, நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால் யார்தான் நிலைத்து நிற்க முடியும்?








All the contents on this site are copyrighted ©.