2009-03-04 15:49:48

இலங்கை மாபெரும் மனிதாபிமான பேரிடரை எதிர்நோக்குகிறது, சர்வதேச செஞ்சிலுவை சங்கம்


மார்ச்4,2009. இலங்கையில் தொடர்ந்து இடம் பெறும் சண்டையினால் அப்பாவி மக்கள் எதிர்கொள்ளும் நிலைகள் குறித்து கவலை கொண்டுள்ள அதேவேளை, அந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மாபெரும் மனிதாபிமான பேரிடர் ஏற்படும் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் எச்சரித்துள்ளது.

இலங்கை அரசுப் படைகளுக்கும் தமிழ்ப் போராளிகளுக்குமிடையே சண்டை இடம் பெறும் பகுதியில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் வரை சிக்கியுள்ளனர் என்றுரைக்கும் இச்சர்வதேச சங்கத்தின் ஜாக் தெ மாய்யோ, அப்பாவி மக்கள் அப் பகுதியிலிருந்து அகற்றப்பட வேண்டும் மற்றும் அதிக மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் கோரியுள்ளார்.

தான் இதுவரை பார்த்த மிகக் கடுமையான மனிதாபிமான பேரிடர்களில் இதுவும் ஒன்றாகும் என்றும் மாய்யோ கூறினார்.

மேலும், வன்னியில் இலங்கை இராணுவம் மேற்கொண்டு வரும் இன அழிப்புப் படையெடுப்பினால், நேரடிப் படுகொலைக்கு உள்ளாகும் தமிழர்கள் ஒரு பக்கம் இருக்க, பட்டினியாலும், நோயினாலும் பலியாகும் தமிழர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

நோய்களுக்கு மருந்து இல்லாமல் மருத்துவமனைகள் அவலப்படும்வேளையில், உண்ண உணவு இல்லாமல் மக்கள் கண்டதையும் உண்டு நோய் வாய்ப்படும் கோர நிலையும் ஏற்பட்டுவிட்டது.

இந்த நிலையில், பசிக் கொடுமை தாங்காமல் விஷச் செடியை, சாப்பிடும் கீரை என நினைத்து எடுத்துச் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மயக்கமுற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு பேர் சிறார்கள்.

இலங்கை அரசின் போர் முனைப்பினால் வன்னியில் குறுகிய நிலப்பரப்பினுள் முடக்கப்பட்டுள்ள மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் அவலம் தொடர்பாக கடந்த சனிக்கிழமை முதன் முதலாக தெரிய வந்தது.

இதுதவிர இடம் பெயர்ந்து வந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களில் வயிற்றுப் போக்கை தடுக்கும் மருந்துகள் இல்லாததால் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்கறிகள், உணவுப் பொருட்கள், பால் பவுடர் உள்ளிட்ட எதுவுமே இல்லாத நிலையில் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சில இடங்களில் உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. ஆனால் விலை மிக மிக அதிகமாக உள்ளது. ஒரு கிலோ மாவு 200 ரூபாய்க்கும், அரிசி ரூ. 200 முதல் 250 ரூபாய் வரையிலும் விற்கின்றன. மிளகாய் வத்தல் விலை கிலோ ரூ. 3000 என்று விற்கப்படுகிறது. மஞ்சள் விலை கிலோ ரூ. 3000. ஒரு தேங்காயின் விலை ரூ. 150 ஆக உள்ளது. சாதாரண மக்களால் இவற்றை வாங்க முடியாத நிலை இருப்பதால் பட்டினிச் சாவுகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் நிலவுகிறது.








All the contents on this site are copyrighted ©.