2009-03-03 16:53:57

விவிலியத் தேடல் - நற்செய்தி லூக்கா 12 , 16 – 21 . 030309


உவமைகள் கேட்பவரைப் பிணித்து நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி கொண்டவை . அவை நாம் கேட்டிராத நிகழ்ச்சியைக் கூறவில்லை . அவை நம் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகின்றன . அதனால்தான் உவமைகள் கேட்பவர்கள் மனத்தைத் தொடுகின்றன . உண்மையை நேரடியாகக் கூறுவதை மக்கள் கவனமாகக் கேட்பதில்லை . படமாக சித்தரித்துக் காட்டப்படும் போது மக்கள் அதை ரசனையோடு உள்வாங்கி அதன் உட்பொருளை உணர்ந்து கொள்கின்றனர் .



வாழ்வின் நிலையாத் தன்மையைக் கூற வரும் வள்ளுவர்



நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்து இவ்வுலகு. குறள் 336 .



ஒருவன் நேற்று இருந்தான் இன்று இல்லாமல் போனான் என்ற பெருமையை உடையது இந்த உலகம் எனக் கூறுவதற்கும் , அவரே உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு , கூடு தனியே கிடக்க அதைவிட்டுப் பறந்து சென்ற பறவைக்கு ஒப்பாகும் எனக் கூறும்போது முட்டையிலிருந்து வெளியே பறந்து செல்லும் பறவையைப் போல உயிர் பிரிந்து செல்வதை அழகாக எடுத்துச் சொல்கிறார் .



குடம்பை தனித்துஒழியப் புள் பறந் தற்றே

உடம்போடு உயிரிடை நட்பு . குறள் 338 .



அறிவற்ற செல்வந்தனின் உவமையில் மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது என இயேசு எடுத்துக்கூறுகிறார் .

நம் ஒவ்வொருவர் மனதுக்குள்ளும் வீரமும் இருக்கிறது . கோழைத்தனமும் உள்ளது . வீரன் உயிரைக்கொடுத்துப் புகழைத் தேடுகிறான் . கோழை சாவதற்கு அஞ்சி பாதுகாப்பைத் தேடுகிறான் . இந்த இருவேறு எண்ணங்களுக்குமே நம் மனதுக்குள் போராட்டம்தான் . நம் உவமையில் வருகின்ற செல்வந்தன் கோழையாக இருப்பதால் பாதுகாப்புக் கருதி அளவுக்கு அதிகமாகத் தானியத்தை சேமித்து வைக்கிறான் . பாதுகாப்புக் கருதி அவன் வெற்றியை விற்றுவிடுகிறான் . அது மட்டுமல்ல , அவன் எதைப் பாதுகாப்பு எனக் கருதியிருந்தானோ அதுவே அவனுக்குத் தேவையான நேரத்தில் பாதுகாப்பற்றதாக இருக்கிறது . இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடப்போகிறது . பாதுகாப்பு இல்லாது போகிறது . வெற்றியையும் இழந்தாகிவிட்டது . இந்நிலைக்குக் காரணம் பொருட்செல்வத்தைச் சேமிப்பதனால் அல்ல , மாறாக பேராசையை அடக்கி தேவைக்கேற்ப பொருள் ஈட்டி பற்றறுத்து வாழக்கற்றுக் கொள்ளாததால் . நிறையப் பொருளால் அல்ல வாழ்வில் நிறைந்த அருளால் மட்டுமே வளப்பம் உண்டு என இயேசு கூறுகிறார் . நிலையாதவற்றில் பற்றுக் கொள்ளாது கடவுள் தரும் அருள் வாழ்வு எனும் வெற்றியை நமதாக்க வேண்டும் எனத் தூய பவுல் அடிகளார் கொரிந்தியருக்குக் கூறுவார் .மேலும் , நம்மேல் அன்புகூர்ந்த இயேசுவின் அருளால் நாம் வெற்றிமேல் வெற்றி பெறுகிறோம் என பவுல் அடிகளார் உரோமையருக்குக் கூறுவார் .

சாவோ , வாழ்வோ , வானதூதரோ , ஆட்சியாளரோ , நிகழ்வனவோ , வருவனவோ , வலிமை மிக்கவையோ , உன்னதத்தில் உள்ளவையோ , ஆழத்தில் உள்ளவையோ , வேறெந்தப்படைப்போ நம் ஆண்டவர் கிறிஸ்து வழியாக அனுப்பப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை எனக் கூறுவார் . உரோ 8,37-39 . இதை தக்கவைப்பது தான் செல்வமிக்கவராக இருப்பதாகும் . நாம் கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்பது அதுவேயாகும் .



இன்றைய நாட்டு நடப்பு எப்படி இருக்கிறது . பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுவனங்களும் அரசுகளும் அழிந்துவிடும் நிலை உருவாகியிருப்பது நமக்கெல்லாம் தெளிவாகத் தெரியுமே .



சில ஆண்டுகளுக்கு முன்னர் சிக்காக்கோவின் பெரிய நட்சத்திர விடுதியில் உலகின் தலைசிறந்த நிறுவனத்தலைவர்கள் கருத்தரங்கு நடத்தினர் . உலகில் உள்ள மிகப் பெரிய செல்வந்தருள் 50 பேர் அங்கு கூடியிருந்தனர் . சில ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு வந்திருந்தவர்களில் பலர் கடனாளிகளாயினர் . சிலர் கடன் தொல்லை காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டனர் . இதுதான் வாழ்வின் நிலையாத தன்மை .

இன்றைய உவமை பொருள் செல்வத்துக்கு எதிரானது அல்ல . ஆனால் பொருள் செல்வத்துக்கு மிக அதிகமான முக்கியத்துவம் கொடுத்துவிட்டு கடவுளை மறந்துவிடுவதும் , ஆன்மீகம் சார்ந்தவற்றை மறந்து வாழ்வதும் தவறு எனச் சுட்டிக் காட்டுகிறது .



ஆப்பிரிக்காவில் சில இனத்தவர் இறந்தோரை நல்லடக்கம் செய்யும்போது , ஆடைகளை நீக்கி விடுவது வழக்கமாம் . காரணம் நாம் இவ்வுலகிற்கு வரும் போது கொண்டுவந்தது ஒன்றுமில்லை , இங்கிருந்து கொண்டுபோகப் போவதும் ஒன்றுமில்லை . எவ்வளவு பொருள் செல்வத்தைச் சேர்த்தோம் என்பது வாழ்வின் வெற்றிக்கு அடையாளம் அல்ல , மாறாக நாம் வாழ்வின் பரிமாணங்களில் – அன்பில் , பண்பாட்டில் , பக்தியில் , ஈதலில் , மன்னிப்பதில் என பல்வேறு கோணங்களில் நாம் எவ்வளவு நல்ல மனிதர்களாக வளர்ந்திருக்கிறோம் என்பதே முக்கியமாகும் . பொருள் செல்வத்தை விட அருள் செல்வமே முக்கியமானது . உயர்ந்த மனிதர்களாக நாம் வளர்ச்சி பெறவேண்டும் . அதற்கு மாறாக பணத்தைச் சேர்ப்பதற்காக தவறான வழிகளைப் பின்பற்றுவதும் , நேர்மைக்குப் புறம்பாக நடப்பதும் , செருக்கோடு வாழ்வதும் , வீட்டில் பாசமில்லாது ஊருக்குப் பெரியவன் என்ற பெயர் வாங்க முயல்வதும் வீணான வாழ்நாட்களாகும் .

இவ்வுலகில் நிலையாத அழிந்து போகும் செல்வத்துக்குப் பதிலாக அழியாத பேரின்ப வாழ்வுக்கு இட்டுச் செல்லும் அன்பையும் அருளையும் தேடுமாறு உவமை நமக்கு வழிகாட்டுகிறது .



உங்கள் பிள்ளையிடம் ஆசிரியர் உங்கள் அப்பாவுக்கு வாழ்வில் எது முக்கியம் எனக் கேட்டால் அவன் என்ன சொல்லுவான் என நினைக்கிறீர்கள் ? . அவருக்குத் தொழிலே முக்கியம் என்றுதான் பதில்வருமா? - அம்மாவுக்கு முக்கியம் நிச்சயமாக குடும்பம் அல்ல எனப்பதில் வருமா? . பிள்ளையின் குறிக்கோள் தொலைக்காட்சியில் பொழுதைப் போக்குவதா? .

ஒரு நாள் நோபல் பரிசை உருவாக்கிய ஆல்பிரட் செய்தித்தாளில் இறந்தவர்களின் பட்டியலில் தம் பெயரும் வந்திருந்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் . அவருடைய சகோதரர் பெயருக்குப் பதிலாக இவருடைய பெயரைப் போட்டுவிட்டார்கள் . அதில் அதிர்ச்சி ஊட்டிய மற்றொரு பகுதி என்னவென்றால் இவரைப் பற்றிய விமரிசனம் இவரை , உயிரைப் போக்குவதற்கு பயங்கர வெடிகுண்டுகளைத் தயாரிப்பதில் சிறந்தவர் எனக் கூறியிருந்தது . அந்தச் செய்தி அவர் மனதை மாற்றியது . அதனால்தான் அவர் நல்ல கண்டுபிடிப்புக்களுக்கும் , சிறப்பாக இலக்கியம் , மருத்துவம் இவற்றில் மனித குடும்பத்துக்குப் பயனுள்ள வற்றை பகிர்ந்து தருபவர்களுக்கும் , மற்றும் , அமைதியை நிலை நாட்டுவோர்க்கும் நோபல் பரிசை நிறுவினார் .



நாம் இறக்கும் போது நம்மைப் பற்றி பிறர் என்ன கூறுவர் மற்றவர்கள் பார்ப்பது போல நம்மைக்காணக் கற்றுக் கொள்வோம் . நம் நெஞ்சறிய நம் வாழ்க்கையைச் சீர்தூக்கிப் பார்ப்போம் . கடவுள் நம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் கணக்கே உண்மையானதாகும் . இன்றிரவு நாம் வானகம் செல்ல அழைப்பு வந்தால் , இன்றைய உவமை கூறுவது போல அறிவிலியே எனக் கடவுள் கூறுவாரா? , நீ சேர்த்த பொருட்கள் யாருக்காக ? , நீ கட்டிய வீடு யாருக்காக ? எனக் கேட்பாரா ? .

உலகமெல்லாம் ஒருவர் தமதாக்கினாலும் தம் வாழ்வை மாசு படுத்தி இழப்பாரானால் அதனால் வரும் பயன் என்ன ? என்று இன்றைய உவமை நம்மிடம் கேட்கிறது . நாம் எங்கெல்லாம் இன்னும் வளரவேண்டியுள்ளதோ அங்கெல்லாம் வளர்க என இன்றைய உவமை நமக்கு வாழ்த்துக் கூறுகிறது .

 








All the contents on this site are copyrighted ©.