2009-03-02 13:50:47

நம்மால் முடியும்


02மார்ச்2009. கடந்த வாரத்தில் ஒரு பிரபல மருத்துவமனை ஒன்றிற்கு தெரிந்த நோயாளி ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அங்கு நடந்த ஒரு சம்பவம் பற்றித் தாதியர் ஒருவர் விவரித்தார். அந்த அறையில் இருந்த இரண்டு நோயாளிகளில் ஒருவரால் எழும்பவே முடியாது. மற்றவர் நடமாடக்கூடியவர். எனவே படுத்த படுக்கையாய்க் கிடந்தவரிடம் மற்றவர் ஒவ்வொரு நாளும் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டு இயற்கை, நடமாடும் மனிதர்கள், நடக்கும் நிகழ்ச்சிகள், வாழ்க்கையை மக்கள் இரசிக்கும் விதம், அதனைச் செலவிடும் விதம் என அத்தனையையும் அவ்வளவு நேர்த்தியாக விவரித்து வந்தார். அதனால் அந்த நோயாளிக்கு ஒவ்வொரு நாளும் நேரம் போவதே தெரியாமல் இருந்தது. நோயின் வேதனையும் குறைந்து வந்தது. அவரில் வாழவேண்டுமென்ற ஒருவித தன்னம்பிக்கையும் துளிர்விடத் தொடங்கியது. திடீரென மற்றவர் இறந்துவிட்டார் ஏனெனில் அவர் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த நோயாளிதான். அந்தக் கட்டில் காலியானவுடன் முதலாமவர் தாதியரிடம் தயவு செய்து என்னை அந்தக் கட்டிலுக்கு மாற்றுங்கள். நானும் அவர் விவரித்தவைகளை இரசிக்க வேண்டும் என்றார். அந்தக் கட்டிலுக்கு மாற்றப்பட்டவுடன் மெதுவாக ஜன்னல் வழியே எட்டிப் பார்க்க முயற்சித்தார். ஆனால் அவர் பார்த்தது வெறும் சுவரையே. இறந்தவர் வர்ணித்து வந்த எந்த மலையும் இயற்கை காட்சிகளும் இல்லை. எனவே அவர் தாதியரிடம் கேட்ட போது அவர்கள் சொன்னார்கள்- சுவர்தான் இருக்கின்றது. உண்மையில் இறந்தவர் கண்பார்வையற்றவர் என்று.

அன்பர்களே, கண் தெரியாத அவருக்கு, கருவறைக்கும் கல்லறைக்கும் இடையில் அத்தனையும் சிலுவை மரங்களாக இருந்தாலும், தனது இறப்பில் இன்னொருவர் நெஞ்சில் நம்பிக்கையை, தன்னம்பிக்கையை விதைத்துவிட்டு பிறவிப் பயனை அடைந்து விட்டார். ஆம். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருமே எதிலும் வெற்றி பெறவேண்டும்; எதையாவது சாதிக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். அவ்வாறுதான் விரும்ப வேண்டும். அதற்கு முதலில் தேவைப்படுவது தன்னால் சாதிக்க முடியும் என்று மனப்பூர்வமாக, முழுமையாக தன்னை நம்பும் தன்னம்பிக்கை தான். கடந்த வாரத்தில் எல்லா ஊடகங்களும் ஆஸ்கார் விருது நாயகர்கள் பற்றிய செய்திகளையும், அவர்களுடன் நடத்திய பேட்டிகளையும் பிரசுரித்து பாராட்டு மழை பொழிந்திருந்தன. ஆஸ்கார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் அளித்த பேட்டியில் இந்த சில வரிகளும் இருந்தன. அவை என்னவெனில்,

“இந்த விருதுகள் மூலம் இந்தியர்கள் ஒரு செய்தியை உணர்ந்து கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை, நன்னம்பிக்கை மட்டுமே இனி இந்தியர்களின் இலட்சியமாக இருக்க வேண்டும்”

என்றார். ஆம் ரஹ்மான் அவர்களுக்கு, என்னாலும் முடியும், நம்மாலும் முடியும் என்ற சாதனைக்கு அடித்தளமாக இருந்தது தன்னம்பிக்கை, நன்னம்பிக்கை என்று புரிய முடிகிறது.

“தன்னம்பிக்கை கண்டேன், அதில் தளரா உள்ளம் கண்டேன், எண்ணம் மிளிரத் தன்னம்பிக்கை, எதிலும் உயர தன்னம்பிக்கை, அநீதி ஒழிய தன்னம்பிக்கை, அயராமல் உழைக்க தன்னம்பிக்கை, இனிதே வாழத் தன்னம்பிக்கை, புகழைப் பெறத் தன்னம்பிக்கை மனிதா… மனிதா கேட்டிடு, மங்காத வாழ்வைப் பெற்றிடு இந்தப் புனித உலக வாழ்விலே” என்று ஒரு புதுக்கவிதை. இந்த தன்னம்பிக்கையாலே பலர் போற்ற சாதனைகள் படைத்து, என்னால் முடிந்தால், உன்னாலும் முடியும், நம்மாலும் முடியும் என்று ஊக்கமூட்டுகிறார்கள்.

“ஆம். நம்மால் முடியும் ” என்ற ஸ்லோகமே, அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களின் சாதனை கதாநாயகனாக இன்று வலம் வரும் அதிபர் பராக் ஒபாமா தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கியது. அவரின் தன்னம்பிக்கை நிறைந்த இந்த வார்த்தைகளே, புரையோடிப் போயிருந்த நிறவெறிப் புண்ணை அந்த மக்கள் தூர எறிந்து விட்டு மனித நேயம் மிக்கவர் வாழும் அமெரிக்கா நாமேயென்று உலகினருக்கு காட்ட வைத்தது. தன்னம்பிக்கைக்கு அவர் சரியான எடுத்துக் காட்டாகத் திகழ்ந்ததே, எந்த இன மக்களை அடிமையாக நடத்தினார்களோ அந்த இன மக்களில் ஒருவரை அதிபராகத் தேர்ந்தெடுக்க வைத்துள்ளது.

இந்த “நம்மாலும் முடியும்” என்பதை இந்தியாவின் “இஸ்ரோ” விஞ்ஞானிகளும் சாதித்திருக்கிறார்கள். தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதில் ஆதிக்கம் காட்டி வந்த அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளை இந்திய விஞ்ஞானிகள் வியக்க வைத்துள்ளனர். இன்று நம்மாலும் முடியும் என, பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கி.மீ. தூரத்தில் உள்ள சந்திரனை ஆய்வு செய்ய “சந்திரயான்-1″ என்ற ஆளில்லா செயற்கைக்கோளை அனுப்பியுள்ளனர். இந்தச் சாதனைக்குப் பின்னால், நம்ம ஊர்த் தமிழர் திரு. மயில்சாமி அண்ணாதுரை திட்ட இயக்குநராக இருந்து சாதித்துக் காட்டியிருக்கிறார் என்பதில் உலகத் தமிழர் எல்லோரும் பெருமைப்படுகிறோம். ஒரு சிறு கிராமத்தில் பிறந்து தமிழ் வழியில் பயின்று உலகளவில் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிற இவர், இந்தச் சாதனையை எளிதில் அடையவில்லை. கவிஞர் கதே சொல்வார்- “நமது செயல் நோக்கத்தில் விடாமுயற்சி அதிகரிக்க அதிகரிக்க அது அமைதியாக செயல்பட்டு, ஆற்றலுடன் முன்னோக்கி நம்மை அழைத்துச் செல்லும்” என்று. தன்னம்பிக்கை, விடா முயற்சி ஆகிய இரண்டு மாபெரும் சக்திகளை அவர் பயன்படுத்தியிருக்கிறார். மேலும், இந்தியர் ஒருவரை சந்திரனுக்கு அனுப்பும் 12 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்தை “இஸ்ரோ”ஆய்வு மைய விஞ்ஞானிகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அம்மைய செயலர் பாஸ்கர் நாராயணன் இஞ்ஞாயிறன்று வேலூரில் அறிவித்துள்ளது நம்மவர் சாதனை பட்டியலை விரிவாக்குகிறது.

உலகில் சாதனையாளர்கள் பலரின் வெற்றியின் இரகசியம் பற்றி வாசிக்கும் போது இவர்கள், “நம்மால் முடியும், என்னால் முடியும்” என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு சரித்திரம் படைத்திருக்கிறார்கள். தரித்திரம் ஒழிய, உண்மை வாழ, உயர்ந்து வாழத் தன்னம்பிக்கை, தன்னம்பிக்கை என்று பலர் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்ந்து வருபவரும் இல்லாமல் இல்லை. இவர்கள், தன்னலமில்லாத் தன்னம்பிக்கையை இவ்வுலக வாழ்வில் ஏற்றிடு என்கிறார்கள். இன்று கம்பியில்லாமலே மின்குறிப்பலைகளை கடத்தும் வண்ணம் தொழில் நுட்பம் வளர்ச்சி அடைவதற்கு விதை போட்டது அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் கண்டுபிடித்த தொலைபேசியே. 1847ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி பிறந்த இந்த ஸ்காட்லாந்து விஞ்ஞானி, இந்தச் சாதனையைப் படைக்க எவ்வளவு தன்னம்பிக்கையுடன் கூடிய முயற்சி செய்திருக்கிறார், தெரியுமா! அவரது 12வது வயதில் அவரது தாய், கேட்கும் திறனை இழந்தார். அவரது மனைவியும் செவிடர் என்றே சொல்கிறார்கள்.

ஒருமுறை சமயப் போதகர் ஒருவர் சிறு குழந்தைகளிடம், “யாரெல்லாம் மோட்சத்திற்கு வர விரும்புகின்றீர்கள், நான் அழைத்துப் போகிறேன்” என்று கேட்க, ஒரேயொரு சிறுவன் மட்டும் கை உயர்த்தவில்லை. அதற்குக் காரணம் கேட்ட போது, நான் அமெரிக்க ஜனாதிபதியாக வேண்டும், ஆகவே இப்போது மோட்சத்திற்கு வர வில்லை என்றான் அச்சிறுவன். இந்தச் சிறுவன் வேறு யாருமில்லை. பிற்காலத்தில் புகழ்பெற்ற அமெரிக்க ஐக்கிய நாட்டின் 16வது அதிபராக விளங்கிய ஆபிரகாம் லிங்கன்தான். ஒருசமயம் குறுகுறுத்த கண்களோடு தன்னை அண்ணாந்து பார்த்த சிறுவன் பில் கிளிட்டனிடம் அமெரிக்காவின் 35வது அதிபரான ஜான் கென்னடி, “உன் வருங்கால குறிக்கோள்” என்னவென்று கேட்டார். அதற்கு அச்சிறுவன், “உங்கள் இடத்தில் நான் ஜனாதிபதியாக அமர வேண்டும்” என்றானாம்.

இந்தத் தன்னம்பிக்கை, சந்தர்ப்ப சூழ்நிலைகளால், அவ்வப்போது குறையலாம். அந்த நேரங்களில் நம்மால் முடியும் என்று சொல்லி ஏற்கனவே சாதித்துக் காட்டிய பல சாதனையாளர்கள் சென்ற பாதையை, அந்தப் பாதையில் அவர்கள் சந்தித்த சவால்களை, கடந்து சென்ற காட்டாறுகளை, தகர்த்து எறிந்த தடைகளை, சகித்து மீண்ட சோகங்களைப் பற்றித் தெரிந்து கொண்டாலே போதும். அவைகளைத் தெரிந்து கொள்ளத் தெரிந்து கொள்ள, நமது மனங்கள் விரிந்து கொள்ளும். விரிந்த மனம் எந்த வேதனைக்கும் சுருங்காது, சுருளாது. விரிந்த மனதில் தான் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறந்து கொண்டே இருக்கும். இவர்களின் ஆரம்ப கால வாழ்வு மிக சாதாரணமானது. குடும்ப சூழலோ, பிறந்து வளர்ந்த சூழலோ கல்வியறிவோ எளிமையானது. மின்விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், வீட்டின் வறுமை காரணமாக சிறுவயதில் பஞ்சு மிட்டாய், தினத்தாள், காய்கறி ஆகியவை விற்றவர். இள வயதிலே செவித்திறனும் பாதிக்கப்பட்டவர்தான்.

நம்மால் முடியும் என்று தன்னம்பிக்கையை ஊட்டியவர்கள் கடவுள் நம்பிக்கையையும் தவறாமல் பதித்துள்ளார்கள். இரண்டு ஆஸ்கார் விருதுகள் வாங்கிய ஏ.ஆர்.ரஹ்மான், எல்லாப் புகழும் இறைவனுக்கே என்றுதான் சொன்னார். எனது விருதுக்காகப் பலர் செபித்தனர் என்றார். ஆறாவது நீள்வட்டப்பாதையான பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து சந்திரயான்-1 செயற்கைக் கோளை நிலவின் பாதையில் சுற்றவிட்ட அந்நேரத்தில், கடினமான அந்த செயல்பாடு வெற்றியைப் பெறவேண்டுமென்று திரு. மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பிறந்த கோதவாடி ஊர் மக்கள் ஆலயம் சென்று வழிபாடு நடத்தியிருக்கிறார்கள். அன்பர்களே! எவ்வளவுதான் நம்மால் முடியும் என்று சொல்லி நாம் செயலில் இறங்கினாலும் கடவுளின் திருக்கரம் அச்செயலைத் தீண்ட வேண்டுமென்பதே எல்லாரின் பிரார்த்தனை. அதுதான் உண்மையும்கூட. அவனன்றி அணுவும் அசையாது அல்லவா!

வானொலி நண்பர்களே! உன் விருப்பம், வேலையானால் சாதிப்பு சரித்திரம் ஆகும். எனவே தன்னம்பிக்கை தரும் எண்ணங்களை நேராக்கு. வாழ்வின் வண்ணங்களையும் சீராக்கு. நல்லதோர் அடித்தளம் அமைத்து உன்னதமாய் வாழ்ந்து காட்டு. வாழ்க்கை என்னும் காலச்சக்கரம் சுழலும் வகையை நம்மால் கண்டு பிடிக்க முடியுமா? அதன் கோலம் வரையும் கோடுகளைத்தான் அறிய நம்மால் முடியுமா? அது இறைவன் விட்ட வட்டச் சக்கரம். எனவே அதனைச் சுழற்றிவிட முடியாது. இவ்வாழ்க்கையில் இன்பமும் துக்கமும் தேர்ச் சக்கரம் போல் சுற்றி சுற்றி வரும். எனவே கடவுள் என்னும் அச்சாணியில் நம்பிக்கை கொண்டு தன்னம்பிக்கை எனும் களிம்பைப் பூசி தொடரு பயணத்தை. அப்போது எல்லாம் உன்னால் முடியும், நம்மால் முடியும் என்பதன் சாதனைகள் வெளிப்படும். இவ்வுலகில் நீ உண்மையில் யார் என்பது முக்கியமல்ல. நீ யாராக பிறரால் அறியப்படுகிறாயோ அதுதான் முக்கியம்.





 








All the contents on this site are copyrighted ©.