2009-02-28 12:17:46

தவக்காலத்தின் முதல் ஞாயிறு- மறையுரை . 28-02-09.


நற்செய்தி தூய மாற்கு 1 , 12- 15 .



தவக்காலம் ஒரு தனிக்காலம் . இறைவன் நம் அருகில் உள்ள காலம் .இறைவனிடம் நாம் திரும்பி வருவதற்கு ஏற்ற காலம் . மனமாறறத்தின் காலம் .மறுவாழ்வை மனதிற்குக் கொண்டு வரவேண்டிய காலம் .

இன்றைய வாசகம் இயேசு பாலைவனத்தில் சோதிக்கப்பட்டதையும் , அவருடைய போதனையின் சுருக்கத்தையும் எடுத்துக் கூறுகிறது . இறைவன் என்றும் நம்மோடு இருக்கிறார் என்பதுதான் நற்செய்தி . இந்நற்செய்தியை நாம் இரண்டு வழிகளில் வாழ்வுப் படுத்தலாம் . சோதனைகளைக் கண்டு தளர்ந்துவிடக்கூடாது . மனம் திரும்பிய புதிய வாழ்வு வாழவேண்டும் .

தீவிர விளையாட்டு வீரர்கள் தங்களை நன்கு தயார் செய்கிறார்கள் . திறமையான நடிகர்கள் நல்ல பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள் .நல்ல ஆசிரியர்கள் வீட்டில் தங்களைத் தயாரித்துக் கொள்கிறார்கள் . தமது வாழ்வின் பணியைத் தொடங்குவதற்கு முன்னர் பாலைவனத்துக்குச் சென்று உறுதிப்படுத்திக் கொள்கிறார் .பாவமே அறியாத இயேசு சாத்தானுக்கு அடிபணியாதிருக்க பசித்திருப்பதும் , தனித்திருந்து செபிப்பதும் நம் நெஞ்சைத் தொடுகின்றன .மேலும் நம்மை திகைக்க வைத்து சிந்திக்க வைக்கின்றது .

சிலர் தவக்காலத்தில் எதையாவது விட்டுவிடுவார்கள் . சிலர் சில நல்ல காரியங்களை தமது பழக்கத்துக்குக் கொண்டுவருவார்கள் . தவக்காலத்தின் முடிவில் நாம் பயனுள்ள முறையில் எதையாவது அடைந்தோமா எனப் பார்க்கவேண்டும் . அல்லது எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என உணர்கிறோமா . நம்மில் மாற்றம் ஏதும் இல்லை , நம்மில் பழைய தவறான போக்குகளே இன்னும் இருக்கின்றன , பழைய பாவ நாட்டங்களும் சோதனைகளும் நம்மை தடுமாறச் செய்கின்றன , பழைய தவறுகளையே திரும்பத் திரும்பச் செய்கிறோம் என்ற நிலையில் இருக்கிறோமா . ஒருவேளை நம்முடைய முயற்சிகள் ஆழமாக வேரூன்றி நம்மில் மாற்றத்தைத் தராதிருக்கலாம் . நாமெல்லாம் கடுமையான நோய்க்கு சாதாரணச் சிகிச்சையையே அளிக்கும் மருத்துவர்களைப் போன்றவர்கள். நச்சு மரத்தின் வேரை வெட்டி வீழ்த்தாது உச்சிக் கொம்புகளை வெட்டிக் கொண்டிருப்பதில் என்ன பயன் .



மாமரம் சரியாக காய்ப்பதில்லை என்பதால் தோட்டக்காரர் நன்கு கொத்திவிட்டு , உரமிட்டு , நீர் பாய்ச்சியும் மரம் பலனே தராது என்ற நிலைக்கு வந்துவிட்டபோது அதை வெட்டிவிட்டு வேறு ஒரு மரத்தை நட்டுவைப்பதுதான் சரியான செயலாகும் . ஒன்று மாங்கனி சாப்பிடுவதை மறக்க வேண்டும் . அல்லது பயனில்லாத மரத்துக்குப் பதிலாக அதை நீக்கிவிட்டு பயன் தரக்கூடிய நல்ல வகை மரத்தை நடவேண்டும் . நாம் அப்படிப்பட்ட மாற்றங்களைக் கொண்டுவரச் சம்மதிப்போமா . அப்படிப்பட்ட முடிவுகளை எடுக்குமாறு மக்களுக்கு இயேசு அழைப்பு விடுத்தார் . பழைய துணியில் புதுத் துணியை ஒட்டுப்போடுதல் பயன் தராது . புதிய ஆடை வேண்டுமென்றால் பழையதை கழித்துவிடவேண்டும் . புதிய திராட்சை ரசத்துக்கு பழம் சித்தைகள் பயன்பட மாட்டா . பழைய சித்தைகளை வீரியமுள்ள புது திராட்சை ரசம் உடைத்துவிடும் .

இத்தவக்காலத்தில் நாம் நல்லெண்ணத்தோடு பழைய துணிகளில் புதுத்துணிகளை ஒட்டுப் போடும் காரியத்தைச் செய்தால் பயன் இல்லை . பழுது பட்ட மரத்தை வெட்டி எறிந்து விட்டு புது மரத்தை நடுவதற்குப் பதிலாக பழைய மரத்திற்கு மருத்துவம் செய்வதில் என்ன லாபம் . இது பயன் தராத முயற்சியாகும் .



நம்முடைய பழைய கால அனுபவங்களை ஆராய்ந்து எங்கெல்லாம் மாற்றம் தேவையோ அங்கு மாற்றத்தைக் கொண்டுவர நாம் தயாராகவேண்டும் .

நம் வாழ்வை புனிதமானதாக மாற்றுவதற்கு முயற்சியும் தியாகமும் தேவை . கடவுளுடைய அருள் துணையும் அவசியம் தேவை . அவருடைய துணையின் நம்மால் ஏதும் செய்ய இயலாது . குடிபோதையில் இருக்கும் ஒருவரால் கோடு போடமுடியும் . ஆனால் அக்கோடு நேர் கோடாக இராது . நேராகக் கோடு போடுவதற்குப் பயிற்சியும் முயற்சியும் தேவைப்படும் . அதேபோலத்தான் வாழ்வென்னும் கோடும் . நேர்மையாக வாழ்வதற்கு நாம் நம்மைப் பண்படுத்த வேண்டும் .

தவக்காலம் நம் வாழ்வை உற்று நோக்கி தேவையான மாற்றங்களைக் கொண்டுவர அழைப்பு விடுக்கிறது – அபாயச் சங்கு ஊதுகிறது . நாம் நம்மையே புதுப்பித்துக் கொள்ளவில்லையென்றால் மாற்றம் கொண்டுவர ஓர் அருமையான வாய்ப்பை நழுவ விட்டுக் கொண்டிருக்கிறோம் . பாலை வனத்தில் இயேசு தமக்கு வந்ந சோதனைகளை வென்று சாத்தானை விரட்டியடிப்பதைக் காணும் நாம் நாமும் அவ்வாறே செய்யவேண்டும் எனச் சிந்திக்க வேண்டாமா . அவருக்கும் பொது வாழ்வைத் தொடங்குவதற்கு முன்னர் கடுமையான திட்டங்களைத் தீட்டவேண்டியிருந்தது .

யோவேல் இறைவாக்கினர் அறைகூவல் விடுக்கிறார் .... உங்கள் இதயங்களைக் கிழித்துக் கொள்ளுங்கள் , உங்கள் ஆடைகளை அல்ல . இத்தவக்காலம் நம் மனங்களைத் தொடவில்லை , நம் வாழ்வில் அவசிமான மாற்றங்களைக் கொண்டு வரவில்லையென்றால் பின்னர் தவக்காலத்தால் யாதொரு பயனுமில்லை . நம் இதயங்களில் மாற்றம் கொண்டுவருதல் இறை அருளை நிறைவாகப் பெற்றுத் தந்து நம் வாழ்வில் புது வசந்தத்தைக் கொண்டுவரும் .

தவக்காலம் தியாகமும் , தவமும் நிறைந்தது மட்டுமல்ல , அது நமக்குப் புதுப்பிறப்பு அளித்து நம்மை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடிக்கும் . தவக்காலம் வசந்த காலம் . தவக்காலம் வளர்ச்சியின் காலம் .

நம் வாழ்வின் வெளிப்புறத்தில் மாற்றம் கொண்டுவர மனதுக்குள் மாற்றம் தேவை . அதற்குச் சுய கட்டுப்பாடு தேவை .பழைய பழக்கங்களை நீக்கி நல்ல புதிய பழக்கங்கங்களை கைக்கொள்ள வேண்டும் . முக்கியமாக நாம் செபம் செய்து இறைவனின் அருளை வேண்டிப் பெறவேண்டும் .

ஒவ்வொரு வசந்த காலத்திலும் உலகைப் புதுப்பிக்கும் கடவுள் நம்மையும் புதுப்பித்து நாம் பாஸ்காப் பெருவிழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடி மகிழ அருள் தருவாராக .



 








All the contents on this site are copyrighted ©.