2009-02-23 14:57:39

எல்லாரும் மாண்புடன் வாழ்வதற்கான ஒரு சமுதாயம்


23பிப்.2009. இந்த வார அலசலுக்காக கடந்தவாரப் பத்திரிகை ஒன்றை வாசித்துக் கொண்டிருந்த போது, “எப்படியோ...நீதி தட்டுத் தடுமாறி பிழைத்திருக்கிறது, இரக்கமில்லா பாவிகள்...கிடைத்தது தூக்கு.... ” என்ற வரிகள் நம் கவனத்தை ஈர்த்தன. உத்தரபிரதேச மாநிலத்தின் நிட்டாரி கிராமத்தில் இளம்பெண்கள், குழந்தைகள் என 17 பேரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த “தொடர் கொலைக்காரர்கள்” மொனீந்தர் சிங் மற்றும் அவனுடைய வேலையாள் சதீஷ் என்ற சுரீந்தர் கோலிக்கு தூக்குத் தண்டனை அளித்து தீர்ப்பு வெளியாகியதைத் தொடர்ந்து எழும்பிய நிம்மதி பெருமூச்சு கூற்று இது. வரலாற்றில் நீதிக்கான, உரிமைக்கான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நீதி கிடைக்கும் என்ற ஆதங்கத்தில் ஐக்கிய நாடுகள் நிறுவன அலுவலங்கள், வல்லரசு நாடுகளின் தூதரகங்கள் போன்வற்றின் முன்னர் தீக்குளிப்புகளும் போராட்டங்களும் இந்நாட்களில் அதிகமாக அரங்கேறுகின்றன. சமூகங்களில் நீதிதேவதை அவமதிக்கப்படுவதை உணர்ந்துதான் என்னவோ பன்னாட்டு அமைப்பான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 24வது பொது அவை, கடந்த நவம்பரில், ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 20ம் தேதியை சர்வதேச சமூகநீதி தினமாகக் கடைபிடிக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இந்த ஆண்டு பிப்ரவரி 20, கடந்த வெள்ளிக்கிழமை முதல் சர்வதேச சமூகநீதி தினம் கடைபிடிக்கப்பட்டது. அன்றைய தினத்திற்கென ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் வெளியிட்ட செய்தியில், கடும் ஏழ்மை, பசி, பாகுபாடு, மனித உரிமைகள் மறுக்கப்படுதல் ஆகியவை இவ்வுலகின் நன்னெறிச் சூழலில் தழும்பாகவே தொடர்ந்து காண்ப்படுகின்றன, எனவே உலக அளவில் சமூக நீதியின் முக்கியத்துவம் உணரப்படுமாறு வலியுறுத்தினார்.

சமூகநீதி என்பது என்ன என்று பத்மஸ்ரீ திருமதி கிருஷ்ணம்மாள் ஜெகநாதனிடம் கேட்டோம். ஏனெனில் இவர் ஏறத்தாழ நாற்பது வருடங்களாகத் தமிழகத்தில் சமூகநீதி மறுக்கப்படுவோருக்காக உழைத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார். பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும் பெற்றிருப்பவர்.

RealAudioMP3 ம். சமுதாயத்தில் ஒவ்வொருவரும் சுதந்திரமாக, அமைதியாக வாழ்வதற்கு வழி அமைப்பதே சமூகநீதி. உயர்திணை மனிதனை அஃறிணை போல் நடத்தும் கொடிய உயர்திணை விலங்குகள் வாழும்வரை சமூகநீதி எட்டாக்கனியே. இச்சர்வதேச சமூகநீதி தினத்தன்று பேசிய ஐ.நா மனித உரிமைகள் அமைப்புத் தலைவர் திருமதி மேரி இராபின்சன் RealAudioMP3 என்ன சொல்கிறார் என்றால்,

உலகில் மனித உரிமைகள் சாசனம் பிரகடனப்படுத்தப்பட்டு அறுபது ஆண்டுகள் ஆகியும் மனித உரிமை விழுமியங்கள் மறக்கப்பட்டு வருகின்றன. எனவே சமூகநீதி இடம்பெற வேண்டுமானால் மனிதனின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், உணவு, சுத்தத் தண்ணீர், சுகாதாரம், கல்வி, குடியிருப்பு, மாண்புடன்கூடிய வேலை ஆகியவை வழங்கப்படவும் நாடுகளின் கொள்கைகள் சீரமைப்புச் செய்யப்படவும் வேண்டும் என்கிறார். மேலும், சமூகநீதி என்பது ஒவ்வொருவருக்கும் தரமான வேலைவாய்ப்புகள் கிடைப்பதாகும். தரமான வேலைவாய்ப்பு என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் சமூகப் பாதுகாப்பு, தரமான ஊதியம், தரமான வாழ்வு, அடிப்படை உரிமைகள் முழுமையாய் மதிக்கப்படல் ஆகியவை கிடைக்க வேண்டும், ஆனால் இன்று நாடுகளை பதம் பார்த்துள்ள உலகளாவியப் பொருளாதாரப் பிரச்சனையில் உலகில் ஒரு கோடியே 50 இலட்சம் வேலைகள் அச்சுறுத்தலில் உள்ளன, 20 கோடிப் பேர் கடும் வறுமையில் வாழ்கின்றனர், இந்நிலை கடந்த பத்தாண்டுகளின் சாதனைகளைப் புரட்டிப் போட்டுள்ளது, எனவே சமூக நீதிக்கான போராட்டத்தில் நாம் வெற்றி பெற வேண்டுமானால் முதலில் இப்பிரச்சனைகள் மீது வெற்றி அடைய வேண்டும் என்கிறார் சர்வதேச வணிகக் கழகப் பொதுச் செயலர் கி ரைடர். RealAudioMP3

கத்தோலிக்கத் திருச்சபை இந்த சமூகநீதியை ஏழு முக்கிய தலைப்புகளில் வலியுறுத்தி வருகின்றனது. அதன் சமூகப் போதனைகளின் அடிப்படைக் கோட்பாடே மனித வாழ்வின் புனிதம் போற்றப்பட வேண்டும் என்பதுதான். எனவே மனித மாண்பும் காக்கப்பட வேண்டும். ஒரு சமூகத்தின் முதலும் அடிப்படைக் கூறுமாக இருப்பது குடும்பம். குடும்பங்கள் இணைந்து சமூகங்களை உருவாக்குகின்றன. சமூகங்கள் நாடுகளை அமைக்கின்றன. எனவே குடும்ப அமைப்பு கட்டிக்காக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மனிதனும் வாழ்வதற்கும் வாழ்வின் தேவைகளையும் கொண்டிருப்பதற்கான அடிப்படை உரிமையைக் கொண்டுள்ளான். எனவே அவன் வேலைவாய்ப்பு, சுகாதார வசதிகள், கல்வி போன்ற காரியங்கள் உள்ளிட்ட தரமான வாழ்வு வாழவும், சமய சுதந்திரம், பேச்சு சுதந்திரம், மனச்சான்றின் சுதந்திரம் ஆகியவற்றுடன் வாழவும் வேண்டும். சமுதாயத்தில் நலிந்தவர், ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். தரமான வேலை கிடைக்கவும் தொழிலாளரின் உரிமைகள் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படவும் வேண்டும் என்று திருச்சபை தனது சமூகப் போதனைகளில் வலியுறுத்துகிறது

திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அண்மையில் ஒரு சமூகநீதி பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்ட குழுவிடம் பேசிய போது, “ஒரு ஜனநாயகம் முழுமையடைய வேண்டுமெனில் ஒவ்வொரு மனிதனின் அடிப்படைத் தேவைகள் தொடர்புடைய உணவு, இருப்பிடம், கல்வி, சுகாதாரம், உரிமைகள் போன்றவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒரு நேர்மையான ஒருமைப்பாட்டுணர்வு இல்லையெனில் உண்மையான சமூகநீதி இருக்க முடியாது” என்றார். RealAudioMP3

1891ம் ஆண்டு மே 15ம் தேதி, திருத்தந்தை 13ம் சிங்கராயர் வெளியிட்ட “ரேரும் நோவாரும்” என்ற வரலாற்று சிறப்புமிக்க அப்போஸ்தலிக்க திருமடல் அன்றைய சமூகப் பிரச்சனைகளுக்குச் சவாலாக இருந்தது. தொழிலாளரின் திருத்தந்தை, சமூகத் திருத்தந்தை போன்ற புகழாரங்களும் அவரை நோக்கி வர இச்சுற்றுமடல் காரணமாக அமைந்தது.

எனவே சமூகநீதி என்றால் என்ன என்பதை ஓரிரு சொற்களில் அடக்கவேண்டுமெனில், ஒவ்வொரு மனிதனும் அடிப்படைத் தேவைகள், அடிப்படை உரிமைகளைப் பெற்று அவன் மாண்புடன் வாழ வழி அமைப்பதாகும். இது இந்திய அரசியலின் இருஆதாரமான அடிப்படைகளில் ஒன்றாகும். ஆனால் இன்று பிறர் பேசும் சப்தம் கேட்டால் மட்டுமே கையிலுள்ள தட்டை நீட்டி, அம்மா தாயே கண்ணு தெரியலைங்க, பிச்சை போடுங்க என்று கேட்கும் அவலம். அப்பாவிகளின் ஏழ்மையைப் பயன்படுத்தி பிச்சை எடுக்க வைப்பதற்காகவே அவர்களைக் கடத்தி நிரந்தரமாக ஊனமாக்குகின்றன மனிதாபிமானமற்ற குற்றக் கும்பல்கள். ஒருசாண் வயிற்றுக்கு உணவும் உடையும் இருப்பிடமும் இல்லாத பலர் வெளிச்சத்தில் நின்று கொண்டு இருளை மட்டுமே யாசிக்கின்றனர். அவர்களுக்குப் பகல், கனவாக மட்டுமே இருக்கின்றது. இரவு புலர்ந்த பின்னும் வழிநெடுக இருள்தான் அவர்களுக்குத் தெரிகின்றது. அலறல்கள் வரும் திசைகள் அவர்களைப் பயமுறுத்துகின்றன. இவர்கள் வாழ்க்கைக் கடலில் இறங்கி நடக்கத்தொடங்கும் போது வெறும் படுக்கைதான் அவர்களுக்குத் தெப்பமாக மிதந்து கொண்டிருக்கிறது.

இராஜஸ்தான் மாநிலத்தில் சமூகநீதி மறுக்கப்படும் குஜ்ஜார் இனத்தவர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி போராட்டம் நடத்தினர். ஆடுமேய்ப்பதைக் குலத் தொழிலாகக் கொண்ட இவர்கள் ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தின் போது குற்றப் பரம்பரையினராக வகைப்படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்டவர்கள். இச்செவ்வாய்க்கிழமை டெல்லி நாடாளுமன்றத்தின் முன்னர் தலித் கிறிஸ்தவர்களின் உரிமை கோரி தர்ணா நடைபெறுகின்றது. தொழிற்வளர்ச்சியடைந்த ஜி-8 நாடுகளில் ஒன்றான இத்தாலியில்கூட பசிபோக்கப் கையேந்துகிறவர்களையும் பெரிய கட்டிடங்களின் படிகளில் நடுங்கும் குளிரில் தூங்குகிறவர்களையும் காண முடிகின்றது.

அன்பர்களே, சமூகநீதிக்கு எதிரான புதர்களை எரிக்க ஓர் அக்னிச் சுடரே போதுமானது. தாமதமாக அளிக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதி என்பார்கள். இன்று எல்லார்க்கும் சமூகநீதி எட்டவில்லைதான். ஆயினும் சமூகநீதி தானாகத் தேடிவரும் என்று அடைபட்டக் கூண்டுக்கிளியாய் சலுகைகளுக்காகச் சிறைப்பட்டுக் கிடந்தால் சீரழிவுதான் மிஞ்சும். கிடக்கும் இடத்தில் தானாக வந்து விழுவதை வாய் திறந்து தின்று வாழ்வது மலைப்பாம்புக்கென்றால் ஏற்றதாக இருக்கலாம். ஆனால் மனிதன் அப்படி இருந்தால் அது அவனது மாண்புக்கு இழுக்கு. மாறாக பூமியிலிருந்து வெளிவரும் விதையின் சுதந்திர வேள்வியைப் பின்பற்றி வாழப் பழக வேண்டும்.

ஒருமுறை பெருந்துறவியான இரமண மகரிஷி, தரையில் சிதறிக் கிடந்த அரிசிகளை ஒவ்வொன்றாகப் பொறுக்கிக் கொண்டிருந்தாராம். அதைப் பார்த்த பக்தர்கள், சவாமி நமது சமையல் அறையில் பல அரிசி மூட்டைகள் இருக்க, இந்தச் சில அரிசிகளைப் பொறுக்க இவ்வளவு துன்பப்பட வேண்டுமா என்று கேட்டனர். அதற்கு அவர், இந்த அரிசிக்குள் உழவர்களின் கடும் உழைப்பு இல்லையா? மழை, நீர், சூரியனின் ஒளி இல்லையா? இனிமையான காற்று மென்மையான மண் இருப்பதை நீங்கள் உணரவில்லையா? இவற்றையெல்லாம் நீங்கள் உணர்ந்தால் ஒவ்வோர் அரிசிக்குள்ளும் இறைவனின் அருள் இருப்பதை உணருவீர்கள். அவற்றை உங்கள் கால்களால் மிதித்து வீணாக்கமாட்டீர்கள் என்றார்.

அன்பனே, ஒவ்வொன்றிலும் இறைவனின் அருளை, ஒவ்வொரு மனிதரிலும் இறைவனின் சாயலைக் கண்டால் எல்லாரும் மாண்புடன் வாழும் ஒரு சமநீதி சமுதாயம் உருவாகும். எனவே அனைவரும் மாண்புடன் நடத்தப்பட, அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்க சாதாரணர்களாகிய நாம் என்ன செய்ய முடியும்? இந்த வார அலசல் என்று தலைப்பிட்டு எழுதுங்கள் உங்கள் சீரிய சிந்தனைகளை.








All the contents on this site are copyrighted ©.