2009-02-19 12:00:53

வழிபாட்டு ஆண்டின் 7 ஆம் ஞாயிறு . 22-02—9 .

நற்செய்தி தூய மாற்கு . 2 , 1- 12 .


சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நகூமுக்குச் சென்றார் . அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று . பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று . அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார் . அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர் . மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை . எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர் . இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு , முடக்குவாதமுற்றவரிடம் , “மகனே , உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார் .

அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர் “இவன் ஏன் இப்படிப் பேசுகிறான் ? . இவன் கடவுளைப் பழிக்கிறான் . கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும் ? என உள்ளத்தில் எண்ணிக்கொண்டிருந்தனர் . உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து , அவர்களை நோக்கி “உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன் . முடக்கு வாதமுற்ற இவனிடம் ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்பதா , எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்பதா ? எது எளிது . மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும்” என்றார் . எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி “நான் உனக்குச் சொல்கிறேன் ,நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ” என்றார் . அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார் . இதனால் அனைவரும் மலைத்துப்போய் “இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே” என்று கூறிக் கொண்டு கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர் .








All the contents on this site are copyrighted ©.