2009-02-19 15:45:00

திருத்தந்தை பிரிட்டனுக்குத் திருப்பயணம் மேற்கொள்ள பிரதமர் ப்ரவுன் அழைப்பு


19பிப்.2009. திருத்தந்தை பிரிட்டனுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளத் தான் அழைப்பு விடுத்ததாக பிரிட்டன் பிரதமர் கோர்டன் ப்ரவுன் இன்று நிருபர்களிடம் கூறினார்.

இத்தாலிக்கான இச்சுற்றுப் பயணத்தின் ஒருபகுதியாக வத்திக்கானில் இன்று திருத்தந்தையைச் சந்தித்த பின்னர் நிருபர்களுக்குப் பேட்டியளித்த பிரிட்டன் பிரதமர் ப்ரவுன், திருத்தந்தையை பிரிட்டனுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளத் தான் அழைப்பு விடுத்ததாகவும் ஆயினும் அது எப்பொழுது இடம் பெறும் என்பதற்கான எந்த குறிப்பும் இல்லை எனவும் கூறினார்.

இவ்வழைப்பை திருத்தந்தை மிகவும் வரவேற்றதாகவும், இங்கிலாந்தில் ஆங்கிலிக்கன் சபையிலிருந்து கத்தோலிக்கத்துக்கு மாறிய முக்கிய பிரமுகர்கள் பலரில் ஒருவரான கர்தினால் ஜான் கென்றி நியுமென்னின் முத்திப்பேறுபெற்ற நிகழ்வையொட்டி திருத்தந்தை பிரிட்டனுக்கு வரலாம் என்று தான் பரிந்துரைத்ததாகவும் ப்ரவுன் கூறினார்.

எனினும் இம்முத்திப்பேறுபெற்ற நிகழ்வுக்கு இன்னும் தேதி குறிக்கப்படவில்லை. இது இவ்வாண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

1982ல் திருத்தந்தை 2ஆம் ஜான் பவுல் பிரிட்டனுக்குத் திருப்பயணம் மேற்கொண்டதே ஒரு திருத்தந்தையின் அந்நாட்டுக்கான கடைசி திருப்பயணமாகவுள்ளது.

மேலும் பிரிட்டன் பிரதமர் கோர்டன் ப்ரவுன், இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியைச் சந்தித்து உலக பொருளாதார பிரச்சனைகள் பற்றிப் பேசினார். வருகிற ஏப்ரலில் இலண்டனில் நடைபெறவுள்ள ஜி-20 நாடுகளின் உச்ச மாநாட்டிற்கும்

வருகிற ஜூலையில் இத்தாலியயின் சர்தீனியாவில் நடைபெறவுள்ள ஜி-8 நாடுகளின் உச்ச மாநாட்டிற்கும் தயாரிப்பதற்கு இச்சந்திப்பு உதவும் என்று இத்தாலிய பிரதமர் அலுவலகம் அறிவித்தது.








All the contents on this site are copyrighted ©.