2009-02-18 14:36:22

மனித வாழ்வு அதன் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் பாதுகாக்கப்பட வேண்டும், திருத்தந்தை


18பிப்.2009. மனித வாழ்வின் மாண்பு அது தாயின் வயிற்றில் கருவான நேரமுதல் இயற்கையான மரணம் அடையும் வரை அதன் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் பாதுகாக்கப்படுவது குறித்த இயற்கை நன்னெறிச் சட்டம் மற்றும் திருச்சபையின் தொடர் போதனைகளைக் காப்பதற்கு அனைத்து கத்தோலிக்கரும் ஒன்றிணைந்து செயல்படுமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக்கொண்டார்.

இன்றைய புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் அமெரிக்க ஐக்கிய நாட்டு பிரதிநிதிகள் அவையின் பேச்சாளர் திருமதி நான்சி பெலோசி மற்றும் அவருடன் வந்திருந்த குழுவைச் சந்தித்த அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

மனித வாழ்வு அதன் எல்லா நிலைகளிலும் பாதுகாக்கப்படுவதற்கு நீதியான சட்டங்களை உருவாக்குவதற்கென நன்மனம் கொண்ட அனைவரின் பணியில் சட்ட அமைப்பாளர்களும் நீதிபதிகளும் சமுதாய பொதுநலனுக்குப் பொறுப்பானவர்களும் சிறப்பாக ஒத்துழைக்குமாறு விண்ணப்பித்தார் திருத்தந்தை.

ஏறத்தாழ 20,000 பேர் கலந்து கொண்ட இப்புதன் பொது மறைபோதகத்தின் தொடக்கத்தில், இவ்வாண்டில் முதன்முறையாக இச்சதுக்கத்தில் கூடியுள்ளோம், இன்று குளிராக இருந்தாலும் மழையோ பனிப்பொழிவோ இல்லை, எனவே அதற்கு நன்றி சொல்வோம் என்று பயணிகளை சிரிக்க வைத்து மறைபோதகத்தைப் பல மொழிகளில் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.