2009-02-17 16:26:15

விவிலியத் தொடர் – 17-02-08 .

 


நாம் இன்று கிறிஸ்துவின் உவமைகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம் . இயேசுவின் போதனைகள் நமக்கு நான்கு நற்செய்தி நூல்கள் வழியாக வந்துள்ளன . அவர் இங்கும் அங்கும் பேசிய கருத்துள்ள கதைகள் நமக்குக் கிடைத்துள்ளன . மக்களுக்கும் தம் சீடர்களுக்கும் அவர் அறிவுறுத்துவதற்காக வழங்கிய கதைவழிப் போதனைகள் நமக்குக் கிடைத்துள்ளன . கடவுளைப் பற்றிய அறியமுடியாத மறை உண்மைகள் நமக்கு உவமைகள் வழியாக வந்துள்ளன . கிறிஸ்தவர்களுக்கு உவமைகள் மிகவும் பிடித்தமான விவிலியப் பகுதிகள் .

உவமைகள் நம்மை கவர்ந்து இழுக்கும் தன்மையுடையவை . மனத்தில் அவை கதை வழியாக ஆழமாக சித்திரம் ஒன்றை வரைந்து வண்ணம் தீட்டிவிடுவதால் அவை போதனை செய்வதற்கு ஏற்ற ஊடகமாக உள்ளன . அவை வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டியதோடு வாழ்க்கையைப் பிரதிபலித்தன . அதன் விளைவாக அவை மிக ஆழமான தாக்கத்தை வாழ்வில் ஏற்படுத்தின . ஜப்பான் சிறையில் இருந்த ஒரு கொலையாளி உவமைகளைப் படித்ததால் மனம் திருந்தியதாக வரலாறு உண்டு . தூய லூக்கா நற்செய்தி அதிகாரம் 15, வசனம் 7 இல் படிக்கிறோம் – காணாமற் போன ஆட்டைக் கண்டுபிடித்தவர் என்னோடு மகிழுங்கள் – காணாமல் போன என் ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன் என்பார் . அது போலவே மனம் மாறத்தேவையில்லாத 99 நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிட மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்றார் இயேசு . 2ஆவது உலகப்போரின் போது படகு விபத்தில் சிக்கிய மூவர் பற்றி படகு என்ற நூலில் நாம் அவர்கள் பட்ட சிரமத்தைப் படிக்கின்றோம் . நம்பிக்கை இழந்து இறந்திருக்க வேண்டிய இவர்கள் விவிலியக் கதைகளை மெதுவாகச் சொல்லக் கேட்டு அவற்றை ஆய்ந்து தெளிந்து ஒரு சிறிய ரப்பர் படகில் 34 நாட்கள் தத்தளித்து 1000 மைல்களுக்கு அப்பால் கரை சேர்திருக்கின்றனர் . என் அயலான் யார் என்ற கதை ஆல்பர்ட் ஸ்வைட்சர் போன்ற மிகச் சிறந்த மருத்துவர்களை ஆப்பிரிக்க மக்களுக்குச் சேவை செய்யத் தூண்டியது .

நாம் இன்று புதையல் உவமை.யைப் பற்றிப் பார்ப்போம் . இதை நாம் மத்தேயு நற்செய்தி அதி. 13 , 44 வது வசனத்தில் காண்கிறோம் .

ஒருவர் நிலத்தில் புதைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார் .அவர் அதை மூடி மறைத்துவிட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக் கொள்கிறார் . விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும் .

புதையலைப் பற்றிய கதைகள் எல்லோருக்கும் முதியவருக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும் . நமக்குத் தரப்பட்ட கதையில் புதையல் தான் மையக் கருத்தாகும் . நிலத்தில் புதையல் இருந்ததை வெளியே சொல்லாமல் நிலத்தை வாங்குவது தவறு . ஆனால் கதை சொல்ல வரும் பாடம் புதையலின் முக்கியம் பற்றியது . பாலஸ்தீன நாட்டில் அன்றும் இன்றும் போருக்குப் பஞ்சமில்லை . அதனால் புதையலுக்கும் பஞ்சமில்லை . அவசரத்தில் ஒருவர் தம் தங்கத்தைப் புதைத்து வைக்கலாம். பின்னர் அந்நிலத்தை பண்படுத்தும் ஒருவர் அதைக் கண்டு பிடிக்கலாம் . கண்டுபிடித்தவர் ஏழையாக இருக்கவேண்டும் – அவர் ஒரு விவசாயி . புதையல் அவருக்கு அதிர்ஷ்ட வசமாகக் கிடைக்கிறது . யாரோ மறைத்து வைத்தது கண்டுபிடித்தவருக்குக் கிடைக்கவேண்டும் என்பதும் இறைவனின் திட்டமே . நாம் வாழ்க்கையில் வெறுமனே இருக்கும் போது கடவுள் ஒரு நல்ல வழியைக் காட்டுகிறார் . வாழ்க்கை இருள் சூழ்ந்து நாளைய தினம் எப்படியோ – நேற்றெல்லாம் கொலை செய்வது போல வந்த தரித்திரம் இன்றும் என்னிடம் வருமோ – வந்தால் யாது செய்வேன் என விழித்துக் கொண்டு இருக்கும்போது கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுப்பது போல புதையல் அகப்படுகிறது .

ஒருவருக்குக் கிடைக்கும் மிகப் பெரிய புதையல் கிறிஸ்துவின் உறவும் நட்புமாகும் . நற்செய்தி விலை மதிப்பில்லாத புதையல் . கிறிஸ்துவின் அன்பு நம்மை கிறிஸ்துவாகவே மாற்றும் சக்தி கொண்டது . தமது உடைமைகளையெல்லாம் விற்றுவிட்டு புதையல் மறைந்திருக்கும் நிலத்தை வாங்குவது போல , ஒருவர் கிறிஸ்துவுக்காக தம்மடைய எல்லாவற்றையும் இழக்க நேரிடலாம் . அவ்வாறு செய்வது தியாகம் அல்ல . மாறாக இயேசுவைக் கண்ட மகிழ்ச்சியில் நாம் இழப்பது ஒரு சிறு துரும்பாகும் . கிறிஸ்துவுக்கும் நம்மைச் சீடர்களாகப் பெறுவதில் மகிழ்ச்சிதான் . கிறிஸ்துவுக்காக நான் அனைத்தையும் குப்பை எனக் கருதுகிறேன் என மகிழ்ச்சியோடு முழங்குவார் தூய பவுல் . நான் வாழ்ந்தால் கிறிஸ்துவுக்காக , நான் இறப்பதும் எனக்கு ஆதாயமே . புதையலைப் பார்த்தவன் சென்றான் , தனக்கு உள்ளவற்றையெல்லாம் விற்று வந்தான் . நிலத்தை வாங்கித் தனதாக்கினான் . இறை அரசு அவ்வாறு ஒப்புமையில்லாத விலை மதிப்பில்லாத புதையல் என்பதை இந்த உவமை காட்டுகிறது .

உயர்ந்த குறிக்கோளுக்காக நாம் எதையும் தியாகம் செய்யத் தயங்கக் கூடாது . நாம் அனைவருமே வாழ்வில் புதையல் தேடும் ஒருவரைப் போல முழுமையான உறுதியோடு செயல்படவேண்டும் . நாம் நாளும் மேன்மக்களாக உயர்ந்த மனிதர்களாக வாழ முயன்று வெற்றி பெற்றால் அது வாழ்க்கையில் நாம் பெறும் மாபெரும் வெற்றியாகும் . உலகில் கடவுளுக்கு மேலாக யாதொன்றும் நம்மைத் திசை மாறச் செய்யாது கவனமாக இருப்போமா .








All the contents on this site are copyrighted ©.