2009-02-17 15:08:16

கர்தினால் ஸ்டீபன் கிம்மின் இறப்பிற்கு திருத்தந்தை ஆழ்ந்த அனுதாபம்


17பிப்.2009. தென்கொரியாவின் மூத்த கர்தினால் ஸ்டீபன் கிம் சு-ஹூவான் இறைபதம் அடைந்ததை முன்னிட்டு தனது ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தியை அந்நாட்டுத் தலத்திருச்சபைக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

சியோல் பேராயர் கர்தினால் நிக்கோலாஸ் செயோங் ஜின்சுக் வழி தலத்திருச்சபைக்கு அனுப்பப்பட்டுள்ள இத்தந்திச் செய்தி, கர்தினால் ஸ்டீபன் கிம்மின் இழப்பால் துயருறும் கொரியக் கத்தோலிக்கர் மற்றும் கர்தினாலின் உறவினர்களுக்குத் திருத்தந்தையின் அனுதாபங்களையும் செப உறுதியையும் தெரிவிக்கிறது.

தனது 87வது வயதில் உயிரிழந்துள்ள கர்தினால் ஸ்டீபன் கிம், கொரியாவின் இராணுவ சர்வாதிகார ஆட்சிகாலத்தில் ஜனநாயகத்திற்காக உழைத்தவர் மற்றும் மனித உரிமைகளுக்காகப் போராடியவர்.

கொரியாவின் தெகுவாவில் 1922ம் வருடம் மே மாதம் 8ம் தேதி பிறந்த கர்தினால் ஸ்டீபன் கிம், 1951ல் குருவாகவும், 1966ல் ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். 1969ல் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

கர்தினால் ஸ்டீபன் கிம்மின் இறப்போடு திருச்சபையில் கர்தினால்களின் எண்ணிக்கை 188 ஆகக் குறைந்துள்ளது. இவர்களில் 115 பேரே திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்குட்பட்டவர்கள்.








All the contents on this site are copyrighted ©.