2009-02-17 15:12:03

10 முத்திப்பேறு பெற்றவர்களைப் புனிதர்களாக அறிவிப்பது குறித்த கர்தினால்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது


17பிப்.2009. தொழுநோயாளர்களின் அப்போஸ்தலர் என அழைக்கப்படும் முத்திப்பேறு பெற்ற பெல்ஜிய நாட்டுக்குரு தமியான் தெ வூஸ்டர் உட்பட திருச்சபையின் பத்து முத்திப்பேறு பெற்றவர்களைப் புனிதர்களாக அறிவிப்பது குறித்த கர்தினால்களின் ஆலோசனைக் கூட்டம் வத்திக்கான் அப்போஸ்தலிக்க மாளிகையிலுள்ள கிளமெண்ட்டைன் அறையில் வருகிற சனிக்கிழமை நடைபெறும் என திருப்பீடம் அறிவித்தது.

இந்த பத்துப் பேரும் பின்வருமாறு-

முத்திப்பேறுபெற்ற சிக்மெண்ட் ஷேஸென்சி பெலின்ஸ்கி. இவர் போலந்தின் வார்சாவின் முன்னாள் பேராயர் மற்றும் மரியின் குடும்பத்தின் பிரான்சிஸ்கந் சகோதரிகள் சபையை நிறுவியவர்.

முத்திப்பேறுபெற்ற ஆர்காஞ்சலோ ததினி. இவர் இத்தாலிய மறைமாவட்ட குரு மற்றும்

நாசரேத்தூர் புனித இல்லத்தின் பணி சகோதரிகள் சபையை நிறுவியவர்.

முத்திப்பேறுபெற்ற பிரான்சிஸ்கு கோல் குய்டார்ட். போதகர் சபையைச் சேர்ந்த ஸ்பானிய குருவான இவர், மங்களவார்த்தை அன்னையின் தொமினிக்கன் சகோதரிகள் சபையை நிறுவியவர்

முத்திப்பேறு பெற்ற தொழுநோயாளர்களின் அப்போஸ்தலரும் பெல்ஜியக்குருவுமான ஜோசப் தமியான் தெ வூஸ்டர் இயேசுமரி திரு இதயங்கள் சபையைச் சேர்ந்தவர். 1840ல் பிறந்த இவர் மொலாக்காய் தீவில் தொழுநோயாளர்களுக்குப் பணி செய்து பின்னர் தொழுநோயால் பாதிக்கப்பட்டு 1889 இல் இறந்தார்.

முத்திப்பேறுபெற்ற பெர்னார்தோ தோலோமெய், ஒலிவமலை கன்னிமரி சபையை நிறுவியவர்.

முத்திப்பேறுபெற்ற இரபேல் அர்நெய்ஸ் பாரோன், ஸ்பானிய சிஸ்டெர்சியன் துறவி.

முத்திப்பேறுபெற்ற சாந்தா மரியா அல்வாரெஸ் பெரைரா, போர்த்துக்கீசியரான இவர், புனித கார்மேல் கன்னிமரியின் சகோதரர் சபையை சேர்ந்தவர்.

முத்திப்பேறுபெற்ற ஜெர்ட்ரூட் கொமென்சோலி, இத்தாலிய கன்னிகை மற்றும் திருநற்கருணை சபையை நிறுவியவர்

ப்ரெஞ்ச்க்காரரான முத்திப்பேறுபெற்ற மரியின் திருச்சிலுவை சுகான், ஏழைகளின் சிறிய சகோதரிகள் சபையை நிறுவியவர்.

இத்தாலிய கன்னிகையான முத்திப்பேறுபெற்ற கத்தரீனா வோல்பிசெல்லி, திருஇதயத் தாசர்கள் எனும் பெண்களுக்கான சபையை நிறுவியவர்.








All the contents on this site are copyrighted ©.