2009-02-16 15:15:23

இன்று தேவை அதிசயம் ஒன்று.


பிப்.16,2009. அன்று அந்த அறையில் இருநூறு பேருக்கு மேல் கூடியிருந்தோம். அப்போது ஒருவர் அனைவர்முன் வந்து நின்று அங்கு அமர்ந்திருந்த ஒவ்வொருவரிடமும் ஒரு துண்டு சீட்டைக் கொடுத்து அதில் இரு பெயர்களை எழுதச் சொன்னார். பின்னர் மற்றொருவர் அச்சீட்டுக்களைச் சேகரித்து எல்லார் முன்னிலையிலும் வந்து அவற்றில் ஒன்றை எடுத்தார். உடனே மேடையில் நின்றவர் அச்சீட்டைப் பார்க்காமலே அதில் என்ன எழுதியுள்ளது என்று சொன்னார். அது சரியானது என்று நிரூபணமானது. இப்படி ஒவ்வொன்றாக மற்றவர் சீட்டுகளை எடுக்க, அவற்றில் எழுதியிருந்த பெயர்களையும் சரியாகச் சொன்னார் அவர். அங்கு அமர்ந்திருந்த அனைவருக்கும் ஒரே ஆச்சரியம். இது எங்கோ அல்ல, நாம் இறுதியாக திருச்சியில் நடத்திய நேயர் சந்திப்பில்தான் நடந்தது. இதனை நடத்தியவரும் நமது அபிமான நேயர் உத்திரக்குடி மேஜிக் கலைவாணன் இராதிகாதான். இதேபோல் இன்னும் ஒருசில அதிசயங்களையும் அவர் செய்து காட்டினார். இவரைப் போல பல மேஜிக் நிபுணர்கள், காலிப் பெட்டியைக் காண்பித்துவிட்டு பின்னர் அதிலிருந்து உயிருள்ள பெண்ணைக் காட்டுகிறார்கள். கைதட்டி முட்டையை உடைய வைக்கிறார்கள். ஒரு பொருள் களவு போய்விட்டாலோ, ஒரு குழந்தை காணாமால் போய்விட்டாலோ அது எங்கே இருக்கின்றது என்றுகூடச் சொல்லும் நபர்கள் இருக்கிறார்கள். இன்றைய கணினி உலகமும் எங்கோ நம்மைக் கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது. நாடுகள் போட்டிப் போட்டுக் கொண்டு விண்வெளிக்கு ஆட்களையும் விண்வெளி ஓடங்களையும் அனுப்புகின்றன. இவ்வாறு நம் கண்களையே நம்பமுடியாத அளவுக்கு ஒரு நாளில் எத்தனையோ அதிசயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆயினும் அதிசயங்களுக்கெல்லாம் மேலான அதிசயம் ஒன்று இருக்கின்றது. அது என்ன?

ஒருசமயம் சீடன் ஒருவன் தனது குருவிடம், ஐய்யனே, உங்களை வியப்பில் ஆழ்த்திய அதிசயம் என்ன என்று பணிவோடு கேட்டு நின்றான். அதற்கு குரு, இந்தப் பூமி, ஒவ்வொரு நாள் காலையிலும் புதிதாக இருக்கிறது. அது உனக்கான அத்தனை பொக்கிஷங்களையும் வைத்துக் கொண்டு உனக்காகக் காத்திருக்கிறது. அது ஒரு சிறு புன்னகையாகவோ அல்லது பெரிய வெற்றியாகக்கூட இருக்கலாம். உன்னைச் சுற்றியுள்ள அனைத்தும் கணத்துக்கு கணம் மாறிக் கொண்டே இருக்கிறது. எது வாடிக்கையானது என்று அலட்சியமாக நினைக்கிறாயோ அதையே முழுமையான கவனத்துடன் வேறு கோணத்தில் பார். முற்றிலும் புதிய வாய்ப்புகளும் புதிய நம்பிக்கைகளும் கொண்ட சந்தர்ப்பமாக அது மலரும். வாழ்க்கையின் கணங்களை முழுமையாகக் கவனிக்கத் தெரியாத முட்டாள்கள்தான் வேறு அதிசயங்களைக் நாடிப்போவார்கள் என்றார்.

அன்பர்களே, அதிசயங்களுக்கெல்லாம் மேலான அதிசயம் என்பது ஒருவன் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் ஆனந்தமாக வாழ வழி அமைப்பது. ஒவ்வொரு மனிதனும் துன்பங்கள் வேதனைகளின்றி அமைதியாக வாழ்வதற்கு வழிகாட்டுவது என்று ஆன்றோர்கள் சொல்கிறார்கள். ஆனால் இன்று மனிதன் அமைதியாக வாழ முடிகின்றதா?

இலங்கையில் ஓர் இன அழிப்பு திட்டமிட்டு நடந்து கொண்டிருக்கின்றது, அந்நாட்டில் மறுவாழ்வுக் கிராமங்கள் என்ற பெயரில் ஹிட்லர் காலத்து வதை முகாம்கள் அமைப்பதற்குத் திட்டமிடப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் இத்தாலியின் நெத்தூனோ என்ற ஊரில் இரயில் நிலையத்தில் இரவில் குளிரில் தூங்கிக் கொண்டிருந்த வீடற்ற, வேலையற்ற 35 வயது நவ்டேஜ் சிங் சிது என்ற இந்தியக் குடிமகனுக்கு நடந்த கொடுமை என்ன தெரியுமா?

மதுபானத்திற்கும் போதைப்பொருளுக்கும் அடிமையான மூன்று இத்தாலிய இளைஞர்கள் சிதுவை பலமாய் அடித்து அவர் மீது பெயிண்ட்டை தடவி பெட்ரோல் ஊத்தி தீ வைத்துள்ளனர். இப்பொழுது மண்டையில் பலத்த காயத்துடன், 40 விழுக்காட்டு உடல் பகுதி எறிந்த நிலையில் மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார் சிது. இந்தத் தங்களது வன்செயலுக்கான காரணமாக அந்த இளைஞர்கள் சொல்லியிருப்பது நம்மைக் கொதித்தெழ வைக்கிறது. தங்கள் போதையின் இன்ப உணர்வை அனுபவிப்பதற்காக இந்தப் பரிசோதனையை நடத்தியிருக்கிறார்கள்.

இன்னும், கடந்தவாரத்தில் இத்தாலியில் 35 வயது எலுவானா எங்க்லாரா என்ற பெண் கருணைக் கொலை செய்யப்பட்டு கல்லறையிலும் வைக்கப்பட்டுவிட்டாள். தனது 17வது வயதில் விபத்தில் அகப்பட்ட எலுவானா கடந்த 17 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்தவள். இது ஒரு கொலை, இக்கொலையாளிகளை இறைவன் மன்னிப்பாராக என்று மனித வாழ்வை ஆதரிப்போர் அலறினர். கருணைக் கொலை, ஒருவரின் துன்பத்தைத் தீர்ப்பதற்கென எடுக்கப்படும் தவறான தீர்வு, இது மனிதனுக்கு ஏற்ற தீர்வு அல்ல, இதற்கு உண்மையான பதில் மரணத்தை வழங்குவது அல்ல, மாறாக வேதனையில் இருப்போருக்கு உதவும் அன்புக்குச் சாட்சியாக இருப்பது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் RealAudioMP3 கூறினார்

இம்மாதம் ஒன்றாம் தேதி, இத்தாலிய திருச்சபை வாழ்வு தினத்தைச் சிறப்பித்தது. அன்றைய மூவேளை செப உரையில் இவ்வாறு உரைத்த திருத்தந்தை, இம்மாதம் 11ம் தேதி 17வது உலக நோயாளர் தினத்தன்று அவர் ஆற்றிய மறையுரையில், மனித வாழ்வு உதறித் தள்ளப்படும் பொருள் அல்ல, மாறாக அது தாயின் வயிற்றில் கருவான நேரமுதல் ஒவ்வொரு தருணத்திலும் கவனமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம், வாழ்க்கை ஒரு புதிர், அதற்கு ஒவ்வொருவரின் அன்பும் பொறுமையும் பொறுப்பும் பிறரன்பும் தேவைப்படுகின்றது என்றார். RealAudioMP3

மனித வாழ்வுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பும் ஆர்வலர்களின் ஒட்டு மொத்த கோரிக்கையும் இதுதான். வாழ்வு புனிதமானது. அது வாழத் தகுதியுடைது. உயிரைக் கொடுக்கும் இறைவனுக்கு மட்டுமே அதனை எடுக்கவும் உரிமையுள்ளது. இந்த இறைவனின் செயலில் யாரும் இடையில் விளையாடக் கூடாது என்பதே. ஆனால் காருண்யக் கொலை, சிசுக்கொலை போன்றவைகளை நடத்தும் மனிதர் சமாதிகளில் மலர்களைத் தூவிவிட்டு பவ்யமாக விலகிவிடுகின்றனர். பல உயிர்கள் காவு கொள்ளப்படும் விபத்துக்குள்ளாகும் வாகனங்கள் மீது மரங்கள் மலர்களைத் தூவி விட்டு அமைதியாக நிற்கின்றன. குடிபோதையிலும், கஞ்சா சாப்பிட்டுவிட்டும் வெறியுடனும் வாகனம் ஓட்டுபவர்கள், இன்னும் கடத்தலில் மனிதர்களைக் கொல்வோர் போன்றோருக்கு, மனித உயிர்களின் மதிப்பு, மனித வாழ்க்கையின் மகத்துவம் எங்கே தெரியப் போகின்றது? விபத்தில் தந்தையை, குழந்தையை, தொப்புள்கொடி உறவுகளை இழந்து தவிக்கும் நெஞ்சங்களின் வேதனைகளை அவர்கள் உணர்வார்களா? இந்தக் கொலைகள் தவிர, பொறாமையால், பேராசையால், உணர்ச்சிகளை ஒருகணம் கட்டுப்படுத்த முடியாமையால் தினம் தினம் எத்தனையோ கொலைகள். காயின் தனது தம்பி ஆபேலைப் பொறாமையால் கொன்றதை இன்றைய திருவழிபாட்டில் கேட்டோம்.

மனித வாழ்வு அர்த்தமுள்ளது என்று இசுலாம் சொல்கிறது. இன்று மனித வாழ்வு எப்படி இருக்கின்றதென்றால், அது மிருகங்களின் வாழ்வு போல் இருக்கிறது என்று இந்திய பகுத்தறிவாளர் ஒருவர் சொன்னார்.

போதி தர்மர் என்பவர், ஒன்பது வருடங்களாக மக்களுக்கு முதுகு காட்டி சுவரையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தாராம். வருகிறவர்களுக்கெல்லாம் அவரின் முதுகுதான் தெரிந்ததாம். 'ஏன் இப்படி சுவரைப் பார்த்தபடியே இருக்கிறீர்கள்?' என்று மக்கள் அவரைக் கேட்டபோது, 'நான் பார்த்த மனிதர்களது முகங்கள் அனைத்தும் சுவர் போல உயிர்ப்பு அற்றதாகவே உள்ளன. என்னிலிருந்து வெடித்துக் கிளம்பும் ஞானத்தை வரவேற்கும் உயிர்ப்புள்ள முகங்களே இல்லை. சுவர் போன்ற அந்த முகங்களை விட சுவரே மேலானது என்று காத்திருக்கிறேன் என்றாராம்.

இஞ்ஞாயிறன்று நவீன அறிவியலின் தந்தை என அழைக்கப்படும் கலிலேயோ கலிலெய்யின் 445ம் ஆண்டு பிறப்பு வரலாற்றில் முதன்முறையாக நினைவுகூரப்பட்டது. இவரது அறிவியல் கண்டுபிடிப்பு பற்றி எழுந்த எதிர்ப்பில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அந்த வேதனையில் வியாதியில் இறந்தார் என்று சொல்லப்படுகிறது. இது அன்றைய தவறு என்று இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொழிநுட்ப உலகிலும் மனித உயிர், மனித வாழ்க்கை பல நேரங்களில் துச்சமென தூக்கி எறியப்படுகிறதே.

எனவே வானொலி நண்பா, பறவை ஓர் அதிசயம். பட்டாம்பூச்சி ஓர் அதிசயம். பரந்த கடல் ஓர் அதிசயம். வீசும் தென்றல் ஓர் அதிசயம். எழும்பும் நீர்ஊற்று ஓர் அதிசயம். அழகு மயில்கள் ஓர் அதிசயம். வானம்பாடிகள் ஓர் அதிசயம். ஆனால் இவை எல்லாவற்றையும்விட இன்று உனக்கும் எனக்கும் ஓர் அதிசயம் தேவைப்படுகின்றது. அதுவே பிறரை துன்பமின்றி அமைதியாய் வாழவிடுவது. மனித சக்தியின் மேன்மையை உணர்ந்த நீ, மற்ற எந்த சக்திகளையும்விட மனித சக்தி மிகத் தீவிரமானது, பல அதிசயங்களை நிகழ்த்தவல்லது என்பதை உணர்ந்திருப்பாய். வாழ்வு உன்னதமானது. உயரியது. எனவே உன்னையே எழுது. நீ உயர்வாய். உணர்வாய். உன்னை மட்டுமல்ல, உன்னைச் சுற்றியிருப்பவர்களையும் உணர்வாய். உயர்த்துவாய். அதுவே உனக்கு ஆனந்தம் தரும். அதுவே நீ நிகழ்த்த வேண்டிய அதிசயம்.

நீ அழுதுகொண்டே பிறந்த பொழுது உன்னைச் சுற்றி இருந்தவர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள். அந்தச் சிரிப்பை நீ மற்றவர்க்குத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். பிறர் அழுவதற்கு நீ ஒருபொழுதும் காரணமாகிவிடக் கூடாது. நீ பிறக்கும்போது சிரித்து மகிழ்ந்தவர்கள் நீ இறக்கும்போது அழவேண்டும். அந்த அளவுக்கு உன் வாழ்வு சிறந்ததாக அமைய வேண்டும்.








All the contents on this site are copyrighted ©.