2009-02-14 15:33:28

கிறிஸ்துவுக்கும் நற்செய்திக்கும் சாட்சிகளாய்த் திகழ வேண்டியது, கிறிஸ்தவர்களின், குறிப்பாகக் கிறிஸ்தவத் தலைவர்களின் தலையாய கடமை, மாஸ்கோ பிதாப்பிதா கிரில்


14பிப்.2009. கிறிஸ்துவுக்கும் அவரின் நற்செய்திக்கும் சாட்சிகளாய்த் திகழ வேண்டியது, கிறிஸ்தவர்களின், குறிப்பாகக் கிறிஸ்தவத் தலைவர்களின் தலையாய கடமை என்று மாஸ்கோ மற்றும் அனைத்து இரஷ்யாவின் பிதாப்பிதா ருஸ்ஸியெ கிரில் கூறினார்.

பிதாப்பிதா ருஸ்ஸியெ கிரில், இரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் புதிய பிதாப்பிதாவாகப் பணியேற்றதை முன்னிட்டு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அனுப்பிய வாழ்த்துச் செய்திக்கு நன்றி தெரிவித்து செய்தி அனுப்பிய அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்தவ சபை தலைவரின் அடிப்படையான பணிகள் பற்றி அச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள பிதாப்பிதா கிரில், இந்நவீன சமுதாயத்தில் கிறிஸ்துவின் நற்செய்தி விழுமியங்களை உறுதிப்படுத்தி அவற்றுக்குச் சாட்சி வழங்க வேண்டியது முக்கியமான பணி என்று கூறியுள்ளார்.

கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அனைவர் மத்தியிலும் உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கு இது வழி அமைக்க வேண்டும் என்பதில் தான் உறுதியாய் இருப்பதாகவும் அச்செய்தி கூறுகிறது.

இரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் சபையின் பிதாப்பிதா 2ம் அலெக்ஸி கடந்த டிசம்பர் 5ம் தேதி இறந்ததை முன்னிட்டு கடந்த ஜனவரி 27ம் தேதி ருஸ்ஸியெ கிரில் புதிய பிதாப்பிதாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்மாதம் ஒன்றாந்தேதி பணிப்பொறுப்பேற்றார்.








All the contents on this site are copyrighted ©.