2009-02-14 15:27:22

அமைதிக்கும் பொதுநலனுக்குமான பணிகளில் வத்திக்கான் இராணுவமின்றி செயல்பட்டு வருகிறது, திருத்தந்தை


14பிப்.2009. வத்திக்கான் நாடு உலகப் புவியியலில் காணக்கூடியதாயும் மாபெரும் இவ்வுலக அரசியல் யுக்திகளுக்கு ஏற்றதாயும் இல்லாவிடினும் இச்சிறிய நாடானது, உலகின் பொதுநலன் மற்றும் ஒருமைப்பாட்டுணர்வுக்கு ஆதரவாகத் தொடர்ந்து ஆற்றும் சேவையானது இதனை உலகில் ஒளிர்விக்கச் செய்து கொண்டிருக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

வத்திக்கான் நகர நாடு உருவாக்கப்பட்டதன் எண்பதாம் ஆண்டை முன்னிட்டு வத்திக்கானில் இனறு நிறைவு பெற்ற மூன்று நாள் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களை சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, வத்திக்கான் மலையின் மீதான உண்மையான நகரமாக விளங்க அங்கு பல துறைகளில் பணியாற்றிய மற்றும் பணியாற்றி வரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

அத்துடன், அவர்கள் ஆற்றுவது இறையரசுக்கான விலைமதிப்பற்ற பணி என்பதை எப்பொழுதும் உணர்ந்து செயல்படுமாறும் ஊக்கமுமளித்தார் அவர்.

வத்திக்கான் நாடு, தன்னில் விசுவாசம், வரலாறு, கலை போன்ற முழுமனித சமுதாயத்தின் நேர்த்தியான சொத்துக்களை உள்ளடக்கியுள்ளது என்றுரைத்த திருத்தந்தை, தூய பேதுருவின் கல்லறை அமைந்திருக்கும் இந்நாட்டின் மையத்தில் வாழும் பாப்பிறை உண்மையான சமூக முன்னேற்றம், நம்பிக்கை, ஒப்புரவு, அமைதி ஆகியவை பற்றிய செய்திகளை இடைவிடாமல் வழங்கி வருகிறார் என்றும் கூறினார்.

வத்திக்கான் நாட்டின் உண்மையான நிறுவனராகிய திருத்தந்தை 11ம் பத்திநாதரை நினைவுகூர்ந்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இரண்டு உலகப் போர்கள் நடந்த இக்கட்டான சூழல்களில் திருச்சபையை அவர் திடமுடன் வழிநடத்தியதையும் பெருமையுடன் நினைவுகூர்ந்தார்.

அவரின் பணிக்காலத்தில் மெக்சிகோ, ஸ்பெயின் போன்ற நாடுகளில் திருச்சபை கடும் அடக்குமுறைகளுக்கு உள்ளானது, இந்தக் கஷ்டமான காலத்தில் அவரின் ஞானம் நிறைந்த வழிநடத்துதலால் திருச்சபை தனது மறைப்பணியைச் சுதந்திரமுடன் தொடர்ந்து செய்ய முடிகின்றது என்றார் திருத்தந்தை.

1929ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி கையெழுத்திடப்பட்ட இலாத்தரன் ஒப்பந்தம் ஏற்படுவதற்கு திருத்தந்தை 11ம் பத்திநாதர் எதிர் கொண்ட நெருக்கடிகளையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இவ்வொப்பந்தம் ஏற்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் அதாவது, 1939ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி, இரண்டாம் உலகப் போர் வெடித்த காலக்கட்டத்தில் வன்முறையும் வேதனையும் வத்திக்கான் கதவுகள் வரை வந்தன என்றார்.

இந்த 80ம் ஆண்டு நிறைவில் வத்திக்கான் தனது சவால் நிறைந்த அப்போஸ்தலிக்கப் பணியை இன்னும் உறுதியுடன் செய்வதற்கு அன்னைமரியின் பரிந்துரையையும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வேண்டினார்.

மாபெரும் பணிக்காக ஒரு சிறிய பகுதி என்ற தலைப்பில் பிப்.12 முதல் 15 வரை வத்திக்கானில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.

109 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட வத்திக்கானில், வத்திக்கான் அருங்காட்சியகம் உட்பட ஏறத்தாழ இருபது துறைகள் உள்ளன. திருத்தந்தை 11ம் பத்திநாதரின் வேண்டுகோளின் பேரில் வானொலியைக் கண்டுபிடித்த குல்யெல்மோ மார்க்கோனி, 1931ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி வத்திக்கான் வானொலியை தொடங்கினார். 1931ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 711 பேர் வத்திக்கான் குடியுரிமை பெற்றவர்களாகவும், 283 பேர் வத்திக்கான் குடியுரிமை பெறாமல் வத்திக்கானுக்குள்ளும் இருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இத்தாலியர்கள்.












All the contents on this site are copyrighted ©.