2009-02-11 18:50:02

மனித வாழ்வு துயர் மிக்கதாக இருந்தாலும் போற்றுக – திருத்தந்தை.1102.


தூய பேதுரு பசிலிக்காவில் இந்தப் புதன் மாலை நோயுற்றோருக்காகச் சிறப்பு திருப்பலி நிகழ்ந்தது. திருப்பலியை கர்தினால் சேவியர் லோசானோ பாரிகன் நிகழ்த்தினார் . திருப்பலியின் இறுதியில் கலந்து கொண்ட திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் மனித வாழ்வு ஒரு கொடை என்று கூறினார் . அதை நாம் கவனமாகப் பாதுகாக்க வேண்டும் என்றார் . வாழ்வின் தொடக்கத்திலிருந்து நாம் எல்லா வழியிலும் வாழ்வைப் பாதுகாக்க முயற்சிசெய்ய வேண்டும் என வலியுறுத்தினார் திருத்தந்தை. நோயுற்றோரையும் அவர்களுக்கு உதவியாக சேவை செய்வோரையும் புதன் மாலை சந்தித்துப் பேசிய திருத்தந்தை வாழ்வு என்பது ஒரு மறைபொருள் . அதை நாம் பொறுப்புணர்வோடு பாதுகாக்க வேண்டும் . அன்பு , பொறுமை , பிறரன்பு ஆகியன தேவையாகிறது என்றும் கூறினார் . இது எளிதானதல்ல என்றாலும் வரக்கூடிய துன்பங்களை நாம் பொறுமையோடும் துணிவோடும் சந்திக்க வேண்டும் என்றார் . வயது நிரம்பியவர்களை நோய் தாக்கும்போது துயரப்படுகிறார்கள் என்றால், குழந்தைகளை நோய் தாக்கும்போது துன்புறுவது எவ்வாறு என்ற கேள்வியைத் திருத்தந்தை எழுப்பினார் . கடவுள் மனிதரை மகிழ்ச்சியாக இருக்கவே படைத்தார் . பாவத்தின் காரணமாக நோயும் துயரமும் நுழைந்து என்று மேலும் கூறினார் . கிறிஸ்துவின் இறப்பும் உயிர்ப்பும் நோயையும் சாவையும் வென்று மக்களை முழுமையான வாழ்வுக்கு கூட்டிச் செல்வதாகத் திருத்தந்தை கூறினார் . திருப்பலியில் நாம் வாழ்வைப் போற்றக் கற்றுக் கொள்கிறோம் என்றார் திருத்தந்தை .








All the contents on this site are copyrighted ©.