2009-02-10 16:31:04

வாழ்வுக்குத் தொண்டு செய்வதற்கான இன்னும் உறுதியான வழிகளைத் தொடர்ந்து தேடுவோம், திருச்சபை அதிகாரிகள்


10பிப்.2009. கருணைக்கொலைகள் நடத்தப்படுவது குறித்தத் தங்களது கவலையை தெரிவித்துள்ள அதேவேளை, வாழ்வுக்குத் தொண்டு செய்வதற்கான இன்னும் உறுதியான வழிகளைத் தொடர்ந்து தேடுவோம் என்று திருச்சபை அதிகாரிகள் கூறினர்.

இத்தாலியில் கடந்த 17 ஆண்டுகளாக கோமாவில் இருந்த எலுவனா எங்க்லரோ என்ற 35 வயதுப் பெண்ணுக்குச் செயற்கை முறையில் கொடுக்கப்பட்டு வந்த உணவு நிறுத்தப்பட்ட நான்கு நாட்களுக்குப் பின்னர் இத்திங்கள் இரவு அவர் இறந்ததையொட்டி கருத்துக்களை வெளியிட்ட திருச்சபை அதிகாரிகள் இவ்வாறு கூறினர்.

இவ்விவகாரம் குறித்து நிருபர் கூட்டத்தில் பேசிய திருப்பீட பேச்சாளரும் வத்திக்கான் வானொலி இயக்குனருமாகிய இயேசு சபை அருட்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி, சமுதாயத்தில் நலிந்தவர்களுக்கான வாழ்வதற்கான முழு உரிமையை முழுமையாய் மதித்து அவர்களை அன்புடன் கவனிப்பதற்கு மேலான வழிகளைத் தேடுவதற்கான நமது பொறுப்பை இது உணர்த்துகிறது என்றார்.

இது குறித்து கருத்து வெளியிட்ட திருப்பீட நலவாழ்வுக்கான மேய்ப்புப்பணி அவைத் தலைவர் கர்தினால் ஹாவியர் லொசானோ பாராகான், இப்பெண்ணை இந்நிலைக்குக் கொண்டு வந்தவர்களை இறைவன் மன்னிக்க வேண்டுமென்றும் நாம் மன்னிப்புப் பண்பில் வளர வேண்டுமென்றும் கூறினார்.

எலுவனாவின் இறப்பு குறித்து இத்தாலிய ஆயர்கள் தங்களது ஆழ்ந்த வேதனையைத் தெரிவித்துள்ளதோடு மனித வாழ்வு மற்றும் அதன் இன்றியமையாத மாண்பு மீது நம்பிக்கை கொள்பவர்கள், வாழ்வை அன்புடன் பாதுகாக்குமாறும் மனித வாழ்வு அது தாயின் கருவிலிருந்தே காப்பாற்றப்படுமாறும் அழைப்புவிடுத்துள்ளனர்.

மேலும், தனது வாழ்வைப் பாதுகாக்க இயலாமலிருந்த அப்பாவி பெண்ணை கொலை செய்துள்ளார்கள் என்று புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கான பேராயத்தின் முன்னாள் தலைவர் கர்தினால் ஹோசே சரைய்வா மார்ட்டின்ஸ் கருத்து தெரிவித்தார்.

 








All the contents on this site are copyrighted ©.