2009-02-09 14:58:08

மனிதனின் உண்மையான மற்றும் ஆழமான நோய், உண்மை மற்றும் அன்பின் ஊற்றாகிய கடவுளைவிட்டு தூரமாய் இருப்பதுவே, திருத்தந்தை


09பிப்.2009. இயேசுவின் குணமளிக்கும் திருப்பணியானது, திருச்சபையின் அருளடையாளங்கள், பிறரன்புப்பணிகள், நோயின் பொருளையும் மதிப்பையும் புரிந்து கொள்வது ஆகியவற்றின் வழியாகத் திருச்சபையில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் கூறினார்.

தூய பேதுரு பசிலிக்கா சதுக்கத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு, இஞ்ஞாயிறு திருப்பலியின் இயேசு பல நோயாளிகளுக்குக் குணமளிக்கும் நற்செய்தி வாசகத்தை அடிப்படையாக வைத்து உரையாற்றிய திருத்தந்தை, மனிதன் தான் வாழும் ஒவ்வொரு சூழலிலும் நோயின் அர்த்தத்தையும் மதிப்பையும் புரிந்து கொள்வதற்கு இந்நற்செய்திப் பகுதி மீண்டும் நமக்கு அழைப்புவிடுக்கிறது என்றார்.

பிப்ரவரி 11ம் தேதி கடைபிடிக்கப்படும் உலக நோயாளர் தினம் பற்றியும் குறிப்பிட்ட அவர், நோய் மனித வாழ்வின் ஓர் அங்கமாக இருந்தாலும் இதை நாம் ஏற்பதற்கு ஒருபொழுதும் பழகிக் கொள்வதில்லை, காரணம், இது சிலவேளைகளில் சுமையாகவும் துயர் நிறைந்ததாகவும் இருக்கின்றது என்பது மட்டுமல்ல, அடிப்படையில் நாம் வாழ்வதற்காக, வாழ்வை நிறைவு செய்வதற்காக இருக்கிறோம் என்பதுவே என்றார்.

கடவுளை நாம் வாழ்வின் நிறைவாக நினைக்கிறோம், எனவே நாம் நோயினால் சோதிக்கப்படும் பொழுதும் நமது செபம் கேட்கப்படாமல் இருக்கும் பொழுதும் நம்மில் சந்தேகம் குடிகொண்டு வேதனையால் நிறைந்து இறைவனின் திட்டம் என்ன என்று நம்மையே கேள்வி கேட்கிறோம் என்றும் திருத்தந்தை கூறினார்.

இதற்கான பதில் நற்செய்தியில் இருக்கின்றது என்ற திருத்தந்தை, கடவுளின் முகத்தைத் தன்னில் வெளிப்படுத்திய இயேசு ஐயத்திற்கு இடமளிக்கமாட்டார், இவர் நம்மை எல்லாத் தீமைகளிலிருந்தும் விடுதலை செய்யும் வாழ்வின் கடவுள் என்றும் கூறினார்.

இயேசுவின் அன்பின் வல்லமையான இந்த அடையாளங்களே அவர் ஆற்றும் புதுமைகள், இவ்வாறு, மனிதரை ஆவியிலும் உடலிலும் முழுமையாக ஒருங்கிணைத்து கடவுளரசு அண்மையில் உள்ளது என்று நமக்குக் காட்டுகிறார் என்றார் அவர்.

மனிதனின் உண்மையிலும் உண்மையான மற்றும் ஆழமான நோய், உண்மை மற்றும் அன்பின் ஊற்றாகிய கடவுளின் பிரசன்னம் இன்றி இருப்பதுவே என்பதை நாம் மிக நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைக் கோடிட்டு காட்டினார் திருத்தந்தை.

இறைவனோடு ஒப்புரவாகுவதே உண்மையான குணமாக்குதலையும் உண்மையான வாழ்வையும் வழங்கும், ஏனெனில் அன்பற்ற, உண்மையற்ற வாழ்வு உண்மையான வாழ்வாக இருக்க முடியாது என்ற அவர், கடவுளரசு, அன்பு மற்றும் உண்மையில் பிரசன்னமாக இருக்கின்றது, இவ்வாறு நமது உயிர் மூச்சின் அடிநாளத்தைக் குணபப்டுத்துகின்றது என்று மூவேளை செப உரையில் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.