2009-02-09 15:00:48

மடகாஸ்கர் நாட்டில் அமைதி ஏற்பட திருத்தந்தை செபிக்க அழைப்பு


09பிப்.2009. மோதல்கள் இடம் பெறும் மடகாஸ்கர் நாட்டு கத்தோலிக்கரோடு இணைந்து அந்நாட்டில் அமைதி ஏற்பட செபிப்பதாக ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஆப்ரிக்காவின் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடல் பகுதியிலுள்ள இந்தத் தீவு நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் அரசியல் பதட்டநிலைகள் பற்றிக் குறிப்பிட்ட அவர், இந்நிலைகள் பொதுமக்களை பதட்டநிலைக்கு உட்படுத்தியுள்ளன என்றார்.

மடகாஸ்கர் நாட்டில் ஒப்புரவும் சமூக நீதியும் ஏற்படுவதற்கு இஞ்ஞாயிறன்று செப நாளைக் கடைபிடித்த அந்நாட்டு ஆயர்களுடனான தமது ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்தார் திருத்தந்தை.

மடகாஸ்கரில் இடம் பெற்ற போராட்டங்களில் உயிரிழந்தவர்களை நம் ஆண்டவரிடம் அர்ப்பணிக்கும் அந்நாட்டு கத்தோலிக்கரோடு நாம் அனைவரும் இணையுமாறு அழைப்புவிடுத்த அவர், எண்ணத்தில் நல்லிணக்கமும், சமுதாய அமைதியும், குடிமக்கள் ஒன்றிணைந்து வாழ்வதற்கும் அன்னைமரியிடம் செபிப்பதாகவும் கூறினார்.

மடகாஸ்கர் அரசுத்தலைவர் மாற்க் ரவலோமானானா, பொதுநிதியை தவறாகப் பயன்படுத்துகிறார், அரசியல் அமைப்பு சட்டங்களை மீறுகிறார், எனவே அவர் உடனடியாக பதவியிறக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் ஆண்ட்ரி ரஜோலினா போராட்டத்தைத் தொடங்கினார். இதில் பாதுகாப்புப் படைகளுக்கும், அரசை எதிர்ப்பவர்களுக்குமிடையே ஏற்பட்ட பேரணிகளில் கடந்த சனிக்கிழமை 25 பேர் இறந்தனர் மற்றும் 167பேர் காயமடைந்தனர்.








All the contents on this site are copyrighted ©.