2009-02-09 14:37:32

புனித பவுல் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி - புனித பவுல் யார்? நிறைவு


09பிப்.2009. அன்பர்களே, மனிதன் அன்புக்கும் பண்புக்கும் அடிமையாவதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் அநீக்கும் ஜாதிக்கும், பணத்துக்கும் பதவிக்கும், புகழுக்கும் பொருளுக்கும், பேரினவாதத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் அடிமையாவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இன்று இலங்கையில், மியான்மாரில், மடகாஸ்கரில், இன்னும் சில ஆப்ரிக்க நாடுகளில் என உலகின் பல பகுதிகளில் விடுதலைக்கான முழக்கங்களையும் போராட்டங்களையும் கேட்க முடிகிறது. எனினும் நிறைவான, நிரந்தரமான முழுமனித விடுதலை இயேசு கிறிஸ்துவில் மட்டுமே காணமுடியும் என்ற அடிப்படைக் கருத்தை ஆணித்தரமாக விளக்கியிருப்பவர் புனித பவுல். இந்தப் புனித பவுல் பிறந்ததன் இரண்டாயிரமாம் ஆண்டைமுன்னிட்டு 2008ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி புனித பவுல் ஆண்டு எனத் தாய்த் திருச்சபை சிறப்பிக்கத் தொடங்கியது. 2009ம் ஆண்டு ஜூன் 28ம் தேதியன்று நிறைவடையும் இப்பவுல் ஆண்டில் பிறஇனத்தாரின் திருத்தூதராகிய புனித பவுல் பற்றி வத்திக்கான் வானொலி நேயர்களாகிய நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது நற்செய்திப் பயணங்கள், அவரது ஆன்மீகம், அவரது இறையியல் கருத்துக்கள் எனப் பல தலைப்புகளில் நிகழ்ச்சிகளை வழங்கினோம். திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் இப்பவுல் ஆண்டில் தமது புதன் பொது மறைபோதகங்களில் புனித பவுல் பற்றி விளக்கி வந்து கடந்த புதன் மறைபோதகத்தோடு அதை நிறைவு செய்வதாகக் கூறினார். நாமும் இன்றைய இவ்விவிலியத் தொடரில் புனித பவுல் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியை நிறைவு செய்ய விழைகின்றோம்.

புனித பவுல் யார்? இவர் தொடக்ககாலத் திருச்சபையில் நம் ஆண்டவர் இயேசுவுக்கு அடுத்தபடியாக மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தவர். பிறஇனத்தாரின் திருத்தூதர். திருத்தூதருள் பேராசிரியர். முதல் இறையியல் அறிஞர். கிறிஸ்தவமறையின் இரண்டாம் நிறுவனர் என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் சொல்லி இவரை அழைக்கின்றனர். இவர் பிறந்த ஆண்டு சரியாகச் சொல்ல முடியவில்லையெனினும் கி.பி.8க்கும் 10க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. பொதுவாக, மகான்களின் பிறந்த தேதியைவிட அவர்கள் பிறப்பின் நோக்கம் முக்கியமாக நோக்கப்படுகிறது. அப்படிப் பார்க்கும் போது, பவுலே தான் பிறந்ததற்கான நோக்கத்தை அவர் கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் 1, 15-16ல் குறிப்பிட்டிருக்கிறார்.

தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தமக்கென ஒதுக்கிவைத்துத் தமது அருளால் என்னை அழைத்த கடவுள், தம் மகனைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தவர்க்கு நான் அறிவிக்குமாறு அவரை எனக்கு வெளிப்படுத்தத் திருவுளங்கொண்டார்

எனவே, தனது வாழ்வு ஒரு சிறந்த நோக்கத்திற்காக முத்திரையிடப்பட்டது என்று பவுலே நம்பியிருக்கிறார். இன்னும், இவர், கல்விச் செல்வமும் வாணிபக் கலையும் கொட்டிக் கிடந்த தர்சு நகரில் பிறந்திருக்கிறார்.( தி.ப.9 :11,30 ;11 :25; 21:29 ; 22:3 ). இந்நகர் கி.மு.42ம் ஆண்டில் உரோமையர் ஆட்சியின் கீழ் வந்தது. இங்கு வாழ்ந்தோர் உரோமையர்களிடமிருந்து சலுகைகளைப் பெறுவதற்கு உரோமைக் குடிமக்கள் என்ற உரிமையைப் பெற்றுக் கொண்டனர்.

இந்த பெரிய மனிதனின் குடும்பம் எப்படிப்பட்டது என்று பார்த்தால், அவர் விருத்தசேதனம் பெற்றவர். இஸ்ரயேல் இனத்தவர். பென்யமின் குலத்தவர். எபிரேயப் பெற்றோருக்குப் பிறந்த எபிரேயன். திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயன். (பிலி. 3:5). உரோமைக்குடிமகன். (தி.ப.16:37). இவருக்கு சகோதரி இருந்ததாக திருத்தூதர் பணியில் வாசிக்கிறோம். ஒருசமயம் பவுலுக்கு எதிராக சூழ்ச்சி நடைபெற்றது. இச் சூழ்ச்சியைப் பற்றிப் பவுலின் சகோதரி மகன் கேள்விப்பட்டு, கோட்டைக்குள் சென்று இதனைப் பவுலிடம் அறிவித்தார். (தி.ப.23:16). மேலும் அவருக்கு உறவினர்களும் இருந்திருக்கின்றனர். என் உறவினரான ஏரோதியானுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள் (உரோ.16:11) என்றும், என் உறவினர்களும் உடன் கைதிகளுமான அந்திரோனிக்கு, யூனியா ஆகியவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். திருத்தூதர்களுள் இவர்கள் பெயர்பெற்றவர்கள். இவர்கள் எனக்குமுன் கிறிஸ்தவர்கள் ஆனார்கள் (உரோ.16:07) என்றும் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். கி.பி.முதலாம் நூற்றாண்டில் உரோமையர்களின் ஆட்சிக் காலத்தில் அனைத்து காலனி நாடுகளிலும் கல்வி வளர்ச்சி பெற்றிருந்தது. பாலஸ்தீன மற்றும் யூதர்கள் சிதறி வாழ்ந்த நாடுகள் எல்லாவற்றிலும் தொடக்கக் கல்விக்கூடங்கள் இருந்தன. ஆறு வயது தொடங்கியதும் குழந்தைகள் இத்தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். இங்கு கிரேக்க மொழியில் பாடங்கள் அனைத்தும் கற்பிக்கப்பட்டன. கணிதம், தாங்கள் சார்ந்திருக்கும் நாடு, மதம் பற்றிய பாடங்கள் இடம் பெற்றிருந்தன. யூதமாணவர்கள் உரோமையர்களின் அரசியல் வரலாற்றையும், தங்களது யூதமதம் பற்றியும் பயின்றார்கள். இவர்கள் தங்கள் முன்னோர்களின் அரசியல் வரலாறு, தாய்மொழியான எபிரேயம் இவற்றைக் கற்க வேண்டுமானால் இளைஞரான பின்னர் எருசலேம் சென்று பயில வேண்டும். இத்தொடக்கக் கல்வி, குழந்தைகளின் 12 அல்லது 13 வயதுவரை நீடித்தது. பின்னர் தர்சு, ஏதென்ஸ், அந்தியோக்கியா ஆகிய நகரங்களிலுள்ள கல்லூரிகளுக்குப் படிக்கச் சென்றனர். புனித பவுல் தமது இருபதாம் வயதில் தனது தாய் மதமான யூதமதம் பற்றிக் கற்றுத் தெளிய எருசலேம் வந்திருக்கக்கூடும், திருச்சட்டங்களில் பழுத்த அனுபவசாலியாக இருந்த கமாலியேல் என்ற யூதப்பெரியவரிடம் பயிற்சி பெற்றிருக்கக்கூடும் என்று விவிலிய அறிஞர்கள் கருதுகிறார்கள் (தி.ப.22:03). அன்று யூதமக்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம் தங்களுக்கென்று தொழுகைக்கூடம் ஒன்றையும், தங்கள் சமுதாயத்தை நிர்வகிக்க தலைமைச்சங்கம் என்ற அமைப்பையும் ஏற்படுத்திக் கொண்டனர். இவர்கள், கி.பி.முதலாம் நூற்றாண்டில் உரோமையர்களின் கலாச்சாரம், பண்பாடு, மதம் ஆகியவற்றை அனுசரித்தே வாழ வேண்டியிருந்தது. ஏனெனில் உரோமையர்கள் தங்களுக்கு எதிராக எழுகின்ற மற்ற சமய, பண்பாட்டு, கலாச்சார விழுமியங்களை வேரோடு பிடுங்கி எறிந்தனர். எனவே யூதர்களின் தலைமைச்சங்கத்திற்கு இரண்டு பொறுப்புகள் இருந்தன. ஒன்று. தங்கள் யூதமதத்தின் தனித்தன்மையைக் காப்பது. இரண்டு. தங்கள் யூதமதத்தில் உள்ளவர்கள் உரோமையர்களின் கோபத்தை விலைகொடுத்து வாங்காமல் இருக்குமாறு கவனித்துக் கொள்வது. இவ்விரு பொறுப்புக்களையும் செய்வது கடினமாகக் கருதப்பட்டதால் யூத வேட்கையும் தோரா எனப்படும் ஐந்நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வமுமுள்ள பரிசேயர்கள் தலைமைச்சங்கத்தில் அதிக எண்ணிக்கையில் சேர்ந்தனர்.

இத்தகையதொரு காலக்கட்டத்தில் கி.பி.35க்கும் 40க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் கிறிஸ்தவம் துளிர்விட்டது. இது யூதமதத்திலிருந்து பிரிந்த ஓர் அமைப்பாகப் பார்க்கப்பட்டதால் இதனை முளையிலேயே கிள்ளியெறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நடவடிக்கையில் தீவிரமாகச் செயல்பட்டவர் பவுல். அவ்வாறு அவர் கிறிஸ்தவர்களைப் பிடித்துக் கொண்டு வருவதற்குத் தமஸ்குச் சென்ற போது உயிர்த்த இயேசுவைச் சந்தித்தார். அவரது வாழ்வு அந்நொடிப்பொழுதே மாறிப் போனது. இயேசு ஒருவரை மட்டும் சொந்தமாக்கிக் கொள்ள அனைத்தையும் குப்பையெனக் கருதினார். கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையை அறிவதும் அவருடைய துன்பங்களில் பங்கேற்பதும் இவைகளை மட்டுமே வாழ்வின் இலக்கணமாய் மாற்றிக் கொண்டார். இந்த இயேசுவை அறிவிப்பதற்கு அவரோடு வாழ்ந்த திருத்தூதர்களைவிட நீண்ட கடின பயணங்கள் செய்தார். கிழக்கிலும் மேற்கிலும் நற்செய்தியைப் பரப்பினார். இப்பணியில் கப்பல் சிதைவில் அகப்பட்டார். அடிக்கப்பட்டார். கல்லால் எறியப்பட்டார். ஏழுமுறை சிறை சென்றார். திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கடந்த புதன் பொது மறைபோதகத்தில் குறிப்பிட்டது போல, கிறிஸ்தவர்களை வதைத்து ஒழித்த நீரோ உரோமையை எரித்த கி.பி.64ம் ஆண்டு ஜூலைக்கும் அவனது ஆட்சி முடிவடைந்த 68ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் புனித பவுல் உரோமையில் தலைவெட்டப்பட்டு இறந்தார். இவர் கொல்லப்பட்டு ஏறத்தாழ முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின்னர் அதாவது கி.பி.90களில் உரோமை ஆயர் புனித முதலாம் கிளமெண்ட் கொரிந்து திருச்சபைக்கு எழுதிய கடிதம் மூலம் இவரது இறப்பு பற்றி முதன் முதலாகத் தெளிவாக அறிகிறோம்.

RealAudioMP3

பவுல் இறந்து ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்குப் பின்னர் அதாவது கி.பி.325இல் உரோமை நகரமும் உரோமைப் பேரரசும் கிறிஸ்துவின் வழியில் வாழத் தொடங்கியன. பவுலின் சிந்தனைகள், இறையியலில் திருச்சபை வரலாறு முழுவதும் குறிப்பாக 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் வெகுவாய் நல்தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. இயேசுவே மீட்பர் என்பதை வலுவான வார்த்தைகளால் மட்டுமல்லாமல் தம் குருதியைச் சிந்தி சாட்சி சொன்னவர் நம் புனிதர் பவுல். இயேசு என்ற ஒப்பற்ற செல்வம் எல்லாருக்கும் கிடைப்பதற்கு கடினமாக உழைத்தவர். கிறிஸ்துவுக்குள் வந்துள்ள நம் அனைவருக்கும் இவர் சிறந்த எடுத்துக்காட்டு. எனவே புனித பவுலது 13 கடிதங்களையும் மீண்டும் மீண்டும் வாசித்து வாழ்வாக்குவோம்.

அன்பர்களே, எதிரும் புதிருமான நிலை யாருக்கும் எப்போதும் ஏற்படலாம் என்பதை இந்நாட்களில் நடந்து வரும் செயல்கள் உணர்த்துகின்றன. பட்டினத்தார் பாடியது போல, பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும். தோன்றின மறையும், மறைந்தன தோன்றும். பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருகும். எனவே இவ்வுலகில் நிலையானது என்று எதுவுமே இல்லை இறைவனைத் தவிர. ஆக பவுலைப் போல், என்றுமே வாக்கு மாறாத நல் தேவன்மீது நம்பிக்கை கொண்டு அவரை மையப்படுத்தி வாழ்வோம்.

 








All the contents on this site are copyrighted ©.