2009-02-07 12:55:02

நோயுற்ற மற்றும் துன்புறும் சிறார் மீது அதிகக் கவனம் செலுத்தப்பட திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அழைப்பு


07பிப்.2009. சமுதாயத்தில் மிகவும் வலிமையற்ற சிறார், இன்னும் குறிப்பாக நோயுற்ற மற்றும் துன்புறும் சிறார் மீது அதிகக் கவனம் செலுத்தப்படுமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.

பிப்ரவரி 11ம் தேதி லூர்து அன்னை விழாவன்று சிறப்பிக்கப்படும் 17வது உலக நோயாளர் தினத்தை முன்னிட்டு திருத்தந்தை இன்று வெளியிட்ட செய்தியில், இவ்வாண்டு இவ்வுலக தினத்தில் சிறார் குறித்து கவனம் செலுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார்.

இன்றைய மருத்துவ துறையின் முன்னேற்றத்தையும் விடுத்து நோயின் விளைவுகளை சிறார் தம் உடலில் கொண்டுள்ளனர், குணமாக்கமுடியாத நோயினாலும் துன்புறுகின்றனர் என்றுரைக்கும் அவர், சண்டையினாலும் வயது வந்தவர்களின் உணர்வற்ற வெறுப்புணர்வுகளாலும் சிறார் உடலிலும் மனத்திலும் காயமடைந்துள்ளனர் என்றார்.

இன்னும் குடும்பங்களால் கைவிடப்பட்ட தெருவாழ் சிறார்களின் நிலை, அவர்களின் உரிமைகளை மீறுபவர்களால் அவர்களில் ஏற்படும் உளரீதியான பாதிப்பு, பசிதாகத்தாலும் சுகாதார வசதியின்மையாலும் எண்ணற்ற சிறார் இறப்பது, நல்லதொரு வாழ்க்கை தேடி பெற்றோடு அலையும் அகதிச் சிறார் எனப் பலவகைகளில் துன்புறும் சிறார் பற்றியும் திருத்தந்தை விளக்கியுள்ளார்.

பலவகை வேதனைகளில் மௌனமாக அலறும் சிறாரின் குரல்கள், மனிதர் மற்றும் விசுவாசிகளின் மனச்சான்றை நோக்கி எழும்புகின்றன என்ற அவர், கிறிஸ்தவ சமூகம் இத்துன்ப நிலைக்கு முன்னர் பாராமுகமாய் இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

திருச்சபை, உலகில் கடவுளின் குடும்பமாக இருக்கின்றது, எனவே தேவையில் இருக்கும் அதன் உறுப்பினர்கள் யாரும் துன்பப்படக்கூடாது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

உரோம் பம்பினோ ஜேசு சிறார் மருத்துவமனை இவ்வாண்டு 140ம் ஆண்டை சிறப்பிப்து பற்றியும் குறிப்பிட்ட அவர், நோயாளிக் குழந்தையைக் கொண்டுள்ள குடும்பங்களுக்குக் கிறிஸ்தவ சமூகம் நல்ல சமாரித்தான்களாக இருந்து உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு மனிதனின் மேலான மாண்பையும் குறிப்பிட்ட அவர், நோயாளிச் சிறார்க்குத் தொடர்ந்து பணி செய்யும் போது அப்பணியானது மனித வாழ்வு மீதான அன்புக்குச் சாட்சியாக இருக்கிறது என்றும் கூறினார்.

நோயாளிச் சிறார் மத்தியில் குறிப்பாக ஏழைநாடுகளில் இச்சிறார் மத்தியில் சேவையாற்றும் அனைவரையும் ஊக்கப்படுத்திய திருத்தந்தை, நோயாளிச் சிறார்க்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் சாதகமான சட்டங்களை நாடுகள் இயற்றுமாறும் அழைப்புவிடுத்தார்.

நோயாளிச் சிறாரையும் அவர்களின் குடும்பங்களையும் தான் தந்தைக்குரிய அன்புடன் அரவணைப்பதாகவும் அவர்களுக்காகத் தான் சிறப்பாகச் செபிப்பதாகவும் உறுதி கூறி 17வது உலக நோயாளர் தினத்திற்கான செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

 








All the contents on this site are copyrighted ©.