2009-02-05 16:01:08

கர்தினால் பெர்த்தோனே – ஆயர் வில்லியாம்சனுக்கு நிபந்தனை. 050209.


திருச்சபையில் மீண்டும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆயர் பற்றி வத்திக்கான் திருப்பீடச் செயலர் கர்தினால் தார்சீசியோ பெர்த்தோனே அறிவிப்பு வெளியிட்டுள்ளார் . ஜீன் 30 1988 ஆம் ஆண்டில் திருச்சபைக்குப் புறம்பாக்கப் பட்ட புனித 10 ஆம் பத்தினாதர் குழுமத்தைச் சேர்ந்த நான்கு ஆயர்கள் சென்ற மாதம் 21 ஆம் தேதி திருச்சபையில் மீண்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள் . அந்த நாலவரில் ஒருவரான ஆயர் வில்லியாம்சன் என்பவர் ஜெர்மனியில் உள்ள ஆஸ்ட்விச் சிறையில் 60 இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டிருக்கமாட்டார்கள் என்று செய்தி வெளியிட்டிருந்தார் . அது உண்மைக்குப் புறம்பானது என்றும் , அவ்வாறு கூறிய ஒருவரை திருச்சபையில் திருத்தந்தை மீண்டும் ஏற்றுக்கொண்டது நல்லதல்ல என்றும் பல்வேறு இடங்களிலிருந்து கருத்துக்கள் வந்தன .

அதுபற்றிக் கருத்துக் கூறிய வத்திக்கான் செயலர் கர்தினால் பெர்த்தோனே அவ்வாறு மீண்டும் திருச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் இதுவரை எந்தப் பொறுப்பும் கொடுக்கப்படவி்ல்லை எனவும் , அவர்கள் திருச்சபைச் சட்டப்படி எந்த இறைப்பணியும் ஆற்றவில்லை என்றும் தெரிவித்துள்ளார் . மேலும் அவர்கள் குழுமத்துக்கு முழு அங்கீகாரம் வழங்குவதற்கு முன்னர் வத்திக்கான் அவர்களைப் பற்றி நன்கு ஆராய உள்ளதாகவும் கர்தினால் தெரிவித்துள்ளார் . மற்றும் ஆயர் வில்லியாம்சன் யூதர்கள் விஷவாயுச் சிறையில் கொல்லப்படவில்லை எனக் கூறியுள்ள கருத்துக்களைத் திருத்தந்தை ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் கர்தினால் தார்சீசியோ கூறியுள்ளார் . ஆயர் வில்லியாம்சன் தெரிவித்த கருத்துக்களை திரும்பிப் பெறவேண்டும் எனவும் கர்தினால் தார்சீசியோ பெர்த்தோனே தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.