2009-02-03 15:38:36

துறவிகள் புனித பவுலைப் பின்பற்ற திருத்தந்தை அழைப்பு


03,பிப்.2009. கத்தோலிக்கத் திருச்சபையில் தங்கள் வாழ்வு முழுவதையும் கடவுளுக்கும் திருச்சபைக்கும் அர்ப்பணித்துள்ள ஆண்களும் பெண்களும், கிறிஸ்துவுக்காக, கிறிஸ்துவோடு, கிறிஸ்துவில் வாழ்ந்த புனித பவுலை எடுத்துக்காட்டாகப் பின்பற்றுமாறு வலியுறுத்தினார் திருத்தந்தை.

பிப்ரவரி 2ம்தேதி 13வது சர்வதேச அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு தினம் கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு அன்று மாலை தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் சிறப்புத் திருப்பலியில் கலந்து கொண்ட ஆண், பெண் துறவிகளுக்கு உரையாற்றிய திருத்தந்தை, புனித பவுல் எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும், குறிப்பாக ஏழ்மை, கற்பு, பணிவு ஆகிய வார்த்தைப்பாடுகளை எடுத்தவர்களுக்கு உயிருள்ள மாதிரிகையாய் இருக்கின்றார் என்றார்.

ஏழ்மை, கற்பு, பணிவு ஆகிய மூன்று வார்த்தைப்பாடுகள் பற்றி விளக்கிய அவர், ஏழ்மை வாழ்வானது, நற்செய்தி அறிவிப்பதற்கு முழுவதும் தங்களையே கொடையாகக் கையளிப்பதாகும், அதேவேளை தேவையில் இருக்கும் அனைத்து சகோதர சகோதரிகளுக்குத் தெளிவான விதத்தில் ஒருமைப்பாட்டைக் காட்டுவதாகும் என்றும் திருத்தந்தை கூறினார்.



கன்னிமை வாழ்வு வாழ்வதற்கான கடவுளின் அழைப்பை ஏற்பது என்பது, மேலான சுதந்திரம் மற்றும் அர்ப்பணம் மூலம் ஒருவர் அனைத்து சகோதர சகோதரிகளுக்குப் பணிபுரிவதற்கென பிளவுபடாத வகையில் தனது முழு இதயத்தையும் இறைவனுக்கு அளிப்பதாகும் என்றும் அவர் கூறினார்.

பணிவு வாழ்வு என்பது, இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதாகும் என்றுரைத்த திருத்தந்தை, துறவிகள் தங்கள் பணியையும் செபத்தையும் இணைத்து வாழ எடுக்கும் முயற்சிகளில் புனித பவுலை மாதிரிகையாய்க் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

இந்தப் புனித பவுல் ஆண்டில் அவரின் சாட்சிய வாழ்வை பின்பற்றி, துறவிகள் இறைவார்த்தையை தினமும் தியானிப்பதிலும், திருச்சபையிலும் திருச்சபையோடும் அவர்கள் செய்யும் அப்போஸ்தலிக்கப் பணியை நிறைவேற்றுவதிலும் தங்கள் சபைகளின் தனிவரங்கள் பிறருக்குக் கொடையாக இருந்து பெரிய தனிவரமான அன்புக்குச் சாட்சிகளாக வாழ்வார்கள் என்று தான் நம்புவதாகவும் திருத்தந்தை கூறினார்.

திருச்சபைக்கு விலைமதிக்கப்படாத கொடையாக இருக்கும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வுக்கு அழைத்தல்கள் அதிகரிக்க விசுவாசிகள் செபிக்குமாறும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.

 








All the contents on this site are copyrighted ©.