2009-02-03 15:36:11

உண்மையான நோன்பு வானகத்தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதாகும், திருத்தந்தை


03,பிப்.2009. உண்மையான நோன்பு என்பது நமது விண்ணகப் போதகராகிய இயேசு எல்லா இடங்களிலும் மீண்டும் மீண்டும் சொல்லியிருப்பது போல, வானகத்தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதாகும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

இம்மாதம் 25ம் தேதி தொடங்கும் தவக்காலத்திற்கென இன்று வெளியிடப்பட்டுள்ள திருத்தந்தையின் செய்தியில், செபம், தர்மம் செய்தல் நோன்பு ஆகிய மூன்று கிறிஸ்தவ மரபுச் செயல்களைத் தவக்காலம் உள்ளடக்கியிருந்தாலும், இவ்வாண்டுக்கானச் செய்தியில் நோன்பின் மதிப்பு மற்றும் பொருள் பற்றிய தமது சிந்தனைகளை அவர் வழங்க விரும்புவதாகக் கூறப்பட்டுள்ளது.

புதிய ஏற்பாட்டில் இயேசு நோன்பின் ஆழமான நோக்கத்தை விளக்கியுள்ளார் என்றுரைக்கும் திருத்தந்தையின் செய்தி, நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக. மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார் என்ற இயேசுவின் வார்த்தைகளையும் சுட்டிக்காட்டினார்.

உண்மையான நோன்பு, வானகத்தந்தையின் விருப்பத்தைச் செய்யும் உண்மையான உணவை உட்கொள்வதாகும், பாவம் மற்றும் அது இட்டுச் செல்லும் தவறான செயல்களைத் தவிர்ப்பதற்கும், பாவத்தால் இழந்த இறைவனுடனான நட்புறவை மீண்டும் கட்டி எழுப்புவதற்கும் நோன்பு பெரும் உதவியாக இருக்கின்றது என்றும் திருத்தந்தை அதில் கூறியுள்ளார்.

முதல் கிறிஸ்தவ சமூகத்திலே பழக்கத்தில் இருந்த நோன்பு இருக்கும் பழக்கமானது, எல்லாக் காலத்திலும் புனிதர்களால் அடிக்கடி ஊக்கப்படுத்தப்பட்டு வந்தது என்றும் கூறும் அச்செய்தி, நீ செபித்தால் நோன்பிருக்கிறாய், நீ நோன்பிருந்தால் இரக்கம் காட்டுகிறாய், உனது விண்ணப்பம் கேட்கப்பட வேண்டுமென்று நீ விரும்பினால் பிறரின் விண்ணப்பங்களைக் கேள், உனது காதைப் பிறருக்கு மூடாவிட்டால் நீ உன்னை கடவுளின் காதுக்குத் திறக்கிறாய் என்று எழுதியுள்ள புனித பீட்டர் கிறிஸோலோகுசின் கூற்றையும் சுட்டிக்காட்டுகிறது.

இந்த நமது காலத்தில் நோன்பு அதன் ஆன்மீக அர்த்தத்தை இழந்தது போல் தெரிகின்றது, ஒருவரது உடலை பராமரிப்பதற்கான சிகிச்சை மதிப்பீட்டைக் அது கொண்டுள்ளது என்ற ஒரு கலாச்சாரப் பண்பை எடுத்துள்ளது, நிச்சயமாக நோன்பு உடலுக்கு நன்மை தருகின்றது, ஆயினும் அது விசுவாசிகளுக்கு முதலில் இறைத்திட்டத்தை நிறைவேற்றத் தடைசெய்யும் அனைத்தையும் குணப்படுத்தும் சிகிச்சையாக இருக்கின்றது என்றும் திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.

நோன்பை நன்கு கடைபிடிப்பது, நாம் பாவத்தை விலக்கி நம் ஆண்டவரோடு நெருங்கிய உறவு கொள்வதற்கு உடலுக்கும் மனதிற்கும், ஒருங்கிணைந்த முழு மனிதனுக்கு உதவுகின்றது என்றும் அச்செய்தி கூறுகிறது.

நோன்பு மற்றும் செபத்தின் மூலம் கடவுளுக்கான நமது உள்ளார்ந்த தேடலை கிறிஸ்து நம்மில் நிறைவு செய்ய அனுமதிக்கின்றோம் என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளது.

அதேசமயம், நோன்பானது, தேவையில் இருக்கும் அனைவர் மீது நம் கண்களைத் திறக்கின்றது என்றும், மனமுவந்து மேற்கொள்ளும் நோன்பானது நல்ல சமாரித்தன் போல துன்புறும் சகோதரருக்கு உதவ நம்மைத் தூண்டுகின்றது என்றும் திருத்தந்தை அதில் வலியுறுத்தியுள்ளார்.

முறையற்ற பற்றுக்களின்று நாம் விடுதலை பெறுவதற்கான போராட்டத்தில் ஆன்மீக ஆயுதமாக நோன்பு இருக்கின்றது, உணவு மற்றும் பிற உலகாயுதப் பொருட்களின் மீதான சிற்றின்ப ஆசைகளிலிருந்து நாமாக மனமுவந்து விடுதலை பெற விரும்புவதன் மூலம் இயற்கை மீதான பசியைக் கட்டுப்படுத்துகிறோம், எனவே வார்த்தைகளையும் உணவையும் குடிபானங்களையும் தூக்கத்தையும் பொழுதுபோக்குகளையும் மிதமாகப் பயன்படுத்துவோம், உணர்ச்சிகளை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் என்றும் திருத்தந்தை தமது தவக்காலச் செய்தியில் விண்ணப்பித்துள்ளார்.

செபம், லெக்சியோ திவினா என்ற இறைவார்த்தையை வாசித்து தியானித்தல், ஒப்புரவு திருவருட்சாதனத்தைப் பெறுதல், திருப்பலியில், குறிப்பாக ஞாயிறு திருப்பலியில் பங்கு பெறுதல் ஆகியவற்றுக்கு இத்தவக்காலத்தில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், இத்தகைய மனஸ்தாப உணர்வுடன் இத்தவக்காலத்தில் நுழைவோம், பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற நாம் எடுக்கும் முயற்சியில் அன்னைமரி உதவுவார் என்று சொல்லி இச்செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.

கோர் ஊனும் என்ற திருப்பீட பிறரன்பு அமைப்பின் தலைவரான கர்தினால் பவுல் யோசேப் கோர்தெஸ் தலைமையிலான குழு நிருபர் கூட்டத்தில் இச்செய்தியை வெளியிட்டது.








All the contents on this site are copyrighted ©.