2009-02-03 15:42:46

இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே கடும் சண்டை நடை பெற்று வரும் பகுதியில் மருத்துவமனைகள் மீது எறிகணை தாக்குதல்கள் நடத்தப்படுவது குறித்து ஐ.நா. கவலை


03,பிப்.2009. இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே கடும் சண்டை நடை பெற்று வரும் பகுதியில் மருத்துவமனைகள் மீது எறிகணை தாக்குதல்கள் நடத்தப்படுவது குறித்து மனிதாபிமானப் பணிகளுக்கான ஐ.நா. பேச்சாளர் கோர்டன் வெய்ஸ் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளார்.

இம்மோதல்களில் சிக்கியுள்ள 2,50,000 அப்பாவி மக்களின் வாழ்வுக்கான அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக அவர் மேலும் கூறினார்.

இலங்கையின் வடகிழக்குப் பகுதியிலுள்ள மருத்துவமனை தொடர்ந்து தாக்கப்பட்டதில் ஒரு மருத்துவ தாதி உட்பட 11 பேர் கொல்லப்பட்டதுடன், 17 பேர் வரை காயமடைந்ததாகவும் வெய்ஸ் தெரிவித்தார்.

இன்னும், இத்தொடர் மோதல்களில் அதிக எண்ணிக்கையிலான சிறார்கள் கொல்லப்படவோ அல்லது காயமடையவோ நேரிடுகிறது என்று ஐக்கிய நாடுகளின் சிறார்கள் நல அமைப்பான யூனிசெஃப் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள், இலங்கை இராணுவம் ஆகிய இருதரப்பும் பெருமளவில் அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பை, குறிப்பாக சிறார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது என்றும், அதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமான விடயம் என்றும் அவ்வமைப்பு கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.