2009-01-28 18:11:09

எங்கே நிம்மதி. பொருளாதாரம் பற்றி இன்று நாம் பார்ப்போம்.2801


ஜி.கே . செஸ்டர்ட்டன் எழுதிய மாஜிக் என்னும் நாடகத்தில் ஒரு பிரபு இரண்டு காசோலைகளை எழுதுகிறார் . ஒரு செக்கை ஒருவரிடம் கொடுத்து ஒரு இடத்தை விலைக்கு வாங்குமாறு கூறுகிறார் . வேறு ஒருவரிடம் இன்னொரு செக்கைக் கொடுத்து முதலில் இடம் வாங்கச் சொன்னவர் அந்த இடத்தை வாங்கவிடாமல் பார்த்துக்கொள்ளச் செய்கிறார் . எல்லோரும் அந்த பிரபுவை கொஞ்ச நாட்களிலேயே மிகத் தாராளமானவர் எனக் கூற ஆரம்பித்தனர் .

பொருளாதாரம் என்பது மூலதனத்தை அடிப்படையாகக் கொண்டது . அது பொருளைப் பெருக்குவதற்காக இயங்குவது . ஒன்றை வைத்திருக்கிறோம் என்பது ஒரு குறைபாடு . நாம் குறைபாட்டை , இல்லாமையை நிறைவு செய்வதற்கே நாம் ஒன்றைத் தேடுகிறோம் .



யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன். என்னும் குறள் 341 என்ன கூறுகிறது , ஒருவன் எவ்வெப்பொருளினின்று நீங்கினானோ அவ்வப் பொருளால் துன்பமுறுத லில்லை . நீங்குதல் என்பது மனத்தால் நீங்குதல் .அதாவது பற்று விடுத்தல் . பொருள்களால் வரும் இம்மைத் துன்பங்களிலிருந்து நீங்குதல் .



நாலடியார் என்ன கூறுகிறார் –

ஈட்டலும் துன்பம், மற்று ஈட்டிய ஒண்பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் . – காத்தல்

குறைபடின் துன்பம், கெடின்துன்பம், துன்பத்துக்கு

உறைபதி மற்றைப் பொருள் . நாலடி 280 .

பொருள்களைத் துறப்பதனால் நன்மையுண்டு எனக் கூறுகிறார் .



நாம் நிறைவான வாழ்வைக் கொண்டிருந்தால் நமக்கு உணவும் கூடத் தேவைப்படாது . அறிவு குறைவாக இருப்பதால் கல்வியைத் தேடுகிறோம் . நாம் நமக்குள்ளேயே மகிழ்ச்சியாக இருக்கமுடியாததால் நாம் பிறர் அன்பைத் தேடுகிறோம் .



படைப்பு என்ற சொல்தான் தேவை என்ற சொல்லுக்கு மூலகாரணம் . உலகம் உருவாவதற்கு முன்னர் கடவுள் சுயமாக இருக்கும்போது ஒரு வார்த்தை தான் இருந்தது . அது கடவுள் இருக்கிறவர் . அவ்வார்த்தை கடவுள், அனைத்துக்கும் மேலானவர் என்பதைக் குறிக்கிறது . கடவுள் தாமே இருப்பதால் அவர் எல்லையில்லாத அளவு செல்வந்தர் . அவர் எதையாவது வைத்திருந்தால் அவர் வெளியிலிருந்து ஒரு பொருள் அவரை நிறைவு செய்யத் தேவைப்படுகிறது என்று ஆகிவிடும் .



நம்மைப் பொறுத்தவரை எல்லாப் பொருட்களுமே நமக்கு வெளியே உள்ளவையே . அவை நம்முள்ளே இருப்பதில்லை . எனவே நம்மோடு பொருட்செல்வம் ஒன்றித்துப் போனதாக ஒரு பிரமை கொள்ளவது உண்மையல்ல . நாம் இருப்பதும் உயிர்வாழ்வதும் வேறு . பொருள் செல்வத்தைக் கொண்டிருப்பது வேறு . நாம் சில பொருள்களைக் கொண்டிருப்பதால் நாம் யாரோ என்று பெரிதாக நினைத்துக் கொள்கிறோம் . வாழ்வின் இறுதித் தீர்ப்பு நாளில் நம்மைப் பற்றியே நாம் கணக்குக் கொடுக்க வேண்டுமேயொழிய நாம் என்ன வைத்திருந்தோம் என்பதைப் பற்றி அல்ல . நாம் எதைக் கொண்டுபோகமுடியும் என்றால் கப்பல் கவிழும்போது , விமானம் வீழும்போதோ நாம் எதைக் கொண்டு போகமுடியுமோ அதைத்தான் கொண்டுபோக முடியும் . அதனால்தான் மாமன்னன் அலெக்சாண்டர் தான் மறுவீட்டுக்கு ஒன்றும் கொண்டு செல்லவில்லை என உலகுக்குக் காட்டும் வண்ணம் தம் கைகளை விரித்துக்காட்டி உள்ளங்கை வெறுங்கையே என உணர்த்தினான் . ஒரு நல்ல காவலர் சாலையோரமாக நாம் ஓட்டிச் செல்லும் வண்டியை நிறுத்தும்போது நாம் என்ன வண்டியை ஓட்டிச் செல்கிறோம் என்று அல்ல , மாறாக சாலை விதிகளைப் பின்பற்றினோமா எனச் சோதிக்கிறார் . மனிதன் பணத்தைத் தேடித்தேடிச் சேர்க்கலாம் . அடாவடித்தனமாகச் சேர்க்கலாம் . தவறான வழிகளில் சேர்க்கலாம் . பேராசையோடு சேர்க்கலாம் . கடவுள் சொல்கிறார் மனிதா இன்றிரவே நீ மேல் வீட்டுக்கு வரப்போகிறாய் . வீடுவரை உறவு . கடைசிவரை யாரோ .



பொருட்செல்வம் இரண்டு வகைப்படும் . உண்மையானது . மற்றது அடையாளமாக உள்ளது . உண்மையானது என்ன – நம் படுக்கை , நிலம் , ஐஸ்கிரீம் , முட்டை , வண்டி போன்றவை . அடையாளப் பொருள்கள் – நம்முடைய வங்கிக் கணக்கு , பணக்கட்டு போன்றவை .

இயற்கை செல்வத்துக்கு ஒரு எல்லையைப் போடுகிறது . ஒருவர் அளவில்லாத அளவு உண்ணமுடியாது . வீட்டுத் தோட்டம் சிறிய அளவுதான் இருக்கமுடியும் . கொடைக்கானலை வளைத்து வீட்டுக்கு அருகே வைத்துக் கொண்டு வாழ்வது எப்படி . வீட்டில் ஒரு குறிப்பிட்ட அளவு படுக்கைகள் தான் தேவைப்படும் . தாஜ் கோரமாண்டல் தங்கும் விடுதியா நமக்குத் தேவை . ஒருவன் எனக்கு ஐஸ்கிரீம் என்றால் அதிகம் பிடிக்கும் எனக்கூறினால் எவ்வளவைச் சாப்பிடமுடியும் . கிராமத்தில் குளிர் சாதன வசதியில்லை . அவர்கள் நிறைய உணவுப் பொருட்களை அதில் அடுக்கி வைப்பதில்லை . அவர்கள் போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என வாழ்பவர்கள் .



அடையாளப் பொருள் செல்வம் மிட்டல் , அம்பாணி போன்ற வர்களிடம் அளவில்லாமல் வங்கியிலோ , தொழிற் கூடத்திலோ புதைக்கப்பட்டிருக்கலாம் . ஆசையை விடு என்றார் புத்தர் . அதுவே துன்பத்துக்குக் காரணம் என்றார் . அடையாள பொருள்செல்வம் இதயத்தை நிரப்பாவிட்டாலும் , காலத்தை நிரப்பும் . உண்மையான செல்வம் தேவைக்கு ஏற்றாற்போல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது . அடையாளச் செல்வமோ கவனமில்லாது இருப்போம் என்றால் நம்மை ஆசையில் மூழ்கடித்து நிம்மதியை இழக்கச் செய்யும் . மக்டோனால்டு தற்பொழுது உலகப் பொருளாதார நெருக்கடி நேரத்திலும் தம் உணவு விடுதிகளைப் பெருக்கப் போவதாகக் கூறியுள்ளார்கள் . செயின் புகைப்பிடிப்பது , செயின் சூப்பர் மார்க்கெட் ,செயின் ரயில் சாலைகள் போன்று அடையாளச் செல்வத்தைப் பெருக்கிக் கொண்டு அழகு பார்க்கலாம் . நற்செய்தி கூறுகிறது –நீ உன் களஞ்சியத்தைப் பெரிதாக்கு . இன்று இரவு உன் உயிர் போகப்போகிறது . நீதித்தேவனிடம் நீ தனியாக நின்று கணக்குக் கொடுக்கவேண்டியிருக்கும் .



பற்றிவிடா இடும்பைகள் பற்றினைப்

பற்றிவிடாதவர்க்கு . குறள் .347 .



ஆசைகளை , பற்றுக்களை விடாது பற்றிக் கொண்டிருப்பவர்களைத் துன்பங்களும் விடாது பற்றிக்கொள்ளும்



எனவே காற்றுள்ளபோதே பற்றறுத்து நிம்மதியாக வாழக் கற்றுக்கொள்வோம் .

பகிர்ந்து உண்டு பல்லுயிர் ஓம்புவோம் . முயன்று வளமாக வாழ்வோம் , ஆனால் பற்றுக்களைப் பற்றிக்கொண்டு நிம்மதி இழக்க வேண்டாம்.








All the contents on this site are copyrighted ©.