2009-01-26 14:00:45

புனித பவுல் காலத்தில் கடிதம் எழுதும் முறைகள்


ஜன.26,2009. அன்பர்களே, கடிதம் எழுதுதல் என்கிற ஒரு செயல், தொன்றுதொட்டு மொழியின் வளர்ச்சிக்கும், உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கும் ஒரு சரியான ஊடகமாக இருந்து வருகிறது. இது, தொலைவில் இருக்கும் உறவுகளும், நட்புகளும் தொடர்பு கொள்ள ஒரு மிகச் சரியான வழியாக இருந்து வருகிறது. கடிதம் அனுப்பும் பழக்கம் பாரசீகப் பேரரசர் முதலாம் தெரியூஸ் காலத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசுப் பணிகள் சம்மந்தமாக மட்டுமே இப்பரிமாற்றங்கள் இருந்தன. பெரும்பாலும் குதிரைகளில் பயணம் செய்தே ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு அஞ்சல்களைக் கொண்டு சேர்ப்பார்கள். உரோமைப் பேரரசின் காலத்தில் அதிலும் குறிப்பாக, ஜூலியஸ் சீசர் ஆட்சியில் அஞ்சல்துறை விரிவுபடுத்தப்பட்டது. அதாவது முறையான அஞ்சல் நிலையங்கள் பெரு நகரங்களில் தொடங்கப்பட்டன. ஆயினும் அதுவும் அரசுப் பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டன. தனிப்பட்ட நபர்கள் தங்களது கடிதங்களை உரியவர்களிடம் சேர்ப்பதற்கு வேலைக்கு ஆட்களை அமர்த்தியிருந்தார்கள்.

இந்தக் கடித அமைப்பு முறைகள் விவிலியத்திலும் காணக்கிடக்கின்றன. (2சாமு.11:14-15;1அர.21:9-10;2அர.19:10-12;எரே.29:1-23). பழைய ஏற்பாட்டின் 46 புத்தங்களில் சில பகுதிகளே கடித அமைப்பைக் கொண்டிருக்கின்றன. (2சாமு.11:14-15; 1அர.21:9-10; 2அர.19:10-12;எரே. 29: 1-23). எடுத்துக்காட்டாக, சாமுவேல் இரண்டாம் புத்தகம், பிரிவு 11, வசனங்கள் 14, 15ல்

“காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு மடல் எழுதி அதை உரியாவின் கையில் கொடுத்தனுப்பினார். அம்மடலில் அவர், உரியாவைப் போர் கடுமையாக நடக்கும் முன்னிலையில் நிறுத்தி, அவனைவிட்டு பின்வாங்கு அவன் வெட்டுண்டு மடியட்டும் என்று குறிப்பிட்டிருந்தார்”

ஆனால், புதிய ஏற்பாட்டின் 27 நூல்களுள் 21 நூல்கள் கடிதங்களாகவே அமைந்துள்ளன. மிகப் பழமையான மரபுப்படி இவற்றுள் 14 கடிதங்கள், புனித பவுலின் கடிதத் தொகுப்புகள் என்றே அழைக்கப்படுகின்றன. அன்றைய கிரேக்க-உரோமை உலகத்தில் தத்துவமேதைகள் தங்கள் போதனைகளைப் பறைசாற்ற கடித இலக்கிய வகையையே மிகப்பரந்த அளவில் பயன்படுத்தினர். எருசலேமுக்கு வெளியே வாழ்ந்த யூதர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதத்தில் யூதமத ராபிகளும் இந்தக் கடித இலக்கிய முறையைப் பயன்படுத்தி உள்ளார்கள். எனவே புனித பவுலும் தான் உருவாக்கிய சபைகளுக்குக் கிறிஸ்தவப் போதனையை முழுமையாகத் தெரிவிப்பதற்கு கடித இலக்கிய முறையைப் பயன்படுத்தி உள்ளார் என்று விவிலிய அறிஞர்கள் சொல்கிறார்கள். புனித பவுலின் கடிதம் எழுதும் முறைகள் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

பவுல் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி - விவிலியத் தொடரில் நாம் சில நேரங்களில் புனித பவுல் எழுதிய கடிதம் என்றும், சில நேரங்களில் புனித பவுல் எழுதிய திருமுகம் என்றும் சொல்லி வருகிறோம். திருமுகம் என்றால் என்ன என்று நீங்கள் நினைக்கலாம். பொதுவாக கடிதம் என்பது, தனிநபர்களுக்கிடையே இடம் பெறும் எழுத்து தகவல் பரிமாற்றமாகும். சிலவேளைகளில் ஒரு குறிப்பிட்ட குழுவுக்குக்கூட கடிதம் எழுதப்படுகின்றது. இந்நாட்களில்கூட இலங்கையில் அப்பாவி மக்கள் காப்பாற்றப்படுமாறு உலக சமுதாயத்துக்கு விண்ணப்பக் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும், ஒரு தனிநபர், இன்னொரு தனிநபருக்கு எழுதும் கடிதத்தின் உட்கருத்து அவர்கள் இருவர் சார்ந்ததாகவே இருக்கும். பெரும்பாலும் இதன் நடை, இலக்கிய நடையிலிருந்து மாறுபட்டு எதார்த்தமான பேச்சு நடையில் அமைந்திருக்கும். தொடர்பு கொள்கிறவர்களின் உணர்வுகளும் அறிவுரைகளும் ஆறுதலும் சற்று தூக்கலாகவே அதில் இருக்கும். இந்தக் கடிதத்தைக் கேளுங்களேன்.....

அன்புள்ள ராஜூவுக்கு, உன் தந்தை பாசத்துடன் எழுதிக்கொள்வது. எனது எல்லா உறவினர் வீட்டிலும் அந்த வீட்டுக் குழந்தையை நான் எடுத்து வைத்துகொண்டு இருக்கும் புகைப்படம் இருப்பதை நீ அறிவாய். மற்ற குழந்தைகளை நேசித்த நான் உன்னை எப்படி நேசித்திருப்பேன் என்பதை சொல்ல வேண்டியதில்லை! நீ குழந்தையாய் இருக்கும்போது என்னிடம் மிகவும் ஒட்டிக்கொண்டிருப்பாய். அதனால்தானோ என்னவோ பெரியவனாக, ஆக விலகிவிட்டாய்! உனக்கு நான் அமைதியை கற்றுக்கொடுத்தேன். நீ எல்லோரிடமும் அளவுக்கதிகமாய் பேசிக்கொண்டிருக்கிறாய். நீ எத்தனையோ உயரங்களைத் தொட்டிருக்க வேண்டியவன்தான். உன் சோம்பேறித்தனத்தால் எல்லாவற்றையும் இழந்து கொண்டிருக்கிறாய். வேலை வேலை என்றிருந்து பத்திரிகைகளுக்கு எழுதிப்போட நேரமில்லாதிருந்த நீ இந்த வலையுலகத்தில் எழுதத் துவங்கியது குறித்து மிக்க மகிழ்ச்சி!.................

ஓர் ஆள் இன்னொருவருக்கு எழுதும் கடிதங்கள் தவிர, திருமுகங்கள் என்பது இந்தத் தனிப்பட்ட கடிதத் தன்மையிலிருந்து மாறுபட்டு பொதுவாக ஒரு குழுவை நோக்கியதாக அமைந்திருக்கும். ஒரு கருத்தை மையப்படுத்தியதாக இருக்கும். ஒலிபரப்பப்படவோ அல்லது பலர் கூடுகின்ற இடத்தில் வாசிக்கக்கூடிய தன்மையுடனும் இருக்கும். கிறிஸ்துமஸ், நாட்டின் பொதுத்தேர்தல் போன்ற முக்கிய காலங்களில் ஆயர்கள் வெளியிடும் மேய்ப்புப்பணி அறிக்கைகளும் இந்த வகையைச் சேர்ந்தவை என்று சொல்லலாம். எனவே புனித பவுலின் எழுத்துக்களைப் பொறுத்தமட்டில் அவை கடிதங்களா? அல்லது திருமுகங்களா? என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. நாம் புரிந்து கொள்ளும் முறையைப் பொறுத்து அவர் எழுத்துக்களை வகைப்படுத்தலாம் என்று கூறும் விவிலிய ஆய்வாளர்கள்,

பிலமோன், 1 திமொத்தேயு, 2 திமொத்தேயு, தீத்து ஆகியவை தனிநபர்களுக்கு எழுதப்பட்டவை என்றும்,

உரோமையர், 1கொரிந்தியர், 2கொரிந்தியர், கலாத்தியர், பிலிப்பியர், கொலோசையர், 1 தெசலோனிக்கர், 2தெசலோனிக்கர் ஆகியவை சில குறிப்பிட்ட குழுக்களுக்கு எழுதப்பட்டவை என்றும்,

எபேசியர் குழுப் பெயர் இல்லாமல் எழுதப்பட்டவை என்றும், எபிரேயர் பெறுபவர் முகவரி இல்லாமல் எழுதப்பட்டவை என்றும் பகுத்துள்ளனர்.

பவுல் ஏன் திருமுகப்பாணியை பின்பற்றினார் என்ற கேள்வி எழுகின்றது. காரணம், பவுல் தான் உருவாக்கிய சபைகளோடு உரையாடலையும் புரிந்துகொள்ளுதலையும் ஏற்படுத்துவதற்கு இந்த இலக்கிய நடையே அவருக்கு ஏற்றதாக இருந்தது. இன்னும், அவர் வாழ்ந்த காலத்தில் இந்த நடை பரவலாகப் புழக்கத்தில் இருந்தது. சபை உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்குப் பதில் தரவும் கிறிஸ்தவக் கோட்பாடுகளின் சில கூறுகளை விளக்கவும், திருவழிபாட்டு ஒழுங்குகளுக்கு அறிவுரை கூறவும் மீட்பின் நற்செய்தியை முழுமையாய்ப் புரிந்து கொள்ள விளக்கங்கள் அளிக்கவும், நற்செய்திப் பணியில் ஏற்படும் இடர்களுக்கு ஆலோசனை வழங்கவும் இந்தக் கடித இலக்கிய முறையே பவுலுக்குப் பெரும் தூணைபுரிந்தது.

இக்கால கணனிகள் இல்லாத அக்காலத்தில் கடிதம் எழுதுவது ஒரு கடினமான பணியாகவும், அது அதிக நேரத்தை எடுக்கும் ஒரு வேலையாகவும் இருந்தது. எழுதுவதற்கும், நாணல் கோரைப் புல்லால் செய்யப்பட்ட சொற சொறப்பான தாள்களே கிடைத்தன. எழுதுவதற்கு, ஒருவித இரும்பு உலோகத்திலான மை பயன்படுத்தப்பட்டது. எழுதுகோலாக, மூங்கில் குச்சிகளும், பறவைகலின் சிறகுகளும் பயன்படுத்தப்பட்டன. வளைவான எழுத்துக்களை எழுதப் பயிற்சி பெற்ற எழுத்தாளர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். ஒரு திறமையான எழுத்தாளரால் ஒருமணி நேரத்திற்கு 72 வார்த்தைகளை மட்டுமே எழுதமுடியும். நாணல் கோரைப்புல் தாளில் ஒரு பக்கத்திற்கு அதிக பட்சமாக 140 வார்த்தைகளே எழுதமுடியும். இந்த ஆய்வுக் குறிப்புக்களின் அடிப்படையில் புனித பவுலின் எழுத்துக்களை ஆய்வு செய்த அறிஞர் ரோலர், 7101 கிரேக்க வார்த்தைகளை உள்ளடக்கிய உரோமையருக்கு எழுதிய திருமுகத்தை எழுதி முடிக்க ஐம்பது நாணல் புல் தாள்கள் தேவைப்பட்டிருக்கும், மேலும், தொடர்ச்சியாக 98 மணி வேலை நேரம் பயனபடுத்தப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். எனினும் பவுல் கடிதங்களிலேயே அளவில் மிகவும் சிறியதான பிலமோனுக்கு எழுதிய கடிதத்தை எழுதி முடிக்க நான்கு மணி வேலை நேரமும், மூன்று நாணல் புல் தாள்களும் ஆகியிருக்கும் என்று சொல்லப்படுகின்றது.

உழைக்க மனமில்லாத எவரும் உண்ணக்கூடாது என்பது புனித பவுலின் கூற்று. அதற்கொப்ப அவர் தனது அன்றாடத் தேவைகளுக்குத் தம் கையால் உழைத்தே வாழ்ந்தார். எனவே அவர், மாலை நேரங்களில்தான் கடிதங்கள் எழுத நேரம் ஒதுக்கியிருக்க வேண்டும். மேலும், எந்த ஓர் எழுத்தாளரும் தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் மட்டுமே எழுதும் வேலை செய்திருக்க முடியும். ஆக, பவுலுக்கு ஒரு தனிக்கடிதத்தை முடிக்க பல மாதங்கள் ஆகியிருக்கக்கூடும் என்றும், அவர் தம் கடிதங்களைச் செயலர்களை வைத்தே எழுதியுள்ளார் என்றும் சொல்கிறார்கள். இன்னும், கி.பி.அறுபதுகளில் இலத்தீன் மொழியில் சுருக்கெழுத்து முறைகள் புழக்கத்தில் இருந்துள்ளன. ஆதலால் கிரேக்க எழுத்தாளர்களும் சில சுருக்கெழுத்து முறைகளைப் பின்பற்றியிருக்கக்கூடும். மெழுகு பலகைகளில் மிக விரைவாகக் குறிப்புக்களை எழுதி வைத்துப் பின்னர் அவற்றை விரிவாக நாணல் புல் தாளில் முறைப்படுத்தி எழுதிய வேண்டும். பவுலின் கடிதங்களின் வாக்கிய அமைப்புக்களைப் பார்க்கும் போது இக்கூற்று உண்மையாய் இருக்கக்கூடும் என்பதும் அறிஞர்களின் கருத்து.

புனித பவுல் இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதிய கடிதங்களை உரியவர்களிடம் எப்படிச் சேர்த்தார் என்று சிந்திக்கலாம். ஏனெனில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கூரியர் தபாலோ அல்லது வேறு நவீன வசதிகளோ இல்லை. நாம் இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சொன்ன வழியைப் பின்பற்றி பவுலும் தமது கடிதங்களை, தாம் உருவாக்கிய திருச்சபைகளுக்கும் தனிநபருக்கும் அனுப்ப நம்பிக்கைக்குரிய நபர்களை ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.

அன்புள்ளங்களே, புனித பவுல் ஆண்டில் பாதியைக் கடந்து வந்துள்ளோம். புனித பவுல் தமஸ்கு சாலையில் மனமாறி அனனியாவிடம் ஞானதீட்சை பெற்ற விழாவை திருச்சபை ஜனவரி 25 இஞ்ஞாயிறன்று சிறப்பித்தது. அன்றைய மூவேளை செப உரையில் திருத்தந்தை 16ம் பெனடிக்டும், ஒருவர் வாழ்வில் மனமாற்றம் அடைய இத்திருதூதர் வழியைப் பின்பற்றுமாறு அழைப்புவிடுத்தார். எனவே நாம் புனித பவுலது திருமுகங்களை வாசித்து இறைவனை மையமாகக் கொண்ட வாழ்வை அமைப்போம்.








All the contents on this site are copyrighted ©.