2009-01-24 14:49:16

திருச்சபைக்குப் புறம்பாக்கப்பட்டிருந்த லெப்பேப்ரெ கழகத்தின் நான்கு ஆயர்கள் மீதான தடை நீக்கப்பட்டது


ஜன.24,2009. மறைந்த பேராயர் மார்ஷெல் லெப்பேப்ரெ புனித பத்தாம் பத்திநாதர் சகோரத்துவ கழகத்திற்கும் கத்தோலிக்கத் திருச்சபைக்குமிடையே ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக நிலவும் பிளவை நிவர்த்தி செய்யும் விதமாக, புனித பத்தாம் பத்திநாதர் கழகத்தைச் சேர்ந்த நான்கு ஆயர்களை மீண்டும் கத்தோலிக்கத் திருச்சபையில் இணைக்கும் ஆணையை இன்று வெளியிட்டது திருப்பீடம்.

இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் பல மாற்றங்களை, குறிப்பாக இலத்தீன் மொழியைவிட்டு தல மொழிகளில் திருப்பலி நிகழ்த்துவதை ஏற்க மறுத்து 1970ம் ஆண்டில் ப்ரெஞ்ச் பேராயர் மார்ஷெல் லெப்பேப்ரெ நிறுவிய புனித பத்தாம் பத்திநாதர் சகோரத்துவ கழகத்தில் 1988ம் ஆண்டு பெர்னார்டு ப்பெலெ, பெர்னார்டு திசியர் தெ மலெரெய்ஸ், ரிச்சர்டு வில்லியம்சன், அல்போன்சோ தெ காலரெத்தா ஆகிய நான்கு பேரும், ஆயர்களாகத் திருநிலைபடுத்தப்பட்டனர். இதையொட்டி திருப்பீடம் இவர்களை உரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்குப் புறம்பாக்கியது.

எனினும் இந்நால்வரின் பெயரில் ஆயர் பெர்னார்டு ப்பெலெ, கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி திருப்பீட எக்லேசியா தெய் என்ற அவையின் தலைவர் கர்தினால் தாரியோ காஸ்ட்ரிலியோன் ஹோயோஸிக்கு அனுப்பிய விண்ணப்பக் கடிதத்தைப் பரிசீலனை செய்த திருப்பீடம், அவர்கள் மீதான புறம்பாக்கலை நீக்கும் ஆணையை வெளியிட்டுள்ளது.

தாங்கள் எப்பொழுதும் உரோமன் கத்தோலிக்கராக இருப்பதற்கு உறுதி பூண்டுள்ளதாகவும், அத்திருச்சபையின் பணிக்குத் தங்களின் பணியை அர்ப்பணிப்பதாகவும் அதன் போதனைகளையும் புனித பேதுருவின் தலைமையையும் ஏற்பதாகவும் அந்நால்வரின் விண்ணப்பக் கடிதம் கூறுகிறது.

அவர்கள் மீதான புறம்பாக்கலை நீக்கும் ஆணையில் ஜனவரி 21ம் தேதி கையெழுத்திட்டு ஜனவரி 24ம் தேதி வெளியிட்ட திருப்பீட ஆயர்கள் பேராயத் தலைவர் கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே, திருச்சபையிலிருந்து புறம்பாக்கப்பட்ட இவர்களுடனான ஆன்மீக ரீதியிலான மனவருத்தத்தை அகற்றவும் திருச்சபையில் ஒன்றிப்பை ஊக்குவிக்கவுமென இவர்கள் மீதான தடையை நீக்க திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தமது முழு ஆதரவை வழங்கினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 








All the contents on this site are copyrighted ©.