2009-01-21 18:25:28

திருத்தந்தையின் மறைபோதகம் – 21 -01 -09 .


உரோமை நகரம் மேகமூட்டமாகவும் குற்றாலம் போன்ற சாரல் மழையோடும் இருந்தது . இன்றைய மறைபோதகம் முந்நாள் திருத்தந்தை 6 ஆம் பவுல் அரங்கத்தில் இருந்தது .

மறைபோதகத்துக்கு முன்னர் திருத்தந்தை புதனன்று தூய ஆக்னேசம்மாளின் விழாவைமுன்னிட்டு இங்குள்ள வழக்கப்படி பசிலிக்காவுக்குக் காணிக்கையாக வந்த அர்ச்சிக்கப்பட்ட செம்மறியாடுகளை பெற்றுக்கொண்டார் . ஆக்னஸ் என்றால் செம்மறி என்று பொருள் . மேலும் ஆஸ்திரியா நாட்டின் மரியாசெல் மாநகரம் திருத்தந்தைக்கு அந்நகரின் கெளரவக் குடிமகன் என்ற பட்டம் வழங்கி மகிழ்ச்சியைத் தெரிவித்தது . மரியாசெல் நகரத்தில் அன்னை மரியாவுக்குப் புகழ்பெற்ற திருத்தலம் உள்ளது .

திருத்தந்தை வந்திருந்தவர்களை வாழ்த்தி வரவேற்றார் . கடந்த ஞாயிறு நாம் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தைத் தொடங்கினோம் என்றார் திருத்தந்தை . இறைவாக்கினர் எசக்கியேல் அதிகாரம் 37 , 17 இல், யூதாவையும் இஸ்ராயேலையும் இரண்டு கோல்களாக உருவகப்படுத்தி அவ்விரண்டையும் ஒன்றாக இணைத்து அவை ஒரே நாடாக ஐக்கியமாகுமாறு கடவுள் ஆணையிட்டு பிரிந்திருந்த நாடுகளை கடவுள் ஒன்று சேர்த்ததாகக் கூறுகிறார் . கிறிஸ்தவர்கள் என்ற முறையில் நாம் இவ்வார்த்தைகளைப் படித்து கிறிஸ்துவின் சீடர்கள் நாமெல்லாம் ஒன்றாகச் செபிக்கவும் பணிமேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறோம் என்றார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . 2 ஆம் வத்திக்கான் சங்கம் கூறுவதுபோல மனமாற்றம் இல்லாது கிறிஸ்தவ ஐக்கியம் கிடையாது . கிறிஸ்தவர்களை ஒன்று சேர்ப்பதற்காக ஆண்டவர் தரும் அனைத்து நனமைகளுக்கும் நாமெல்லாம் நன்றி கூற இந்தக் கிறிஸ்தவ ஐக்கிய வாரம் நமக்குத் தரப்பட்டுள்ளது .

வத்திக்கானிலும் அவரது திருப்பயணத்தின் போதும் பல்வேறு திருச்சபையின் பிரதிநிதிகள் , கிறிஸ்தவக் குழுக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றதை திருத்தந்தை அதனை நன்றியோடு நினைவு கூர்ந்தார். இந்த வாரம் தலத்திருச்சபையிலும் , உலகு எங்கும் கிறிஸ்தவ ஒருமைப்பாட்டிற்காக எடுக்கப்படும் முயற்சிகளின்போது கடவுள் வார்த்தைக்குச் செவிமடுத்து ஒரே ஆண்டவர் , ஒரே விசுவாசம் , ஒரே திருமுழுக்கை நாம் ஏற்றுக் கொள்ளும் வரம் கேட்போம் . இறைவாக்கைக் கவனமாகச் செவிமடுத்து , செபத்தை ஆழப்படுத்தி , கலந்து பேசுவதை அதிகப்படுத்தி திருத்தூதர் பவுலைப் போல நாமும் ஆண்டவர்மீது முழுமையாகப் பற்றுக்கொண்டு அவருடைய உடலாகிய திருச்சபையின் ஒருமைப்பாட்டிற்காக வாழ அத்திருத்தூதரைப் பின்பற்றுவோம் என மறைபோதகம் வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .

முடிவில் வந்திருந்த அனைவருக்கும் , சிறப்பாக மால்ட்டா நாட்டிலிருந்து வந்திருந்த பேராயர் பால் கிரமோனாவையும், அவரோடு வந்த திருப்பயணியரையும் வாழ்த்தி தமது அப்போஸ்தலிக்க ஆசியை வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.