2009-01-20 15:15:39

தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறார் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்பட திருப்பீடம் வலியுறுத்தல்


ஜன.20,2009. தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறாரின் எதிர்காலம் அந்நோயின் எதிர்விளைவுகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் வேளை, நாடுகளின் நலவாழ்வு திட்டங்கள் இச்சிறார் மீது சிறப்புக் கவனம் செலுத்துவதாய் இருக்குமாறு திருப்பீடம் வலியுறுத்தியது.

ஜனவரி 25, வருகிற ஞாயிறன்று 56வது உலக தொழுநோயாளர் தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு இன்று செய்தி வெளியிட்ட நலவாழ்வு பணியாளர்க்கான திருப்பீட அவைத் தலைவர் கர்தினால் ஹாவியர் லொசானோ பாராஹான், இச்சிறாருக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்கான வசதிகள் அமைத்துக் கொடுக்கப்படுமாறு கேட்டுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் உலகில் 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கு அதிகமானோர் தொழுநோயால் பாதிக்கப்படுகின்றனர், ஆண்டுதோறும் நாற்பதாயிரம் சிறாரும் இதனால் தாக்கப்படுகின்றனர், இவர்களில் ஏறத்தாழ 12 விழுக்காட்டினர் 15 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கர்தினாலின் செய்தி கூறுகிறது.

உலக நலவாழ்வு நிறுவனத்தின் அண்மைக் கணக்கெடுப்பின்படி 2007இல், 2,54,525 பேர் புதிதாக இந்நோயால் தாக்கப்பட்டனர், இவர்களில் 2,12,802 பேருக்கு ஏற்கனவே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும் அச் செய்தி கூறுகிறது.

இவர்களில் பலர் ஏழ்மையில் வாடுகின்றனர் என்றுரைக்கும் கர்தினாலின் செய்தி, இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி திருச்சபை இந்நோயாளிகளுக்குப் பணி செய்கின்றது என்று கூறுகிறது.

குணமாக்கக்கூடிய இத்தொழுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 1954இல் கத்தோலிக்கரான ராவுல் ப்பொல்லேரேவ் என்ற ப்ரெஞ்ச் எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் கவிஞரால் உருவாக்கப்பட்டு ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்டது. இத்தினம் ஆண்டுதோறும் ஜனவரி இறுதி ஞாயிறன்று கடைபிடிக்கப்படுகிறது.

தற்சமயம் உலகில் ஏறத்தாழ ஒருகோடி தொழுநோயாளிகள் உள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.