2009-01-19 15:09:54

2012ல் ஏழாவது சர்வதேச குடும்ப மாநாடு


ஜன.19, 2009. ஏழாவது சர்வதேச குடும்ப மாநாடு 2012ம் ஆண்டு வசந்த காலத்தில் மிலானில் நடைபெறும் என்று திருப்பீட குடும்ப அவைத் தலைவர் கர்தினால் என்னியோ அந்தோனெல்லி அறிவித்தார்.

ஏழாவது சர்வதேச குடும்ப மாநாடு பற்றிய திருத்தந்தையின் அறிவிப்பைத் தொடர்ந்து பேசிய இத்தாலிய கர்தினால் அந்தோனெல்லி, பேரரசர் கான்ஸ்ட்டடைன் மற்றும் லிசினியுஸ் அகுஸ்டசால் கி.பி.313ம் ஆண்டில் வழங்கப்பட்ட மிலான் அரச ஆணையின் 1700ஆம் ஆண்டை முன்னிட்டு இவ்வுலக குடும்ப மாநாடு 2012ல் மிலானில் நடைபெறும் என்றார்.

இந்த அரச ஆணையின் மூலம் அன்றைய உரோமைப் பேரரசில் சமய சுதந்திரம் வழங்கப்பட்டது என்றுரைத்த கர்தினால், இந்தக் குடும்ப மாநாடு, பல்சமய உரையாடலையும் சமய சுதந்திரத்தையும் ஊக்குவிப்பதற்கான தருணமாக அமையும் என்று கூறினார்.

“இப்பூமிபந்தை போஷித்தல், வாழ்வுக்கான சக்தி” என்ற தலைப்பில் மிலான் மாநகராட்சி “உலக அருங்காட்சி 2015” என்ற நிகழ்வை நடத்தவிருப்பது பற்றியும் குறிப்பிட்ட அவர், கடவுள் விரும்பினால் அடுத்து மிலானில் சந்திப்போம் என்றும் மெக்சிகோ நிறைவு விழாவில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான விசுவாசிகளிடம் கூறினார்.

ஐ.நா.நிறுவனம் 1994ல் சர்வதேச குடும்ப ஆண்டை கடைபிடித்ததையொட்டி மறைந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் இந்த சர்வதேச குடும்ப மாநாட்டை அதே ஆண்டில் உரோமையில் நடத்தினார். அதன் பின்னர் இது, 1997ல் ரியோ தெ ஜெனியெரோவிலும், 2000மாம் ஆண்டில் உரோமையிலும் 2003ல் மனிலாவிலும், 2006ல் வலென்சியாவிலும் 2009ல் மெக்சிகோவிலும் என மூன்றாண்டுக்கு ஒருமுறை நடை பெற்று வருகிறது.








All the contents on this site are copyrighted ©.