2009-01-17 20:16:00

வழிபாட்டு ஆண்டின் 2 ஆம் ஞாயிறு மறையுரை - 17-01 – 09 .


நற்செய்தி - புனித யோவான் 1, 35 – 42 .







தூய யோவான் . அதிகாரம் 1




35 மறு நாள் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் அங்கு நின்று கொண்டிருந்தார்.36 இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, ' இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி ' என்றார்.37 அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.38 இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, 'என்ன தேடுகிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், 'ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?' என்று கேட்டார்கள். 39 அவர் அவர்களிடம், ' வந்து பாருங்கள் ' என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.40 யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர்.41 அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, ' மெசியாவைக் கண்டோம் ' என்றார். ' மெசியா ' என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள்.42 பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, 'நீ யோவானின் மகன் சீமோன். இனி 'கேபா' எனப்படுவாய்' என்றார். 'கேபா' என்றால் 'பாறை' என்பது பொருள்.





மையக்கருத்து – தூய அந்திரேயாவைப் போல நாமும் கிறிஸ்துவில் நாம் கொண்டுள்ள விசுவாசத்தை பிறரோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் .



சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முதியவர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார் . அவரை வசதியாக இருக்கச் செய்த பிறகு செவிலிப் பெண் வழக்கமாக குறிக்க வேண்டிய சில கேள்விகளைக் கேட்டார் . ஒரு கேள்வி அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதாகும் . முதியவர் நான் கத்தோலிக்கத் திருச்சபையை விரும்புகிறேன் . ஆனால் அம்மதம் பற்றி இதுவரை யாரும் எனக்குத் தெரியப்படுத்தவில்லை என்று கூறினார் . நீங்கள்தான் முதல்முறையாக என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள் என்றார் .

இந்த நிகழ்ச்சி ஒரு சிக்கலான கேள்வியை எழுப்புகிறது . நம்மில் பலர் ஏன் நாம் உறுதியாகப் பற்றிக்கொண்டிருக்கும் இறைப்பற்றைப் பற்றி , விசுவாசத்தைப் பற்றி பிறரோடு பேசத் தயங்குகிறோம் . நாம் நற்செய்தியை நம்புகிறோம் என்றால் நாம் ஏன் அது பற்றிப் பிறரோடு பேசுவதில்லை . நாம் பெறக்கூடிய கொடைகளிலேயே மிகப் பெரிய கொடை இயேசு என்ற நம் இதய வேந்தர் என்றால் அவர்மீது நாம் கொண்டிருக்கும் பக்தியை ஏன் பிறருக்கு அறிமுகம் செய்யத் தயக்கம் காட்டுகிறோம் .

இன்றைய நற்செய்திக்கு வருவோம் . குறிப்பாக தூய யோவான் அவருடைய நற்செய்தியில் மூன்று முறை அந்திரேயாவைப்பற்றிப் பேசுகிறார் . ஒவ்வொருமுறையும் அந்திரேயா யாரையாவது இயேசுவிடம் அழைத்து வருகிறார் .

இன்றைய நற்செய்தியில் தம் சகோதரர் பேதுருவை அவர் இயேசுவிடம் அழைத்துவருகிறார் . முடிவாக இயேசு பேதுரு என்னும் பாறையின்மீது தமது திருச்சபையைக் கட்டி எழுப்புகிறார் .

சில காலம் தாழ்த்தி அந்திரேயா ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் வைத்திருக்கும் ஒரு சிறுவனை இயேசுவிடம் கூட்டி வருகிறார் . யோவான் 6,8. இயேசு அந்த அப்பங்களைப் பலுகச் செய்து பல ஆயிரம் பேருக்கு உணவளிக்கிறார் .

இறுதியாக அந்திரேயா சில கிரேக்க மக்களை இயேசுவிடம் கூட்டி வருகிறார் . யோவான் 12, 20 - 22. அந்தச் சந்தர்ப்பத்தில் வந்த கிரேக்கர்களுக்கு இயேசு நல்ல அறிவுரை வழங்கினார் . நாம் மீண்டும் முந்தைய கேள்வியை எழுப்புவோம் . நாம் இயேசுவின்மீது பக்தி என்னும் காதலில் மூழ்கியிருந்தால் அவரை ஊருக்கும் உலகுக்கும் அறிமுகம் செய்ய என்ன தயக்கம் .

நாம் சில சமயம் கேட்கும் ஒரு பதில் என்னவென்றால் மற்றவர்கள் அதை இரசனையோடு கேட்பதில்லை என்பதாகும் . நாம் தொடக்கத்தில் கேட்ட நிகழ்ச்சியில் மருத்துவமனைக்கு வந்த முதியவர் இயேசுவின் மீது பற்றுக்கொள்ள விருப்பம் இல்லாது இருந்தவர் என எண்ணியிருக்கலாம் . அல்லது அவருக்கு இயேசுவின்மீது விருப்பம் இருந்திருந்தால் அவரே இயேசுவைப்பற்றிக் கேட்டுத் தெரிந்திருக்கலாமே என எண்ணலாம் .

சுய முன்னேற்றத்துக்கான வழிகளைப் பற்றி நாம் சில நூல்களில் படித்துத் தெரிந்து கொள்கிறோம் . பிறரோடு உறவை வளர்ப்பது எப்படி – நன்கு பழகுவது எப்படி – அன்பு செய்வது எப்படி எனத் தெரிந்து கொள்கிறோம் . இப்படிப்பட்ட நூல்களில் நாம் பிறரோடு நமக்குப் பிடித்தமான காரியங்கள் பற்றிப் பேசவேண்டும் எனக் கூறப்படுகிறது . இயேசுவின் மீது நாம் பற்றுக்கொண்டிருந்தால் , அவரே நம் வாழ்வாய் , வழியாய் , ஒளியாய் இருக்கிறார் என்றால் , அவரே நம்மைப் படைத்துக் காத்து மீட்பவர் என்றால் அவரில் வாழ்கிறோம் , இருக்கிறோம் , இயங்குகிறோம் என்றால் அவரை விட மிக முக்கியமானது வாழ்வில் என்னவாக இருக்க முடியும் .



இது ஒரு முக்கியமான திட்டத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது . நாம் நம்முடைய இறைப்பற்றைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் . இது முக்கியமானது அல்ல என எண்ணுகின்றவர்கள் மருத்துவ மனைக்கு வந்த முதியவர் சொன்னதை நினைவில் வையுங்கள் . அவர் சொன்னார் – யாருமே என்னிடம் இயேசுவைப்பற்றிப் பேசவில்லை என்று. யாருமே பேசாதிருந்திருந்தால் , அந்த செவிலிப்பெண்ணும் பேசாதிருந்திருந்தால் , அவர் இயேசுவின் மீது பற்றுக்கொள்ளாமலேயே இறந்திருப்பார் .

எவர் ஒருவர் தாம் பெற்ற பேரின்பமாகிய இயேசுவைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளத் தயங்குகிறாரோ அவர் இன்றைய நற்செய்தியை நினைவில் கொள்ளவேண்டும் .

அந்திரேயா தமது விசுவாசத்தைப் பகிர்ந்து கொள்ளாதிருந்திருந்தால் பேதுரு திருச்சபையின் பாறையாக இருந்திருக்கமாட்டார் . உரோமையில் உலகப் புகழ்பெற்ற தூய பேதுரு பசிலிக்கா பக்தர்களையும் பார்வையாளர்களையும் பரவசமடையச் செய்யும் பேராலயமாக , அருள் பாய்ந்து வரும் வாய்க்காலாக, அகிலமெல்லாம் படைத்த ஆண்டவனே குடியிருக்கும் கோவிலாக இருந்திருக்காது .

அந்திரேயா ஐந்து அப்பங்களை வைத்திருந்த சிறுவனை இயேசுவிடம் கூட்டி வரவில்லை என்றால் ஐயாயிரம் பேருக்கு இயேசு உணவு வழங்கிய நிகழ்ச்சியை ஒருவேளை நாம் கேட்டிருக்கமுடியாது . வந்திருந்தோர் பசியோடும் களைப்போடும் சென்றிருப்பார்கள்.



முடிவாக, இன்றைய நற்செய்தி நாம் சரியாகச் சிந்தித்து நாம் ஏன் இயேசுவை பிறருக்கு அறிமுகம் செய்யத் தயங்குகிறோம் என்பதை ஆராய்ந்து , காரணம் கண்டு நலமான முடிவுக்கு வர நம்மை அழைக்கிறது .

நற்செய்தியை நாம் நம்புகின்றோம் என்றால் , உலகிலேயே விலைமதிப்பில்லாத அரும் பொருள் இயேசுக்கிறிஸ்துதான் என்றால் ,அதை நாம் ஏன் நம் குடும்பத்திலும் , நண்பர்களிடத்திலும் , நமக்கு அறிமுகமானவர்களிடத்திலும் , இயேசுவைத் தேடிக்கொண்டிருப்பவர்களிடத்திலும், அறிமுகம் செய்யத் தயக்கம் காட்ட வேண்டும் .

இந்த முக்கியமான கேள்வியை இன்றைய நற்செய்தி நமக்கு முன் வைக்கிறது . இந்தக் கேள்விக்கு நாமே தான் பதில் கூறவேண்டும் . ஆனால் கண்டிப்பாக விடை அளித்தே ஆகவேண்டும் . நாம் நம்பும் இயேசுவைப் பற்றி அறிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் . நம்முடைய பக்தியைப் பற்றிப் பேசுவது முக்கியமானதாகும் , மிக மிக முக்கியமானதாகும் .

உலக வரலாற்றையே தம் பிறப்பால் கிறிஸ்துவுக்கு முன்னர் , கிறிஸ்துவுக்குப் பின்னர் எனப் பிரிப்பதற்குக் காரணமானவர் , உலகை உருவாக்கிக் காத்து ஆண்டு வருபவர் , இறந்தோரை உயிர்ப்பித்தவர் , இறந்தபின் உயிர்த்தெழுந்தவர் , என எத்தனை , எத்தனையோ சான்றுகள் அவரே சக்தியும் ஜீவனுமாக இருக்கிறார் என இடியோசையிட்டு நம் காதுகளில் முழக்கமிட்டும் நற்செய்தி துளைக்காக காதுகளும் , அவர் புகழ்பாடாத நாவும் , அவரைச் சிந்திக்காத தலையும் பிழைப்பது எப்படி .



இறைவா இவ்வுலகில் தேவையுறுவோர்க்கு எங்கள் கரங்கள் வழியாகவே நீர் உதவுகிறீர் என்பதையும் , தனிமையில் வாடுவோரை எங்கள் இதயங்களாலேயே அணைக்கிறீர் என்பதையும் , நீர் ஏன் பிறந்தீர் , துன்புற்றீர் , மரித்தீர் என்பதை அறிவிக்க எங்கள் குரலல்லாது உமக்கு வேறு குரல் இல்லை என்பதையும் அறிந்திடும் மெய்யறிவைக் கற்றுத்தாரும் . இவ்வுலகில் நாங்களே உம்முடைய கரங்களாக , குரலாக , உமது இதயமாக இருக்கிறோம் என்பதை உணரச் செய்யும் . அவ்வாறு செயல்பட அருள் தாரும் .








All the contents on this site are copyrighted ©.